முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தன்று உயிர்நீத்த உறவுகளுக்கான பிரார்த்தனை, இன்று மதியம் 1 மணியளவில் மட்டக்களப்பு அரசடித்தீவிலுள்ள சக்தி இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த நினைவுப் பிரார்த்தனை நிகழ்வில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்கள் தங்களது உயிர்களை என்ன நோக்கத்திற்காக விதையாக விதைத்தார்களோ, அந்த விதைகள் பெரிய விருட்சமாகி பயன்தரும் காலம் தொலைவில் இல்லை.
மேலும், அந்த உயிர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்யவேண்டிய கடமை எமக்குள்ளது. ஆனால் இந்த அனுதாப அஞ்சலி நிகழ்வைக்கூட எம்மால் சுதந்திரமாக நடாத்த முடியாத சூழ்நிலையில் நாம் தற்போதும் இருந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அரசு கூறுகின்ற சமாதானம் எங்கே, சிவில் நிருவாகம் எங்கே, மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டபோதும் தமிழ் மக்கள் இன்னும் அச்ச சூழலில்தான் வாழ்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உரையாற்றும்போது,
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு மூன்றாவதாண்டு நினைவஞ்சலியை நாம் இன்று செலுத்துகின்றோம். முதலாவது நினைவஞ்சலி 2010 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் இரண்டாவது நினைவஞ்சலி கடந்த வருடம் களுவாஞ்சிகுடி சக்தி இல்லத்திலும் இடம்பெற்றன.
வடக்கு கிழக்கில் இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளை மட்டக்களப்பில்தான் நாங்கள் நடாத்தினோம். நடாத்துகின்றோம். உயிர் நீத்த உறவுகளுக்கு அங்சலி செலுத்துவதற்கும் எமக்கு உரிமை இல்லாமல் இருக்கின்றது.
இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் வர்க்க வேறுபாடின்றி குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியவர்கள், பெண்கள் என சகலரும் கொல்லப்பட்டார்கள்.
போராளிகள் மாத்திரம் அங்கு கொல்லப்படவில்லை. அவர்கள் சிந்திய கண்ணீருக்கும் உதிரத்திற்கும் பலன் கிடைக்க வேண்டுமாக இருந்தால், அவர்களின் ஏக்கம் நிறைவேற வேண்டுமாக இருந்தால், நாம் அவர்கள் இட்டுச்சென்ற பாதையில் சென்று அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire