மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்களை கைதுசெய்யும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியோர் தொடர்பில் விபரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுவதாகவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அவ்வாறு யாரும் கைதுசெய்யப்பட்டிருந்தால் அது தொடர்பில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான வடமுனை மற்றும் ஊத்துச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று விஜயம் செய்த பிரதியமைச்சர் முரளிதரன் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.
அண்மையில் இப்பகுதியை தாக்கிய சூறாவளி காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவே பிரதியமைச்சர் அப்பகுதி விஜயம் செய்திருந்தார்.
அச்சமயம் வடமுனைப்பகுதியில் சிவிலுடையில் படைப்புலனாய்வுத்துறையினரும் பொலிஸாரும் இணைந்து முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தாம் அச்ச நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
“நேற்று காலை திடிரென அப்பகுதிக்கு வந்தவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்கள் தொடர்பிலான விபரங்களை சேகரித்துள்ளதுடன் அவர்களை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் அழைத்துள்ளனர். இது எங்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது”.
“இவ்வளவு நாளும் நாங்கள் எதுவித பிரச்சினைகளும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தோம். ஆனால் இன்று இடம்பெற்றுள்ள சம்பவம் எங்களை அச்ச நிலையில் ஆழ்த்தியுள்ளது” என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
அத்துடன் தங்களின் முழு விபரங்களையும் பெறுவதுடன் தமது கழுத்தில் இலக்க தகடு ஒன்றை தொங்க விட்டு தம்மை புகைப்படம் எடுத்துச் செல்வதாகவும் பொது மக்கள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் சம்பவ இடத்தில் இருந்து கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி லால் செனவிரட்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதியமைச்சர் நிலைமையை விளக்கினார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,
விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தவர்களுக்கான தொழிற் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் அவர்களை ஈடுபடுத்துவதற்காகவே இந்த விபரந்திரட்டல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் கதைக்கப்பட்டுள்ளது. சொந்த விருப்பங்களின் மத்தியிலேயே அவ்வாறான தொழிற்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். யாரும் கைதுசெய்யப்படவோ அல்லது பிடித்துச்சென்று வலுக்கட்டாயமாக பயிற்சிகளை மேற்கொள்ளவோ மாட்டாது. அவ்வாறான சம்பவங்கள் இனியொருபோதும் நடைபெறாது.
இதுதொடர்பில் யாரும் அச்சமோ சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை. இது தொடர்பில் நான் இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடியுள்ளேன். அவர் இவ்வாறான நடவடிக்கைகள் விபரங்களை பெறுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. யாரும் கைது செய்யப்படமாட்டார்கள் என்ற உறுதிமொழியை எனக்கு தந்துள்ளார்.
அவ்வாறு யாரும் கைது செய்யப்பட்டால் நீங்கள் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். அது தொடர்பில் நான் நடவடிக்கையெடுப்பேன் என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire