உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவரும், டெல்லி மேல்-சபை பா.ஜனதா எம்.பி.யுமான தருண் விஜய் தமிழின் மேன்மை குறித்தும், வடஇந்தியப் பள்ளிகளில் தமிழை அறிமுகம் செய்வது பற்றியும் தொடர்ந்து வடமாநிலங்களில் பேசி வருகிறார். அண்மையில் இதற்காக தருண் விஜய்யை தமிழ்நாட்டில் சில தமிழ் அமைப்புகள் சென்னைக்கு வரவழைத்து பெரிய அளவில் பாராட்டு விழாவும் நடத்தின.
இந்த நிலையில், நேற்று டெல்லி மேல்-சபையில் தருண் விஜய் பேசும்போது கூறியதாவது:-
மொழிகள் எப்போதும் இந்திய மக்களின் மனங்களை இணைக்கும் பாலமாக செயல்படவேண்டும். பேதங்களை வளர்க்கும் அரசியலாக மாறக்கூடாது. வடக்கில் உள்ளவர்கள் தென்னிந்திய மொழிகளின் சிறப்பை உணர்ந்து அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். தமிழ் இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழியாகும். உலக அளவில் தன்னுடைய தடங்களைப் பதித்த மொழி தமிழாகும். யுனெஸ்கோ நிறுவனத்தின் நினைவுப் பதிவேட்டில் இந்தியாவின் முதன்மையான மொழியாக தமிழ் மொழி பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் சிறப்பை இந்தியா முழுமைக்கும் உணர்ந்து கொண்டாடவேண்டும்.
வரும் ஆண்டு(2015) முதல் திருவள்ளுவரின் பிறந்த நாளை வடஇந்திய மாநிலங்களின் அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கும் திருவள்ளுவரின் குறளில் உள்ள சிறப்புகளை வடஇந்தியாவின் பள்ளிக்குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையிலும் மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படி கோரிக்கை வைத்துவிட்டு தன்னுடைய பேச்சை திருக்குறளின் முதல் குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ என்ற குறளுடன் முடித்தார், அவர். அவருடைய கோரிக்கையை பாராட்டும் விதமாக மேல்-சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒருசேரக் கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.
ஏ.நவநீதிகிருஷ்ணன், எஸ்.முத்துக்கருப்பன் போன்ற அ.தி.மு.க. எம்.பி.க்களும் கனிமொழி, திருச்சி சிவா ஆகிய தி.மு.க. எம்.பி.க்களும் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், பவன் வர்மா, சமாஜ்வாடி தலைவர் ராம்கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகமது ஹசன், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் ஆகிய எம்.பி.க்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பி ஆதரவு அளித்தனர்.
தருண் விஜய் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொள்வதாக மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். அடுத்த ஆண்டு(2015) முதல் இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என்றும் இதற்கான அரசு ஆணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire