mercredi 19 novembre 2014

தேர்தலில் உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணையும்

அதிகாரப்பூர்வமாக நமது நாடு, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என அறியப்பட்டுள்ளது. இதில் இன்று எஞ்சி இருப்பது இலங்கை என்ற பெயர் மட்டும்தான். ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் ஒழித்துவிட்டு ஒரு முடியரசு இங்கே தோன்றியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்,  இந்நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை மீளமைத்து குடியரசை காப்பாற்றும் தேர்தலாகும். எனவே இந்த தேர்தல் கட்சி, நிறம், இனம், மதம் ஆகிய பேதங்களை கடந்த தேர்தலாக இருக்க வேண்டும். நாட்டை காப்பாற்ற ஒன்று சேரும் இந்த தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி, ஜேவிபி, ஜனநாயக கட்சி, ஹெல உறுமய ஆகிய கட்சிகளுடன் சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரிவும் இடம்பெற வேண்டும். இவற்றுடன் இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் நமது கட்சி உட்பட்ட அனைத்து கட்சிகளும் இடம்பெற வேண்டும். இந்த கூட்டு செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகள் இப்போது நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்து கொள்கிறேன்.

இதன்மூலம் இந்த சர்வாதிகார முடியரசு ஆட்சியை முதலில் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, நிறைவேற்று அதிகாரத்தை  மீண்டும் பாராளுமன்றத்துக்கு வழங்குவோம். அதன்பிறகு  நாம் பொது தேர்தலை தனித்தனி கட்சிகளாக சந்திப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

எங்கு போனாலும் உங்கள் பொது வேட்பாளர் யார் என கேட்கிறார்கள். இதன் காரணம் இந்த அரசாங்கம்தான். இன்று பொது வேட்பாளர் பற்றி எங்களைவிட அரசாங்கம்தான் அதிகம் கலவரமடைந்து பதட்டமடைந்துள்ளது. அதனால்தான் எங்கே உங்கள் பொது வேட்பாளர் என்று எங்களிடம் கேட்கிறார்கள். நேற்று, இன்று, நாளை என நாம் நாள் கடத்துவதாக சொல்கிறார்கள். இது என்ன ? பொது வேட்பாளரின் பெயரை அறிவிப்போம் என்று நாங்கள் எங்கே சொன்னோம்? இது அரசாங்கம் உருவாகியுள்ள கதை. 

நாங்கள் பதட்டப்படவில்லை. நாம் மிகவும் சாவகாசமாக இதை அணுகுகிறோம். அவரசப்படவேண்டிய  தேவை எங்களுக்கு இல்லை. நீங்கள் முதலில் தேர்தல் தொடர்பான மற்றும் நியமனம் தொடர்பான அறிவித்தல்களை அதிகாரபூர்வமாக  அறிவியுங்கள். அதன்பிறகு நாங்கள் எங்கள் பொது வேட்பாளரை அறிவிப்போம். எங்கள் வேட்பாளர் யார் என்பதை பற்றி அறிந்துகொண்டு, அந்த அடிப்படையில் தேர்தலுக்கு போவதா, இல்லையா என்று முடிவெடுக்க அரசு தடுமாறுவது எங்களுக்கு தெரியும். ஆகவே எங்கள் இரகசியம் எங்களுடன் உங்கள் அறிவிப்பு வரும் வரை இருக்கும். அதன்பிறகு நாட்டுக்கு தெரிய வரும்.

நாங்கள் பொது வேட்பாளர் பற்றிய விடயத்தை  விட , பொது மேடை மற்றும் பொது எதிரணி கூட்டணி பற்றிய விடயத்துக்கே முன்னுரிமை கொடுத்து வந்தோம். அது இப்போது பலனளித்துள்ளது. அரசின் பிரதான பங்காளி கட்சியான ஹெல உறுமய, நேற்று நாட்டு தலைவருக்கு பிறந்த நாள் பரிசு வழங்கியுள்ளது.

அந்த பரிசின் மூலம் இன்றைய அரசில் உள்ளவர்கள் மத்தியில் உடை உடுத்தி தன்மானத்துடன் தெருவில் நடக்கும் தகைமை ஹெல உறுமய கட்சிகார்களுக்கு மட்டுமே உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த கட்சியுடன் எனக்கு கடுமையான  முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், இன்று அவர்கள் தாம் ஊழல் பைல்களுக்கு பயப்படுபவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளார்கள் என்பதை கூற நான் தயங்கப்போவதில்லை. ஏனென்றால் ஹெல உறுமய எம்பீக்கள் எவரும் மக்கள் பணத்தை திருடவில்லை. வாக்களித்த மக்களை காட்டிகொடுக்கவில்லை. அரசில் இருப்பதா இல்லையா என அவர்கள், ஒரு கட்சியாக கூட்டாக முடிவு செய்துள்ளார்கள்.

இன்னமும் நிறைய பரிசுகளை வழங்க பலர் வரிசையாக காத்திருக்கின்றார்கள். உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விசுவாசிகளுக்கு இங்கே இடம் தயாராக உள்ளது. இன்று ஒரு முடியரசாக மாறியுள்ள இந்நாட்டை காப்பாற்றி,  இந்நாட்டை மீண்டும் ஒரு குடியரசாக மாற்ற உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகாரர்கள் தயாராக இருக்கின்றார்கள். அவர்களும் பரிசளித்து விட்டு இங்கே வருவார்கள். பொறுத்திருங்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire