இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் பங்குபற்றுதலுடன் இம்முறை இலங்கையில் நடைபெற்று வந்த விசேட கூட்டு இராணுவ பயிற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. ஊவாகுடா ஓயாவிலுள்ள இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ ரெஜிமண்ட் பயிற்சி கல்லூரியில் இம்மாதம் 3ம் திகதி ஆரம்பமான இந்த கூட்டு பயிற்சி கடந்த 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹம்பாந்தோட்டையில் நிறைவுபெற்றது. இரு நாட்டு இராணுவத்தினதும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பொருட்டு “மித்ர சக்தி’ பலமான நட்புறவு என்ற தொனிப் பொருளில் 21 நாட்களாக இடம்பெற்று வந்த இந்த கூட்டுப் பயிற்சியின் இறுதி நாள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஹம்பாந்தோட்டையிலுள்ள மாகம் ருஹுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மத்திய பிராந்திய பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இலங்கை இந்திய இராணுவ உறவு மிகவும் பழைமை வாய்ந்தது. எனினும் இதனை மேலும் பலப்படுத்தி ஒத்துழைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் 2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாவது கூட்டுப் பயிற்சி இந்தியாவில் நடைபெற்றது. அதில் இலங்கையின் 50 இராணுவத்தினரும் இந்தியாவின் இராணுவத்தினர் 70 பேரும் பங்குபற்றினர். இதன் இரண்டாவது கூட்டுப் பயிற்சி இம்முறை இலங்கையில் நடைபெற்றது.
இந்தியாவின் கொமாண்டோ மற்றும் விசேட படைகளைச் சேர்ந்த 5 அதிகாரிகளும் 37 வீரர்களும் அதேபோன்று இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் விசேட படைகளைச் சேர்ந்த 20 அதிகாரிகளும் 168 வீரர்களும் 2 விமானப் படை அதிகாரிகளும் 16 வீரர்களும் கடற்படையைச் சேர்ந்த 2 அதிகாரிகளும் 16 வீரர்களும் இந்த கூட்டு பயிற்சிகளில் பங்கு கொண்டனர்.
இந்த பயிற்சிகளின் போது இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் தத்தமது அனுபவங்களை பரிமாறிக் கொண்டனர். மக்களை மீட்டெடுத்தல், ஊடுருவி தாக்குதல் நடத்தல், கடற்படை மற்றும் விமானப் படைகளின் பங்களிப்புகளுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பயிற்சிகள் இதன் போது வழங்கப்பட்டன.
இறுதி நாள் நிகழ்வின் போது மத்திய பிராந்திய பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, இலங்கை இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த குணரட்னவும் இந்திய இராணுவக் குழுவுக்கு தலைமை தாங்கிய பிரிகேடியர் ஜெனரல் ஜி. சுதாகரும் ஞாபகச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி கெப்டன் பிரகாஷ் கோபால் உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire