எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு மறைமுக அடிப்படையில்ழ ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுயாதீனமான தேர்தல்களுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் பொதுவான அடிப்படையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான தமிழ் வாக்குகள் எதிர்க்கட்சிக்கே கிடைக்கும் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருந்தாலோ அல்லது இல்லாவிட்டாலோ இவ்வாறு ஆதரவு கிடைக்கும் என குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சரியாக சிந்திக்கும் தமிழ் வாக்காளர்கள் பொது வேட்பாளருக்கே ஆதரவளிப்பாளர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கில் சரத் பொன்சேகாவே வெற்றியீட்டியிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு தீர்மானங்களை எடுக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டு சில தினங்களே ஆகின்றது எனவும், எதிர்காலத்தில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire