விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவொரு விமர்சனக் கருத்தையும் வெளிப்படையாக முன்வைப்பதற்கு தமிழ் ஊடகங்கள் முன்வராமை புலிகள் அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதற்கு பிரதான காரணமாக இருந்ததாக தற்போது பல ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். சிலர் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாவிட்டாலும், மறைமுகமாக அவர்களின் மனச்சாட்சியேனும் ஒத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது.
இருந்தும், ஒரு சில ஊடகங்கள் இப்பொழுதும் மக்களை தவறான ஒரு பாதைக்கு வழிநடத்திச் செல்வதிலேயே தங்களை ஈடுபடுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் சில தமிழ் பேரினவாதத்தையும், சிங்கள ஊடகங்கள் சில சிங்கள பேரினவாதத்தையும் ஊக்குவிப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றன.
இந்த ஊடகங்களின் இத்தகைய செயற்பாடு இலங்கையில் சமாதானமும் அரசியல் தீர்வும், நல்லிணக்கமும் ஏற்படுவதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கப்போகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக விடுதலைக்காக போராடிய இயக்கங்கள் விடுதலைப் புலிகள் உட்பட இன்றைக்கு ஆயுதப் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துவிட்டன.
இதில் விடுதலைப் புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்கால் முடிவுகள் ஏற்படும் வரை ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து ஆயுதப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது. ஏனைய தமிழ் இயக்கங்கள் பல அழிக்கப்பட்ட போதிலும், சில இயக்கங்கள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன் அரசியல் வழிமுறைகள் ஊடாகவும் சரியான இலக்குகளை அடையமுடியும் என்று ஆரம்பத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு வழிகாட்டியும் வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்கால் முடிவுகள் நெருங்கியபொழுதுதான் அவர்கள் தங்களது ஆயுதங்களை மௌனிக்கச் செய்வதாக அறிவித்திருந்தார்கள். அதுவரைக்கும் தங்களது ஆயுதப் போராட்டம் சரியானது, ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தங்களது நிச்சயமான இலக்குகளை அடைந்துவிடலாம் என்ற தளராத நம்பிக்கையில் அவர்கள் இருந்தார்கள்.
திம்புவிலிருந்து டோக்கியோ வரை இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளில் சில விட்டுக்கொடுப்புகளுக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைகள் ஊடாக சில இலக்குகளை நகர்த்தி இருந்தால் விடுதலைப் புலிகளின் அழிவு தடுக்கப்பட்டிருக்கும். இதைவிட தமிழர் தரப்பிற்கு கிடைத்த ஒரு பெரிய அரிய சந்தர்ப்பமாகிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தை சரியான முறையில் பயன்படுத்தி இருந்தால் இன்றைக்கு வடக்கு கிழக்கு இணைந்த ஒரு மாகாண ஆட்சி மேம்பாடு உடையதாக திறன் உடையதாக இருந்திருக்கும்.
ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாம் உதறித் தள்ளப்பட்டதுடன் இறுதியாக தங்களது முடிவுகளையும், தாங்களே ஏற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகள் வழிசமைத்து விட்டார்கள். குறிப்பாக அவர்கள் பேச்சுவார்த்தைகளில் சில சந்தர்ப்பங்களில் காட்டிய பிடிவாதங்கள் தொடர்பில் தமிழ் ஊடகங்கள் வெளிப்படையாக விமர்சனங்களை செய்திருந்தால் புலிகள் தங்களது நடவடிக்கைகளில் மாற்றங்களை செய்வதற்கு வழி ஏற்பட்டிருக்கும்.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அரசாங்கத்திற்கும், புலிகளிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற பொழுது சில உடன்பாடுகளை எட்டுவதற்கு நோர்வே அனுசரணையாளர்கள் முன்னிலையில் உடன்பட்டிருந்தார்.
பேச்சுவார்த்தை முடித்து திரும்பிய பொழுது, அந்தப் பேச்சுவார்;த்தையில் கலந்துகொண்ட இன்னொரு தரப்பினர் நேரடியாக பிரபாகரனைச் சந்தித்து அரசாங்கத்திற்கும் தங்களுக்கும் இடையில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளில் அன்ரன் பாலசிங்கம் பல விட்டுக்கொடுப்புகளுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக போட்டுக்கொடுத்தனர்.
இதனை அடுத்து அன்ரன் பாலசிங்கத்துடன் தொடர்புகொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் நீங்கள் கலந்துகொள்ளத் தேவையில்லை ஊடகங்கள் ஏதாவது கேட்டால் உங்களது உடல்நிலை காரணமாக கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது என்று சொல்லுமாறு பணித்தார்.
பிரபாகரனுக்கும், அன்ரன் பாலசிங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு தொடர்பில் தமிழ் ஊடகங்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தனர். இருந்த போதிலும் எந்தவொரு ஊடகமும் இந்த பேச்சுவார்த்தையில் பாலசிங்கம் கலந்து கொள்ளாமை தொடர்பாகவோ அல்லது பேச்சுவார்த்தையில் விட்டுக்கொடுப்புகளை செய்யக்கூடாது என்பது தொடர்பில் பிரபாகரன் பணித்தமை தொடர்பிலும் செய்திகளை வெளியிட முன்வரவில்லை.
அன்ரன் பாலசிங்கம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டால் அது சமாதான முயற்சிகளை முன்னகர்த்த வழி ஏற்பட்டுவிடும். அல்லது சில உடன்பாடுகளுக்கு ஒத்துக்கொண்டு, நாளை அந்த உடன்பாடுகளை மீறி நடந்தால் சர்வதேசம் தங்கள் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்திவிடும் என்ற அச்சம் புலிகளுக்கு ஏற்பட்டதாலேயே பாலசிங்கத்திற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊடகம் அக்குவேறு, ஆணிவேறாக அனைத்தையும் உடனுக்குடன் பாலசிங்கத்தின் ஊடாக தெரிந்து வைத்திருந்த போதிலும் தங்களது ஊடகத்தில் இந்த விடயம் தொடர்பில் ஒரு சிறிய செய்தியைக் கூட வெளியிடவில்லை. மாறாக பாலசிங்கத்தின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கத்திற்குப் பதிலாக சு.ப.தமிழ்ச்செல்வன் கலந்து கொள்வார் என இச் செய்திகளை முதன்மைப்படுத்தி வெளியிட்டு வந்ததுடன் மக்களுக்கு பிழையான தகவல்களையும், வழங்கினார்கள்.
உண்மையில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பேச்சுவார்த்தைகளில் விட்டுக்கொடுப்புகளுடன் நடக்கவில்லை என்று அரச தரப்பின் பேச்சுவார்த்தைக் குழுவில் கலந்து கொண்ட முக்கிய அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா அன்றைய நாட்களில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி வந்தார். ஆனால் அமைச்சரின் இந்தக் கருத்தை வெளிப்படையாக நிராகரித்த தமிழ் ஊடகங்கள் அவர் தமிழ்ச் செல்வன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை விரும்பாமல் பேச்சுவார்த்தையைக் குழப்பும் நோக்கில் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என எழுதின.
அன்றைக்கு தமிழ் ஊடகங்கள் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தால் நிலைமை வேறு விதமாக சில வேளைகளில் மாறி இருக்கும். ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்ற போதிலும் தமிழ் ஊடகங்கள் புலிகள் தொடர்பில் பிழையான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததுடன் அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயற்பாட்டையும் சரியென்று நியாயப்படுத்தி வந்தமையும் அவர்களின் அழிவுக்கு வித்திட்டது.
யாழ்ப்பாணத்தில் அன்றைய நாட்களில் புதிதாக வெளிவரத்தொடங்கிய வலம்புரிப் பத்திரிகை தங்களது வியாபார நோக்கத்திற்கு தடையாக இருந்துவிடும் என்ற கருதிய இன்னொரு பத்திரிகை அன்ரன் பாலசிங்கத்தின் செல்வாக்கின் மூலம் அப்பத்திரிகையை தடை செய்வதற்கு பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்ததுடன் அப்பத்திரிகையை ஒரு கட்சிப் பத்திரிகை எனவும் விமர்சனம் செய்து வந்தது. ஆனால் இன்றைக்கு அந்தப் பத்திரிகைதான் ஒரு கட்சிப் பத்திரிகையாகவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செய்திகளை முதன்மைப்படுத்தும் பத்திரிகையாகவும் இருந்து செயற்பட்டு வருகின்றது. இவ்வாறு பத்திரிகைகள் தங்களுக்கிடையில் மோதிக்கொண்டு, விடுதலைப் புலிகளையும் அழிக்கும் செயற்பாட்டில் தங்களது செய்திகள் ஊடாக வழிசமைத்துக் கொடுத்தனர்.
கிளிநொச்சி வரையும் இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்தபொழுது புலிகளை பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துமாறு எந்தவொரு ஊடகமும் வலியுறுத்தவி;;ல்லை. மாறாக திட்டம் இருக்கிறது பெரிய அழிவை அரசாங்கம் சந்திக்கப்போகிறது என்றே செய்திகளை வெளியிட்டு வந்தன. இதன் முடிவு எதுவரை சென்றது என்பதையும், தமிழ் ஊடகங்கள் எவ்வாறு விடுதலைப் புலிகளை அழித்தன என்பதையும் சுருக்கமாக பார்த்து நிறைவு செய்வது பொருத்தமானதாக இருக்கும்.
வே.அர்ச்சுணன்
(தொடரும்..)
(தொடரும்..)
Aucun commentaire:
Enregistrer un commentaire