நாட்டுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லையா? முதலில் வரலாற்றை படித்துப் பாருங்கள் என்று நரேந்திரமோடிக்கு சோனியாகாந்தி பதிலடி கொடுத்தார்.பீகார் மாநிலம் முசாபர்பூரில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- நரேந்திரமோடி தற்போது பரிசுத்தமானவர் போல பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சி இதுவரை நாட்டுக்கு ஏதும் செய்யாதது போலவும் பேசுகிறார். அவர் மீண்டும் வரலாற்றை படித்துப் பார்த்தால், அவருக்கு உண்மை புரியும். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, கடந்த 67 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, தேசத்தின் ஒருமைப்பாட்டுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
ஊழலை கட்டுப்படுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சியை குறை சொல்லும் அவர் (மோடி), காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த லோக் அயுக்தா நீதிமன்றத்தை புறக்கணிப்பது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அவரது ஆட்சியில் இடம்பெற்றுள்ள மந்திரிகள் ஊழலில் திளைப்பதை அந்த மாநில மக்கள் அறிவார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் லோக் அயுக்தா நீதிபதி இடம் காலியாகவே உள்ளது.
பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை நாட்டு மக்களுக்காக தயாரிக்கப்படவில்லை. ஓட்டுக்காக தயார் செய்யப்பட்டது. அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள லோக் ஜனசக்தி கட்சியினரும் அப்படித்தான். அவர்களும் அடிக்கடி முகத்தை மாற்றிக் கொள்பவர்கள்தான். தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடும் கட்சி காங்கிரஸ் ஆகும். அதே வேளையில் மக்களை மதம், இனத்தால் பிரித்தாளும் சூழ்ச்சி உடையது பா.ஜனதா கட்சி. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு சோனியாகாந்தி கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire