16 புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விதித்திருந்த தடையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த தடை செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது, அவர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதே நடைமுறையை ஈரானும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்தியாவும் இலங்கை அரசாங்கத்தின் தடையை தமது நாட்டில் நடைமுறைப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும் முன்னதாக கனடா இந்த தடையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது. உலகெங்கிலும் இயங்கிவரும் 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை தீவிரவாத முத்திரை குத்தி இலங்கை அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளுக்கு கடந்த மார்ச் மாதம் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. இது தொடர்பாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் நிஷா பிஸ்வாலை வாஷிங்டனில் சந்தித்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் வேதனை தெரிவித்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒருவரை இந்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதையும் நிஷா பிஸ்வாலிடம் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire