jeudi 22 mai 2014

வடக்கில் உள்ள தமிழ் மக்களின் உடல்களில் ஓடுவது இன்று இராணுவத்தினரின் இரத்தம்

வடக்கில் உள்ள தமிழ் மக்களின் உடல்களில் இன்று இராணுவத்தினரின் இரத்தம் ஓடுவது பெருமைக்குரிய விடயமாகும் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி ஊடக மையத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்


இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
வடக்கில் நடைபெறும் இரத்த தான நிகழ்வுகளை இராணுவம் குழப்புவதாக சில ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஆனால் வடக்கில் தமிழ் மக்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக இராணுவத்தினரே இரத்த தான நிகழ்வுகளை அடிக்கடி ஏற்பாடு செய்துவருகின்றனர்.கடந்த இரண்டு வருட காலத்தில் தமிழ் மக்களுக்காக வடக்கில் இராணுவத்தினர் 10 ஆயிரம் பொயின்ட் இரத்தம் வழங்கியுள்ளனர். கடற்படையினர் 2 ஆயிரம் பொயின்ட் இரத்தத்தையும் விமானப் படையினர் 1200 பொயின்ட் இரத்தத்தையும் வழங்கியுள்ளனர். அவசரத் தேவைக்காக மிகவும் அரிய வகை இரத்தத்தையும் உடனடியாக வழங்கக்கூடிய வசதிகள் இராணுவத்தினரிடம் உள்ளன. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு படை வீரரினதும் இரத்தம் தொடர்பான தகவல்கள் கணனியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இப்படியாக பாதுகாப்பு படையினர் வழங்கிய இரத்தம் வடக்கில் நோயாளர்களுக்கும் விபத்துக்குள்ளானவர்களுக்கும் ஏற்றப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அந்த வகையில், வடக்கில் உள்ள தமிழ் மக்களின் உடல்களில் இன்று இராணுவத்தினரின் இரத்தம் ஓடுவது பெருமைக்குரிய விடயமாகும் என பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire