இலங்கையில், மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக கூறியுள்ளார்.மனித உரிமை மீறல்கள்இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது சிங்கள ராணுவம் பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின.
இதைத்தொடர்ந்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணைய தலைவர் நவி பிள்ளை இலங்கையில் விசாரணை நடத்தினார். அப்போது சிங்கள ராணுவத்தின் போர்க்குற்ற நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. எனவே இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்தநிலையில் இலங்கையில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த மாதம் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின்போது, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன. எனினும் 24 நாடுகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும் இலங்கையில் சர்வதேச நாடுகளின் விசாரணையை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்களே விசாரணை நடத்துவோம் என்றும் இலங்கை அரசு கூறிவருகிறது.
ராஜபக்சே கெஞ்சல்
இந்தநிலையில் ஜப்பான் வெளியுறவுத்துறை துணை மந்திரி செய்ஜி ஹிகாரா நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது அவரிடம், ‘இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஒருபோதும் ஏற்கமாட்டோம். அதைத்தவிர ஐ.நா. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள மற்ற அம்சங்களை நிறைவேற்ற தயாராக உள்ளோம்’ என அதிபர் ராஜபக்சே கூறினார். மேலும் இந்த உண்மையை மற்ற நாடுகளுக்கு தயவுசெய்து கூறுமாறும், செய்ஜி ஹிகாராவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து பின்னர் கூறிய ஜப்பான் மந்திரி செய்ஜி ஹிகாரா, ‘ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தால் இலங்கைக்கு எந்த நன்மையும் இல்லை. எனவேதான் நாங்கள் அந்த தீர்மானத்தை புறக்கணித்தோம். சர்வதேச நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்த ஒருதலைப்பட்சமான அறிக்கையை நாங்கள் ஏற்கமாட்டோம். இலங்கை தனது பிரச்சினைகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக தீர்வு காணும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’ என்றார்.
இலங்கை அமைப்பு எதிர்ப்பு
இதற்கிடையே, மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை மற்றும் அதிகாரிகளை இலங்கையில் அனுமதிக்கக்கூடாது என அந்நாட்டு தேசிய அமைப்பு ஒன்று கூறியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘ஐ.நா. அதிகாரிகளை ஒருபோதும் இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது. இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? என அரசை நாங்கள் கேட்டுள்ளோம்’ என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire