dimanche 18 mai 2014

அமெரிக்கா வருமாறு அழைப்பு மோடிக்கு ஒபாமா

வாஷிங்டன்: நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள, நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, நாட்டின் அடுத்த பிரதமராக, வரும், 21ம் தேதி, மோடி பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நரேந்திர மோடியை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பேசிய, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பா.ஜ., கட்சியும், அவரும் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமராக பதவியேற்றதும், இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்த, அமெரிக்கா வர வேண்டும் என்றும், மோடிக்கு அழைப்பு விடுத்தார். இத்தகவலை, வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
அமெரிக்க வெளியுறவுத் துறை தகவல் தொடர்பாளர், ஜென் பிசாகி கூறுகையில், ''அமெரிக்காவுக்கு மோடி வரும் தேதியை, இரு நாட்டு நிர்வாகமும் கூட்டாக பேசி முடிவு செய்யும். இந்திய பிரதமர் அமெரிக்காவுக்கு வருவதை வரவேற்போம். ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில், அமெரிக்காவின், 'ஏ-1' விசா பெற மோடி தகுதியானவர்,'' என்றார். கடந்த, 2002ல், குஜராத் மாநிலத்தில் கலவரங்கள் நிகழ்ந்தன. அப்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனால், 2005ல், மோடிக்கு விசா வழங்க, அமெரிக்க நிர்வாகம் மறுத்து விட்டது. அமெரிக்காவின், அந்த நிலையில், இதுவரையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடியை தொடர்பு கொண்டு பேசியதும், அவருக்கு வாழ்த்து தெரிவித்ததும், அமெரிக்காவுக்கு வரும்படி அழைப்பு விடுத்ததும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஜான் கெரியும், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசும், மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகின் இரு பெரிய ஜனநாயக நாடுகளான, இந்தியா - அமெரிக்கா இடையோன உறவு, மேலும் வலுப்பட இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி, அமெரிக்க எம்.பி.,க்களும், அமெரிக்கா வாழ் இந்தியர்களும், மோடிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
Click Here

Aucun commentaire:

Enregistrer un commentaire