இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண் வேலைக்கு செல்லும் பெண்கள் கருத்தரித்த நிலையிலும் குழந்தையுடனும் நாடு திரும்புவது அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் கூறுகின்றது.
கடந்த இரு வருட காலப்பகுதியில், கருவுற்ற நிலையிலும் குழந்தையுடனும் சுமார் 300 பெண்கள் வரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தாலும் சட்டப் பிரச்சினை காரணமாக அழைத்து வர முடியாதவர்களும் அதிகம் இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியத்தின் துணை பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனிய கூறுகின்றார்.
இந்தப் பெண்களை பொறுத்தவரை கணவன் மனைவியாக சென்று கர்ப்பமுற்றவர்களும் அதில் இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. கூடுதலானோர் தமது தனிப்பட்ட நடத்தை காரணமாகவே கர்ப்பமடைந்தள்ளார்கள்.
''சில சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்தாரம் என்று அவர்கள் சொன்னாலும் சட்ட ரீதியான விசாரணைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை போன்ற விஞ்ஞான ரீதியான சோதனைகளின் போது, விருப்பத்துடன் நடந்துகொண்டதாக அங்கு கூறுவார்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இருந்தாலும் இங்கு அது பற்றிய தகவல்களை வெளியிட அவர்கள் விரும்புவதாக இல்லை'' என்றும் ரந்தெனிய தெரிவிக்கின்றார்.
நாட்டை விட்டு புறப்பட முன்பு இது தொடர்பிலான அறிவுத்தல்கள் பணியகத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் சிலர் பிரச்சினையில் சிக்கிக்கொள்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
கணவன் இன்றி கருத்தரிப்பது மத்தியகிழக்கு நாடுகளில் கடுமையான தண்டணைக்குரிய குற்றமென்பதால்தான் கூடுதல் பணம் செலவு செய்து இலங்கைக்கு அழைத்த வரவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் பணியகத்தினால் பராமரிக்கப்பட்டு, பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு, குழந்தை சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடும்பத்தில் அவர்கள் இணைக்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire