samedi 10 mai 2014

முதுநிலை மருத்துவ மாணவி சரிதா குத்திக்கொலை


திப்ருகார்,
அசாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி குத்திக்கொலை செய்யப்பட்டார். கற்பழிப்பு முயற்சியில் வார்டு உதவியாளர் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவி
அசாம் மாநிலம், திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் (எம்.டி. மகளிர் நலம் மற்றும் மகப்பேறு) முதல் ஆண்டு படித்து வந்தவர் டாக்டர் சரிதா. இவர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ஆஸ்பத்திரியில், தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று  இரவுப்பணி பார்த்தார். அதிகாலை 5.30 மணி வரையில் அவர் பணியில் இருந்தார்.
ஆனால் காலை 8 மணிக்கு டாக்டர்கள் அறைக்கு சென்ற நர்சுகள், டாக்டர் சரிதா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அவரது கழுத்தில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிற கத்தி அப்படியே சிக்கியும் இருந்தது. இது தொடர்பாக உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
வார்டு உதவியாளர் கைது
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில், வார்டு உதவியாளர் கிரு மெக் மற்றும் 4 பேரை பிடித்து சென்று துருவித்துருவி விசாரித்தனர். இதில் டாக்டர் சரிதாவை கத்தியால் குத்தி கொலை செய்ததை வார்டு உதவியாளர் கிரு மெக், ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி இளநிலை டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பலாத்கார முயற்சியில் கொலை
கைது செய்யப்பட்டுள்ள வார்டு உதவியாளர் கிரு மெக், அந்தப் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டிருக்கலாம், அவர் எதிர்ப்பு தெரிவித்து போராடியதால் ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தி கொலை செய்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட டாக்டர் சரிதா, இதே கல்லூரியில்தான் எம்.பி.பி.எஸ்., படித்து தேறினார், கடந்த ஜூலை மாதம் 7–ந்தேதிதான் தன்னோடு பணிபுரியும் ஒரு டாக்டரை அவர் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire