அன்புள்ள தம்பி சேனாதிராஜா,அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி பேசுவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் எனக்கு மிக்க கவலையை தருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக உமது விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் விட்டமைக்கு ஒரே ஒரு காரணம் உங்கள் கூட்டு இனப்பிரச்சினை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு என் தலையீடு முட்டுக்கட்டையாக அமையக்கூடாது என்பதற்காகவே. அன்றேல் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மறுப்பு கூற முடியும். என்னைப் பொறுத்த வரையில் உங்களது செயற்பாடுகள் எதுவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவையே. எதுவித கருத்தும் வெளியிடாது பொறுத்திருந்தேன். எது எப்படியானாலும் இனி எதையும் பொறுக்க நான் தயாரில்லை. உம்மைப் போன்றவர்களின் செயற்பாட்டால் துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கின்றேன். உண்மைகளை மறைக்க முடியாது. அவை வெளிவந்தால் தான் மக்கள் மத்தியில் தெளிவு ஏற்படும். ஓர் ஆயுதக்குழு பற்றிய என் கருத்துக்கள், உங்களின் தந்திரத்தால் உங்களுக்கே சாதகமாக அமைந்தது. உங்களுக்கு அதிஸ்டமாகவும் அமைந்தது. விளைவு எம் மக்களுக்கு என் சேவை கிட்டாமல் போனதே.
நீங்கள்
என்னைப் பற்றி நன்றி அறிதலுடன் சிந்திக்கத் தவறிய பல விடயங்களில் சிலவற்றையேனும் ஞாபகமூட்ட வேண்டுமென என் உள்ளம் குமுறுகிறது. ஆனால் என் பெருந்தன்மை அதைத் தடுக்கிறது. உங்களுக்கு 06.11.2003 தேதியிட்டு எழுதிய கடிதம் கையிலிருந்தால் ஒரு தடவை அதைப் படியுங்கள். அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் பெரும் அரசியல் தலைவர். இனத்துக்காகத் தன் உயிரைப் பலி கொடுத்தவர். இன்று வரை என்னால் அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை. ஆனால் அவர் அமரத்துவம் அடைந்த ப+த உடலின் சாம்பல் சூடு ஆற முன்பு அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியையும் உமக்கே தர வேண்டுமென நீர் கேட்டது ஞாபகம் இருக்கா? விக்கிரமாதித்தன் கதையில் வரும் சம்பவம் போல் இவ்வளவு தைரியம் உமக்கு எப்படி வந்தது என நாம் ஆச்சரியப்பட்டோம். அக்காலத்தில் நீர் கட்சியின் ஓர் ஊழியனாகவே இருந்தீர்.
தற்போது உம்முடன் செயற்படுபவர்கள் பலருக்கு என்னைப் பற்றித் தெரியாது.
தெரிந்திருந்தால், என்னைப் பற்றி விமர்சிக்கும் உமது நண்பர்கள், சின்னச்சின்ன தம்பிமார்களுக்கும் அதற்குரிய தகுதி இல்லை என்பதை உணர்வர். எனது அரசியல் அவர்களது, உமது வயதிலும் பார்க்கக் கூடியதாக இருக்கும் என நான் நம்புகிறேன். பொய், புரட்டு, களவு, சதி, ஏமாற்று, கழுத்தறுப்பு, முதுகில் குத்துவது, இலஞ்சம் ஆகியவற்றுக்கு நான் அப்பாற்பட்டவன். நீதியாகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் அரசியலில் தீவிரமாக 53 ஆண்டுகளும், அதற்கப்பால் 7 ஆண்டுகளும் மொத்தமாக 60 ஆண்டு அனுபவம் உள்ளவன் நான். என் சேவை எம் மக்களுக்கு இல்லாமற் செய்த பெருமை உம்முடையதே. பொய் மூட்டைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் மக்கள் மத்தியில் என்னை ஓர் துரோகியாகக் காட்டின. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். அன்று நான் சொன்னவை எவ்வளவு நியாயமாக இருந்தாலும் என்னை திட்டித் தீர்த்தீர்கள். இன்று உங்களுக்குள்ளேயே குளம்புகிறீர்கள். இவற்றை மக்களுக்கு எடுத்து விளம்ப மாட்டீர்களா? அண்மையில் கூட ஒரு பிஞ்சு, உமது வாரிசு, விளாசித் தள்ளுகிறார் என்னைப் பற்றி. கொஞ்சம் அவருக்கு சொல்லக் கூடாதா? உமது முன்னேற்றத்துக்கு நான் என்றும் முட்டுக் கட்டை போட்டவன் அல்ல. உமக்காக எத்தனை விட்டுக் கொடுப்புக்களைச் செய்துள்ளேன் என்பதை எனது அரசியல் வாழ்விலிருந்து நீர் பட்டுணர்ந்திருப்பீர்.
தமிழர் ஐக்கிய முன்னணி உருவாகியது, தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தே. இருசாராரும் சமமாக பதவிகளைப் பகிர்ந்து கொண்டோம். நானும் நண்பன் ஆலாலசுந்தரமும் பிரச்சார செயலர்கள். அமிர்தலிங்கம், சிவா ஆகிய இருவரும் செயலாளர்கள். கதிரவேற்பிள்ளை, திருநாவுக்கரசு பின்னர் தருமர் தனாதிகாரிகள் த.வி.கூ உருவாகிய போது நீர் தடுப்புக் காவிலில் இருந்தீர். நீர் தமிழரசு கட்சிக்கு முறை தவறி உயிர் கொடுக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி தான் செயற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் உண்மையை மறைத்து, ஸ்தாபகராலேயே மூடி வைக்கப்பட்ட தமிழரசுக் கட்சியை, அவர் 1977 இல் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், முறையற்ற விதத்தில் புத்துயிர் கொடுத்து மக்களை தப்பான வழியில் கொண்டு சென்றது யார்? 1977 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை 26 ஆண்டுகள், தமிழ் அரசுக் கட்சி இயங்கியதா? எந்த ஆண்டு நடைபெற்ற மகாநாட்டில் நீங்கள் செயலாளராக தெரிவானீர்கள்? முற்று முழுதாக தந்தை செல்வாவை ஏன் அவமதிக்கின்றீர்கள். இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாகக் கூறி மக்களையும் வெளிநாட்டுத் தூதுவர்களையும் ஏமாற்றுகிறீர்கள்.
தந்தை செல்வாவால் 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அவரின் இறுதி மூச்சு இருக்கும் வரை மட்டுமன்றி, தொடர்ந்து இன்று வரை, அதாவது 40 ஆண்டுகளுக்கு மேல் இயங்குவது தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். ஆனால் தமிழரசுக் கட்சியோ, தந்தைசெல்வாவின் மரணத்தின் பின், அதாவது 1977க்கு பின்னர் வெறும் செயலாளர் பதவியை எடுப்பதற்காக, அதற்கு 2004ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 25 ஆண்டுகளில் யார் யார் எவ்வெப்போது எந்தெந்தப் பதவியை வகித்தனர் என்பதைக் கூற முடியுமா?
முழுப் ப+சணிக்காயைச் சோற்றுக்குள்ளே புதைப்பது போல் அண்மையில் பின்வருமாறு கூறியுள்ளீர்கள். “ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நாங்கள் அமைத்திருந்த போது அதில் அங்கம் வகித்த ஓர் கட்சியினால் உயர் நீதிமன்றம் வரை சென்று தேர்தல்களில் சின்னம் கட்சி என்பன முடக்கப்பட்டிருந்தன” என்று. இது உண்மை இல்லையே. செய்யாத ஒரு குற்றத்திற்குப் பொய்யாக என்மீது ஓர் நம்பிக்கை இல்லாத தீர்மானம், புலிகளின் கட்டளைக்கமைய, கொண்டு வந்ததும் நான் கலந்து கொள்ள முடியாத ஓர் இடத்தில், அம்பாறையில் தலைவர் என்ற முறையில் என் அனுமதி பெறாமல், பொதுச்சபை கூட்டம் ஒழுங்கு செய்ததை ஆட்சேபித்து அதன் காரணமாகவே கோட்டுக்கு செல்ல வேண்டிவந்ததென கூற ஏன் பயப்படுகிறீர்கள்?
“இதே நிலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டால்” என்று பயப்படுகிறீர்களாமே இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா? தமிழர் ஐக்கிய முன்னணியோ, தமிழர் விடுதலை கூட்டணியோ உருவாகும் போது அதை உருவாக்கியவர்களில் ஒருவன் நான் அல்லவா நீர் அதில் சம்பந்தப்படவே இல்லையே. கடந்த 10ஆண்டுகளாக உமது விடயத்தில் நான் கடைப்பிடித்த மௌனம் உம்மைப்பெரும் உத்தமராகவும் கொள்கைப் பற்றுள்ளவனாகவும் உலகுக்கு எடுத்துக் காட்டுவதுகூட எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை மட்டம் தட்டி உலகுக்குக்காட்டி குறுக்கு வழியில் நீர் உயர முனைவதே எனக்கு வேதனை அழிக்கிறது. உமது திறமையாலும் தியாகத்தாலும் நீர் உயர்வதை நான் மனதார பாராட்டுவேன்.
“இதே நிலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டால்” என்று பயப்படுகிறீர்களாமே இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா? தமிழர் ஐக்கிய முன்னணியோ, தமிழர் விடுதலை கூட்டணியோ உருவாகும் போது அதை உருவாக்கியவர்களில் ஒருவன் நான் அல்லவா நீர் அதில் சம்பந்தப்படவே இல்லையே. கடந்த 10ஆண்டுகளாக உமது விடயத்தில் நான் கடைப்பிடித்த மௌனம் உம்மைப்பெரும் உத்தமராகவும் கொள்கைப் பற்றுள்ளவனாகவும் உலகுக்கு எடுத்துக் காட்டுவதுகூட எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை மட்டம் தட்டி உலகுக்குக்காட்டி குறுக்கு வழியில் நீர் உயர முனைவதே எனக்கு வேதனை அழிக்கிறது. உமது திறமையாலும் தியாகத்தாலும் நீர் உயர்வதை நான் மனதார பாராட்டுவேன்.
தனது கடந்த காலத்தையும் ஏறிவந்த படிகளையும் ஒருவன் மறந்து செயற்படுவானேயானால் அவன் மானிடப்பிறவி எடுத்ததில் அர்த்தமில்லை. நான் கடந்தகாலத்தையோ ஏறிவந்த படிகளையோ என்றும் மறப்பதில்லை. மறக்கப்போவதுமில்லை. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு என் வீட்டுக்கு கல் வீசுவது உமக்கே கஷ்டமானதாக முடியும். இப்போது அது தான் நடக்கிறது. எனது கல்லறையில் சாம்ராஜ்யம் அமைக்க முயல்வது நல்லதுக்கல்ல. எனக்கு சமாதிகட்ட நீர் முனைவது எனக்கல்ல. எம் இனத்துக்குத்தான். இது நீர் செய்யும் பெரும் வரலாற்றுத் துரோகமாகும்.
எனது அரசியல் பாரம்பரியம்பற்றி நீர் அறிந்திருக்க நியாயமில்லை. தந்தைசெல்வாவை 1947ஆம் ஆண்டு முதல்முதல் புத்தூர் கிராமசபை மைதானத்தில் கண்டு அவரின் பேச்சைக்கேட்டு மகிழ்ந்தவன் நான். அப்போது நீர் சிறு குழந்தையாக இருந்திருப்பீர். கோப்பாய் தொகுதி வேட்பாளர் திரு.தம்பியப்பா அமரத்துவம் அடைந்த நாளும் அன்று தான். 1949ஆம் ஆண்டு தொட்டு தந்தைசெல்வா என்னாலும், எனது குடும்பத்தவராலும் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தவர். மாற்றுக்கட்சியில் நான் செயற்பட்டகாலத்திலும் அவருக்குரிய மதிப்பையும் மரியாதையும் நான் கொடுத்தே வந்துள்ளேன். தந்தை செல்வாவுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தவர்களில் நான் மட்டும் தான் இன்று உயிருடன் இருக்கின்றேன். பாராளுமன்றத்தில் தந்தை. செல்வாக்குப்பின் இருந்த ஆசனத்திலேயே நான் இருந்தேன்.
தினமும் இரவு 8.00 மணிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கும் வேளையில் என்னையும் தன்னுடன் தனது வாகனத்தில் அழைத்துக்கொண்டு தன் வீட்டையும் தாண்டிச்சென்று எனது நண்பன் திரு.தா.திருநாவுக்கரசு அவர்களின் வீட்டில் விட்டுவிட்டே தனது வீட்டுக்கு திரும்புவார். இப்படிப்பல நாட்கள் தொடர்ந்தன. ஒரு சமயம் நான் கிளிநொச்சி கரைச்சி கிராமசபைத் தலைவராக இருந்தவேளை எனது தலைவர் பதவியைப்பறிக்க சிலர் முற்பட்ட போது அதை தடுத்து நிறுத்தியவரும் தந்தை செல்வாவே. மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட பெரியவரின் செயலால் அன்றைய உள்ளுராட்சி அமைச்சராயிருந்த திரு.மு.திருச்செல்வம் அவர்கள் (கலாநிதி நீலனின் தந்தை) ஒரு தடவையேனும் தனது அமைச்சர் பதவிக் காலத்தில் கிளிநொச்சிக்கு வரப்போக இந்த ஒரு சிலர் ஒருபோதும் விடவில்லை. அன்றும் உம்மைப்போன்ற சிலர் தழிழரசுக் கட்சியில் இருந்திருக்கிறார்கள்.
1970ல் சும்மா கை கட்டிக்கொண்டிருந்து கிளிநொச்சித் தொகுதியில் நான் வெற்றி பெறவில்லை. கால்கள் கொப்பளிக்க கால்நடையாக நடந்து சென்று வென்றவன். எனது வெற்றிக்குச் சவாலாக பல தமிழரசுகட்சித் தலைவர்கள் தந்தைசெல்வா. அமிர் போன்றோர் வந்து தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்தார்கள். 700 சதுரமைல் விஸ்தீரணம் கொண்ட கிளிநொச்சித் தொகுதியில் என் கால்கள் படாத வீடு கிடையாது. கிளாலி தொடக்கம் மாங்குளம் ஊடாக துணுக்காய் ஆலங்குளம் வரை ஏறக்குறைய 100 கிலோமீற்றரும், பரந்தன் தொடங்கி முழங்காவில் வரை 50 கிலோமீற்றரும் கால்நடையாக நடந்து சென்றே அத்தொகுதியை வென்றெடுத்தேன். கிளிநொச்சி மக்கள் இன்றும் சான்றுபகர்வார்கள். இலங்கையில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் நான் பட்ட கஸ்டம் அனுபவிக்கவில்லை. அவ்வாறு பெறப்பட்ட பதவி என்பதால் தான் கர்வம் அடையாது அப்பதவியின் பெறுமதியை உணர்ந்து செயற்பட்டேன்.
1972ல் பாராளுமன்றத்தில் ( அரசியல் நிர்ணய சபையி;ல்) புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டவேளை அதைக் கண்டித்து உரையாற்றியது மட்டுமல்ல அதை எதிர்த்து வாக்களித்த ஒரேயொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினன் நான் மட்டுமே. நான் அன்று பிரதிநிதித்துவப்படுத்திய அகில இலங்கைத் தழிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவாகிய ஏனைய இருவரும் அரசுடன் சேர்ந்து ஆதரவாக வாக்களித்தும். தமிழரசுக்கட்சியினர் அரசியல் நிர்ணயசபையைப் பகிஷ்கரித்ததும் அனைவரும் அறிந்ததே. எனது இச்செயலால் பெரியவர் தந்தைசெல்வா உட்பட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களினதும் அன்றைய எனது கட்சித் தலைவரும், ஸ்தாபகருமாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களினதும் பாராட்டைப் பெற்றவன் நான்.
1972.05.14 தமிழர் கூட்டணியை உருவாக்கினோம். இக்கூட்டணியில் நான் என்னை இணைத்துக்கொண்டவனல்ல. கூட்டணியை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். நானும் எனது நண்பன் மு.ஆலாலசுந்தரமும் இணைப்பிரச்சாரச் செயலாளர்களாகத் தெரிவானோம். அந்தவேளை திருவாளர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தார்கள். குடியரசு தினத்திற்கு முதல்நாள் இரவு அல்லது ஓரிரு தினங்களுக்கு முன்னர் சரியாக ஞாபகமில்லை பல இளைஞர்களுடன் எனது மைத்துனர் ஜெயசீலன் உட்பட உம்மையும் கைதுசெய்து தடுப்புக்காவலில் இருந்த உமக்கு வெளியில் நடந்தவைபற்றி அதிகம் தெரிந்திருக்கமுடியாது. தெரிந்திருந்தால் இன்று என்னை முழுமூச்சாக ஆதரித்திருப்பதுடன், அர்த்தமற்ற நியாயமற்ற உண்மைக்குப்புறம்பான குற்றச்சாட்டுகளை நம்மவர் சிலர் வைக்கும் போது அவற்றைக் கண்டித்தும் இருப்பீர். அதற்குப் பதிலாக எனது உயிருக்கு உலை வைக்கும் பெரும் பணியில் அல்லவா நீர் ஈடுபட்டிருந்தீர். நீர் என் சார்பாக பேசவில்லை என நான் கவலைப்படவில்லை. ஆனால் எதுவித பலனையும் எதிர்பாராமல் புண்ணியத்திற்கு உழும் பன்றியை பல்லுக்குப் பதம் பார்ப்பதில் நீர் அல்லவா முன்னின்று செயற்படுகின்றீர்.
உம்மைப்போன்று ஏறக்குறைய 50 இளைஞர்கள் குடியரசு தினத்தை பகிஷ்கரிக்கத் தூண்டியதால் பொலிசாரர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த அதேவேளை சகல தழிழரசுப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், ஏனைய திருவாளர்கள் அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோருடன் நானும் இன்னும் பல தொண்டர்களும் இணைந்து பல்வேறு சட்டமறுப்பு நடவடிக்கைகளிலும், பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டோம்.
அப்படியான ஒரு சட்டமறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சித் தொண்டர்களும் நானும், என்னுடன் காலம் சென்ற ஜயம்பிள்ளை திருஞானம், லண்டன் பா.வை.ஜெயபாலன், ஜேர்மனி சுந்தரசாமி கண்ணன், இந்தியா ஞானப்பிரகாசம் ஞானராசா, வன்னேரிக்குளம் துரைராசசிங்கம் ஆகியோரும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு யாழ். கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டோம். மறுநாள் காலை சிறைக்கைதிகளின் உடையில் பலாலி விமானநிலையத்தில் எனக்காக தயாராயிருந்த விசேட விமானத்தில் கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். பலாலி விமானநிலையத்தில் கொழும்பு செல்லவிருந்த பயணிகளும், திருச்சிக்கு செல்லவிருந்தவர்களும் மற்றும் அவர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் வந்திருந்த பலரும் பார்த்துக்கொண்டிருக்க நான் விமானத்தில் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வெலிக்கடைச்சிறையில் நான் அடைக்கப்பட்டேன். தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிகளின் வரலாற்றில் சிறைக்கைதி உடையணிந்து மக்கள் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே! என்னுடன் கைதான ஏனைய 6 இளைஞர்களும் இவ்வாறே சிறைக்கைதி உடையணிந்தே சிறை வைக்கப்பட்டிருந்தனர். திட்டமிட்டு என்னை அவமதிக்க அரசு செய்த செயல் இன்றைய இளம் தலைமுறைக்குத் தெரிந்திருக்கும். உமக்கும் இது தெரியாமலிருக்க நியாயமில்லை.
சிறைவாசம் முடிந்து கொழும்பில் விடுதலை செய்யப்பட்ட என்னை மாலை அணிவித்து வரவேற்ற தந்தை செல்வாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்ததை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. அதேநேரம் யாழ்.கோட்டையில் விடுதலையாகிய இளைஞர்களை வரவேற்றகச்சென்ற அமிர் தம்பதியினருக்கு என்னநடந்தது என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். திருமதி.அமிர்தலிங்கம் காரினுள் இருக்க சில பொலிசார்கள் காரின் மேலே நின்று தூஷண வார்த்தைகளைப் பேசி பைலா நடனம் ஆடியதும், அமிர்தலிங்கம் அவர்களின் பிடரியில் யாரோ ஒருவன் அடித்ததும் இப்பொழுது நினைக்கும் பொழுதும் எனது கண்கள் பனிக்கின்றன. இது மட்டுமல்ல எத்தனையோ தடவைகள் அவர் அவமரியாதைப்பட்டதும், தாக்குதலுக்குள்ளானதும் உமக்கு தெரியாததல்ல. இன்று நீர் தமிழரசுக்கட்சியை மீளப்புதுப்பித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை கருவறுப்பதன் மூலம் அவருக்குச் செய்யும் துரோகத்தை எண்ணி நான் வேதனைப்படுகின்றேன். கடந்த 10ஆண்டுகளில் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை ஒரு தடவையேனும் உச்சரித்தீரா. அவர் எப்படி இறந்தார் என்பதையேனும் சொல்லியிருக்கிறீரா? அக்கொலையை கண்டித்திருக்கிறீரா?
அமிர் அவர்களின் வாரிசு போல, எடுத்ததெற்கெல்லாம் தந்தையையும், அமிரையும் சாட்சிக்கு கூப்பிடும் உமக்கு இச் சம்பவம் பற்றிப் படிக்கும் போது உள்மனம் உறுத்தவில்லையா? இந்தத் தியாகச் செம்மலுடன் எனது இறுதியான பயணம் கொழும்பில் இருந்து சென்றதே. அவரை விட்டுப்பிரியும் போது இனி அவரை உயிருடன் சந்திக்கமாட்டேன் என்பதை நான் உணரவில்லை. அவர் கூறிய இறுதி வார்த்தைகள் இன்றும் என் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அன்போடு என்னை அழைத்து “சங்கரி எம்மில் சிலருக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியும். என்ன செய்வது? நாம் அதற்கு முகம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்” என்று கூறிவிட்;டு என்னை அண்ணா மேம்பாலத்திற்கு அண்மையில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதை அன்று நான் உணர்ந்திருந்தால் நிழல்போல அவரைத் தொடர்ந்திருப்பேன் அல்லவா? உம்மைத் தனது நிழல் என்று தானே அவர் எண்ணியிருந்தார். அதற்கமைய நீர் நடந்தீரா? நடக்கின்றீரா?
தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்ட பின் ஒரு சந்தர்ப்பத்தில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் கடும் சுகவீனமுற்றிருந்தபோது பலகாலம் பிரச்சாரத்தில் ஈடுபடாது ஏனைய கட்சிப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே காலத்தில் திரு.தா.சிவசிதம்பரம், அன்றைய வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.எக்ஸ்.எம்.செல்லத்தம்பு அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டு பிரச்சார வேலைகளுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். அந்த நாட்களில் தமிழர் கூட்டணியின் கூட்டமென்றால் நான் மேடையில் அமர்ந்தால் தான் அது கூட்டணிக் கூட்டமாயிருக்கும். அல்லது அக்கூட்டங்கள் தமிழரசுக் கட்சிக் கூட்டமாகவே மக்கள் பார்வைக்குத் தெரியும். காரணம் எத்தனை பேச்சாளர்கள் இருந்தாலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது இருந்தால் தான் கூட்டம் கலகலப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே என்பதை மறந்துவிடவேண்டாம். கூட்டணி என்னால் தான் வளர்ந்தது என்று கூறவரவில்லை. இருகட்சிகளையும் சேர்த்த பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் தம் பங்களிப்பை செய்தனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சட்ட மறுப்பு, பிரசாரக்கூட்டம், கிராம யாத்திரை என்று எந்த நிகழ்விலும் நான் கலந்து கொள்ளாது விடுவதில்லை. நெடுந்தீவு தொடக்கம் பொத்துவில் உகந்தைவரை எனது வாகனத்துடன் சமூகமளிப்பதை பெருமையாக என்னைப் பாராட்டி தன் மனைவிக்கும், கூடியிருக்கும் தொண்டர்களுக்கும் அமிர் அவர்கள் கூறுவது இந்தக்கணத்திலும் எனக்கு நினைவுக்கு வருகிறது.
அரசியல் கட்சிக்குள் உட்ப+சல் இல்லாத கட்சி எங்கும் கிடையாது. அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடன் பதவிப்போட்டியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் போட்டியிடமுன்வந்ததும், தந்தை செல்வாவின் தலையீட்டால் அவை தடைப்பட்டதும் அனைவரும் அறிந்தவிடயம். அதேபோல நீர் பதவிக்கு என்னுடன் போட்டியிட்டதில் தவறில்லை. ஆனால் எதற்கும் ஓர் வழிமுறையுண்டு. பதவி கிடைத்தால் கட்சியை அழிக்க உடைக்க முயல்வது நீர் அடிக்கடி பெயர் குறிப்பிட்டுப் பேசும் தவைவர்களுக்குச் செய்யும் படுதுரோகமாக இன்று உமக்குத் தெரியவில்லையா?
நம் கட்சிக்குள் நடந்த சில கசப்பான சம்பவங்களைக் குறிப்பிடுவது அழகல்ல. இருப்பினும் உம்மைப்போன்ற சிலரின் விபரீதப் போக்கால் சிலவிடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும். 1977ம் ஆண்டுத் தேர்தலில் கூட்டணி அமோக வெற்றியீட்டிய வேளையில், அன்றைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டிய ஒரு சந்தர்ப்பம் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கிடைத்தது. அந்தத்தருணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடமின்றி, பழைய காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த நாங்கள் நால்வரும், தமிழருசுக்கட்சியைச் சார்ந்த சிலரும் அமரர் அமிர் அவர்களையே விரும்பினோம். ஏனெனில் அவர் செய்த தியாகங்கள், இரவு பகல பாராது குடும்பமாக தன்னை அர்ப்பணித்து மக்களுக்காகச் செயற்பட்டவர் கட்சியிக்காக உழைத்தவர் என்ற காரணத்தால் தான். ஆனால் உம்மைப்போன்ற பாராளுமன்ற உறுப்பினர் சிலர் அன்றும் இருந்திருக்கிறார்கள். சரித்திரம் திரும்புகிறது என்பார்களே! அது இது தானா? திரு.மு.சிவசிதம்பரம் அவர்களை எதிர்க்கட்சித்தலைவராகப் பிரோரிக்க நடந்துகொண்டிருந்த சதியை அறிந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் தானே முதலில் எழுந்து அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தவைவராக முன்மொழிந்து அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்டதை நீர் அறிந்திருக்காமல் இருக்கமுடியாது. அமிர் அவர்கள் தனது இறுதி நாட்களில் அடிக்கடி கூறும் ஓர்விடயம் திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் இன்றுகூடச் சான்று பகர்வார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த உறுப்பினர்களின் விசுவாசம்பற்றி.
நீர் சிறையிலிருந்தவேளை அங்கு நடந்த விடயங்கள் குறித்து எந்த மேடையிலும் எடுத்துக்கூற நான் தவறவில்லை. ஆனால் உம்மைப் போல பல இளைஞர்களும் அரச தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டிருக்கிறார்கள். கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். உம்மையும், காசி ஆனந்தத்தையும் வண்ணை ஆனந்தத்தையும் அரசியலில் வளர்த்தெடுத்தது நாங்கள் தான். உமக்குச் செய்யவேண்டியதற்கு அதிகமாகவே எமது கட்சி செய்துள்ளது. எதுவித பலனையும் பெறாத எத்தனையோ இளைஞர்கள் அன்று இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். பல இடங்களில் இளைஞர் பேரவைக் கிளைகளை அமைத்தோம். எனது கிளிநொச்சித் தொகுதியில் மட்டும் 28 கிளைகள் இருந்தன. இளைஞர் பேரவைக் கிளைகளின் ஒன்றியத்தின் தலைவராக நீர் வாக்கொடுப்பு மூலம் என்றும் தெரிவுசெய்யப்படவில்லை. எப்போதும் அமிர்தலிங்கம் அவர்களின் நியமனத்தால்தான் உமக்குத் தலைவர் பதவி கிடைத்தது. அன்றெல்லாம் நீர் தேர்தல் மூலம் பதவிக்கு வரவேண்டும் எதிர்நோக்க வேண்டும் என்று எண்ணவில்லை. இவையெல்லாவற்றையும் மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உடைத்தெறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளீர். இன்று உமக்கும், கட்சியில் வேறுசிலருக்கும் உள்ள நெருக்குதல் எனக்குத் தெரியாததல்ல. தமிழரசுக் கிளையையோ, கூட்டணிக்கிளையோ இன்று அமைக்கும் பட்சத்தில் யார் யார் அங்கத்தவர்கள் ஆவார்கள், எப்படிப்பட்டவர்கள் முக்கிய பதவியைக் கைப்பற்றுவார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? உமக்கு வேண்டியதெல்லாம் தலைமையில் மாற்றம். அதை முறைப்படி செய்திருக்கலாம்.
(தொடரும்)
Aucun commentaire:
Enregistrer un commentaire