தமிழ் சினிமாவில் ஓர் வார்த்தை அது பலரின் வாயில் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. ‘ பன்றி கூட்டம் கூட்டமாக வரும், ஆனால் சிங்கம் சிங்கிள் ஆகத்தான் வரும்’ என்பதாகும். வீரசிங்கம் ஆனந்த சங்கரி அவர்களும் தனித்துப் போராடும் சிங்கமே. சிங்கிள் ஆகத்தான் பேசுகிறார். போராடுகிறார். தமிழ் அரசியல் வரலாற்றில் தனித்துவமான பங்கினைக் கொண்டுள்ள கட்சியின் தலைவராக உள்ள அவரது குரலை தனித்த குரலென கருதும் போக்கு ஒரு சாரார் மத்தியில் காணப்படுவது வருத்தத்திற்குரியது. துர்அதிர்ஸ்டமானது.
வரலாறு இவ்வாறான மனிதர்களை காலம் தாழ்த்தியே அடையாளம் காண்கிறது. இம் மனிதர்கள் உயிரோடு வாழும்போதே கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களது அனுபவங்கள் காத்திரமான வரலாற்று அத்தியாயங்கள். தலைமை என்பது யாரோ சிலர் கைகளை உயர்த்துவதாலோ அல்லது வாக்குகளை பதிவு செய்வதாலோ கிடைத்து விடுவதில்லை. சிக்கலான தருணத்தில், தனது சுயநலன்களைப் புறம் தள்ளி தான் நேசிக்கும் மக்களுக்காக யார் குரல் எழுப்புகிறார்களோ, போராடுகிறார்களோ அவர்களே என்றும் தலைவர்களாக மதிக்கப்படுகிறார்கள். இவ்வாறான இம் மனிதப் பண்புகள் படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டவை. கொடுமையான சமூக விளைவுகளுக்கு முகம் கொடுத்து அதனூடாக புடம் போட்டு வளர்ந்தவை. இவை சமூகத்தின் சில மனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவோ, அல்லது இன்னொரு முகமூடியாக அல்லது கவசமாக பயன்படுத்தி தான் வாழும் சமூகத்தை ஏமாற்றிப் பிழைக்கும் ஆயுதமாக அதனைப் பயன்படுத்துவதில்லை. அவை ஓர் இலட்சியப் பயணமாக சிலரின் வாழ்வில் அமைந்து விடுகின்றன.
அகவை 80 இனை எட்டியுள்ள ஆனந்த சங்கரி அவர்களின் வாழ்வும் பல்வேறு போராட்டங்களினூடாக புடமிட்டு துலங்கும் ஒன்றுதான். எட்டு சகோதர, சகோதரிகளோடு பிறந்த ஆனந்த சங்கரி அவர்களின் குடும்பம் பெரியது என்ற போதிலும் ஒவ்வொருவருமே தமக்கே உரித்தான விதத்தில் தாம் வாழ்ந்த சமூகத்திற்கு சேவை புரிந்தனர். புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் அதிபராக இருந்த இவரது தந்தை சாதி வெறிக்கு எதிராக தனித்துப் போராடியவர். மத வெறியர்களும், சாதி வெறியர்களும் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், மற்றும் தேனீர்க் கடைகள் என பொது இடங்களில் சக மனிதர்களை மிகவும் கீழ்த் தரமாக நடத்திய அவ் வேளையில் பாடசாலை அனுமதியில் சாதிப் பாகுபாட்டிற்கு எதிராக முன்மாதிரியான அதிபராக செயற்பட்ட ஓர் சிங்கம் அவரது தந்தை வீரசிங்கம் அவர்களாகும்.
இக் குடும்பத்தின் ஒவ்வொருவரும் வன்முறைக்கும், அராஜகத்திற்கும் எதிராக குரல் கொடுத்தவர்கள். அதற்காக அதிக விலை கொடுத்தவர்கள். சாவகச்சேரி பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்த இராஜசங்கரி அவர்கள் இந்திய சமாதானப் படைகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பினார். அதனால் எம்மவர்களால் படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப்புலிகளைப் பகிரங்கமாக விமர்ச்சித்தார் என்பதற்காக அவரது இன்னொரு சகோதரர் ஞானசங்கரி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். தமது தந்தையின் படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பிய ஞானசங்கரி அவர்களின் புதல்வர்கள் இருவர் இரவோடிரவாக கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவரின் இன்னொரு சகோதரனான கணேச சங்கரியின் புதல்வரான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த யோகசங்கரி தமிழ் நாட்டில் எம்மவர்களால் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு சகோதரனான பரதசங்கரியின் மகள் லண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்;. இவ்வாறாக இவர்களது குடும்பத்தை ஆயுத கலாச்சாரம் வெகுவாக பாதித்து உள்ளது.
துணிச்சல் மிக்க பாடசாலை அதிபர் ஒருவரின் புதல்வரான ஆனந்த சங்கரி அவர்கள் தனது 22வது வயதில் அகில இலங்கையில் வாழும் உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காக செயற்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் அங்கத்தவரானார். தமிழ்ப் பிரதேசங்களிலே குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியவாதம் உச்ச நிலையில் இருந்த வேளையில் சர்வதேசியத்தை நேசிக்கும் சமசமாஜக் கட்சியில் அவர் இணைந்ததில் வியப்பு இல்லை. மனித சமூகத்தின் மத்தியிலே ஏற்றத் தாழ்வினை ஒழிக்க வேண்டுமெனவும், ஒடுக்கு முறைக்கு எதிராக துணிந்து போராட வேண்டுமெனவும் சமசமாஜக் கட்சி குரல் எழுப்பியது. மிக இளைஞரான அவர் கட்சியில் இணைந்த நான்கு ஆண்டுகளுக்குள் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் அபேட்சகராக நிறுத்தப்பட்டார். அந்த அளவுக்கு கட்சியின் தலைமைப் பீடம் அவர்மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தது. இத் தேர்தலில் அவர் அப்போதைய மேயரும், ஐ தே. கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வி. ஏ. சுகததாச அவர்களை எதிர்த்தே கொட்டாஞ்சேனை தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டார். கொழும்பு மேயரை அதுவும் ஒரு சிங்களவரை எதிர்த்து தமிழர் ஒருவரை நிறுத்தி பெரும் பரபரப்பை சமசமாஜக் கட்சி ஏற்படுத்தியிருந்தது. பலரின் கவனத்தையும் இத் தேர்தல் ஈர்த்தது. இத் தேர்தல் அவரை ஓர் நாடறிந்த இடதுசாரித் தலைவர் என்ற அளவுக்கு உயர்த்தியிருந்தது.
இதன் காரணமாகவே எந்தவிதமான முன் அறிமுகமும் அற்ற கிளிநொச்சித் தொகுதிக்கு 1960ம் ஆண்டு மார்ச் மாதம் இடம் பெற்ற தேர்தலில் கட்சி அவரை நிறுத்தியது. மிகப் பெரும் தொகையான விவசாய விளை நிலங்களையும், விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் கொண்டிருந்த கிளிநொச்சிப் பிரதேசம் இன்று வரை அவரின் வாழ்விடமாக உள்ளது. 1960 இல் இடம் பெற்ற இரண்டு தேர்தல்களிலும் அதன் பின்னர் 1965 இல் இடம்பெற்ற தேர்தலிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய அவர,; ஒருபோதும் அந்த மக்களைக் கைவிட்டுச் செல்ல எத்தனித்ததில்லை. அப் பகுதி மக்கள் கிளிநொச்சித் தொகுதியிலுள்ள கரைச்சி கிராமசபையின் தலைவராக அமர்த்தி அவரை தம்மோடு தொடர்ந்து இணைத்துக்; கொண்டனர். துடிப்பு மிக்க ஓர் சமூக சேவகனாக இருந்தமையால் அவர் பதவி வகுத்த கரைச்சி கிராமசபை குறுகிய காலத்தில் பட்டினசபையாக தரமுயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பட்டினசபையின் முதலாவது தலைவராக அவரையே அமர்த்தி அம் மக்கள் கௌரவித்தார்கள். கிளிநொச்சிப் பகுதி யாழ். மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதால் பல விதங்களில் அப் பகுதி கவனிப்பாரற்ற நிலையிலேயே இருந்தது. அரச அலுவல்களை மேற்கொள்ள யாழ். அரச அதிபர் செயலகத்திற்கே செல்லவேண்டி ஏற்பட்டது. சாமான்ய உழைக்;கும் விவசாயிகள் யாழ்ப்பாணம் சென்று தரகர்களின் கைகளில் சிக்கி தமது அலுவல்களை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. கிளிநொச்சி பட்டினசபையின் தலைவராக பொறுப்பெடுத்த நாள் முதல் கிளிநொச்சிப் பிரதேசத்தினை தனி மாவட்டமாக மாற்ற அவர் பெரும் முயற்சி எடுத்தார்.
தனது அரசியல் சகாக்களுடன் பல வாக்குவாதங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அவரது தன்னலமற்ற இடையறாத போராட்டம் இறுதியில் வெற்றியளித்தது. தரப்படுத்தலால் யாழ். மாவட்டம் பாதிக்கப்பட்டபோது எந்தவித தரம் வாய்ந்த பாடசாலைகள் இல்லாத கிளிநொச்சி மாவட்டம் தரப்படுத்தல் காரணமாக அம் மாவட்ட மாணவர்களுக்கு பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்பை அளித்தது. தனி மனிதனாக இதனை அவர் சாதித்தார்.; அவர் ஓர் ஆசிரியனாக தமிழ்ப் பிரதேசங்களிலும், சிங்களப் பிரதேசங்களிலும் கடமை புரிந்ததால் அவரின் சிந்தனை மிகவும் விசாலமாக மாற அவை உதவின. சிங்கள மக்களை, அவர்களின் மன உணர்வுகளை அவர் தினமும் அனுபவித்தவர். இதுவே அவரை இனவாத சிந்தனைக்கு அப்பால் எடுத்துச் சென்றன.
இடதுசாரியாக, ஆசிரியனாக, உள்ளுராட்சி நிர்வாகியாக, பாராளுமன்ற உறுப்பினனாக ஓர் உயர்ந்த பரிமாணம் பெற்றிருக்கும் அவர் இன்றும் அந்த மக்களோடுதான் தனது அரசியல் பயணத்தை தொடர்கிறார். தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அல்லது அதிகாரத்தை எட்டிப் பிடிப்பதுதான் அவரது அரசியல் இலக்காக இருந்திருப்பின் அடுத்தடுத்து தோல்வியைக் கண்ட பின்னர் எப்போதோ அரசியல் ஓய்வை நோக்கிச் சென்றிருக்க வேண்டும். சமசமாஜக் கட்சியிலிருந்து ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் விலகிய அவர், தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போதும் தனது தொகுதியை விட்டு அவர் விலகவே இல்லை. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற போது அல்லது அங்கத்தவராக தேர்வு செய்யப்பட்டபின் தமிழ்த் தேசியத்தைத் தமது தோழ்களில் சுமப்பதாக பேசியவர்கள், ஐ நா. சபையிலே கொடியேற்றுவதாக பீத்தியவர்கள் பதவி பறிபோனதும் ஓய்வுக்கு சென்ற வரலாறுகள் நிறையவே உண்டு.
மனிதர்கள் தமது இலட்சியங்களை தமது கனவாக மாற்றி அக் கனவுகளை நனவாக்க தினமும் உழைக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதே தமது இலட்சியப் பயணமாக கைக் கொள்கின்றனர். இவ்வாறு தன்னலமற்ற வகையில் தனது சமூகத்திற்காக செயற்படும்போது கிடைக்கும் பதவிகளை அந்தமக்களின் நலன்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள். மக்கள் என்ற எஜமானர்களுக்கு சேவகம் செய்பவர்களாக தம்மை வரித்துக் கொள்கிறார்கள். அவர்கள் அதனை தமது அதிகார இருப்பிற்காக அல்லது சுயநலன்களை வளர்க்க உபயோகிப்பதில்லை. இதுவே ஆனந்த சங்கரி அவர்களின் வாழ்வின் அத்தியாயங்களிலும் காணப்படும் பிரதான அம்சமாகும். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தனது தொகுதிக்கே செல்லாத உறுப்பினர்கள் பலர் உள்ள இவ் வேளையில,; பதவி இல்லாத சூழலிலும் தான் நேசித்த மக்களோடு உண்டு, உறங்கி அவர்களின் சுக துக்கங்களுடன் பகிர்ந்து வாழும் பண்பு மிக்க ஓர் மனிதராக அவரைக் காண்கிறோம்.
ஓட்டு மொத்தமான குடும்பமும் வன்முறையை, சமூக ஒடுக்கு முறையை எதிர்த்தே வாழ்ந்தது. தமது உயிரை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கவும் அவர்கள் பின்னின்றதில்லை. இத்தகைய வாழ்வுப் பின்ணியிலிருந்தே அவரது ஒவ்வொரு நகர்வுகளையும், முடிவுகளையும், அணுகு முறைகளையும், விமர்சனங்களையும்; பார்க்க வேண்டியுள்ளது. 2004ம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குள் எழுந்த பிரச்சனைகள், அதன் தாக்கங்கள் என்பனவும் இப் பின்னணியிலிருந்தே அணுகப்பட வேண்டும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஓர் வரலாற்றுத் தேவையிலிருந்தே தோன்றியது. 1970 இல் இடம்பெற்ற தேர்தலில் முக்கியமான அரசியல் தலைவர்களான ஜி ஜி, சிவசிதம்பரம், அமிர் ஆகியோர் தோற்கடிக்கப்பட்ட நிலையில் பெரும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது. தமிழ்க் கட்சிகள் தத்தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்வதால் மக்களின் ஐக்கியம் பலவீனப்படுத்தப்படுவதோடு அரசியல் பலமும் வீணடிக்கப்படுவதாக உணர்ந்த தந்தை செல்வா அவர்கள் ஜி ஜி அவர்களிடம் சென்று ஐக்கியப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.
தமிழரசுக் கட்சியை உருவாக்கிய தந்தை செல்வா அவர்களே கட்சியை விட மக்களின் ஐக்கியத்தின் அவசியத்தை உணர்ந்ததால் தமிழரசுக் கட்சியைக் கைவிட்டு கூட்டணி அமைக்க தயாரானார். தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய காரணத்தால்தான் தமது கட்சிகளைக் கைவிட அதன் தலைவர்கள் முற்பட்டார்கள். தமிழ் மக்களிடையே என்றுமில்லாத அளவுக்கு உற்சாகம் காணப்பட்டது. புதிய வேகம் எழுந்தது. தமிழரசுக் கட்சியின் வரலாறு அத்துடன் நின்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற புதிய அமைப்பின் வரலாறு தொடங்கியது. அதே போன்று தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வரலாறும் முடிந்த வரலாறாகியது. இக் கட்சிகளால் இனிமேல் மக்களுக்கு தலைமை தாங்க முடியாது என்ற முடிவின் காரணமாக கட்சியை கைவிட்ட அதன் தலைவர்கள், தாம் இருக்கும் வரை தமது பழைய கட்சிகள் குறித்து பேசவோ அல்லது கடந்த காலம் குறித்து சர்ச்சைப்படவோ இல்லை. மிகவும் பெரும்தன்மையோடும், தன்னடக்கத்தேர்டும் செயற்பட்டார்கள். ஒருவரை ஒருவர் மதித்து செயற்பட்டார்கள். இன்றுவரை மூடிவைக்கப்பட்ட தமிழ்க் காங்கிரஸின் வரலாற்றினைப் பற்றி ஆனந்த சங்கரி அவர்கள் பேசியதில்லை. தமிழர் கூட்டணியே தன் எதிர்கால வரலாறு, அதன் தலைவர்களே தனது மேன்மைக்குரிய தலைவர்கள் என எண்ணி, மறைந்த அத் தலைவர்களை நினைவூட்டும் வகையில் அவர்கள் நிழல்களிலேயே அவரது பயணம் செல்கிறது.
இத் தலைவர்கள் உயிரோடு இருந்தபோது தம்மை வாரிசாக கருதியவர்கள், இரத்த திலகம் இட்டு புளகாங்கிதம் அடைந்தவர்கள் இன்று அவர் பெயரைக்கூட உச்சரிப்பது இழிவானது என்ற அளவுக்கு அதிகாரபோதையில் உள்ளார்கள். தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட உன்னதமான அம் மா மனிதர்கள் குறித்து அவரவர்களின் குடும்பங்களே தமது செலவில் நினைவு தினங்களை கொண்டாடும் பரிதாப நிலையில் உள்ளன. மக்கள் ஏன் இத் தலைவர்களை மதிக்கத் தவறுகிறார்கள்? இவர்களின் வரலாறுகளை திட்டமிட்டு ஒழிக்க அக் கட்சிகளின் இன்றைய தலைவர்களே காரணமாக உள்ளார்கள். விடுதலைப்புலிகளால் வெளியிடப்படும் பிரசுரங்களில் பல தலைவர்களின் பெயர்கள் திட்டமிட்டே தவிர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் இலங்கை அரசு தமிழர்களின் வரலாற்றினை இருட்டடிப்பதாக கூக்குரல் போட்டு தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவதாக மாய்மாலம் கொட்டுகிறார்கள். தமது கட்சித் தலைவர்களின் வரலாறு மறைக்கப்படுவது குறித்து மௌனம் கொள்கிறார்கள். இதற்கு யார் காரணம்? சரியான அரசியல் கலாச்சாரத்தை தனது அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்லும் தகைமையை இன்றைய தலைவர்கள் இழந்து விட்டனர். பதவி, அதிகாரம், சுயநலம் என்பன அரசியலிற்குள் குடி புகுந்துள்ளன. மக்களைப் பற்றிய கவலைகள் இரண்டாம் பட்சமே. கல்வி அறிவிலும், அறிவாற்றலிலும, மக்களை நேசிப்பதிலும் திறமை படைத்த இத் தலைவர்கள் தமக்கென சொத்துக்களைக் குவிக்க எண்ணியதில்லை. குவித்ததுமில்லை. அதன் விளைவுகளின் கொடுமைகளை அக் குடும்பங்கள் இன்னமும் அனுபவிக்கின்றன. ஆனால் தமிழ்த் தேசியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை சுமப்பதாக கூறும் இன்றைய தலைவர்கள் பல தலைமுறைகளுக்கு சொத்துக்களை குவித்துள்ளார்களே, இது எப்படி சாத்தியமாகியது? ‘மக்கள் பஞ்சத்தில் மந்திரிகள் மஞ்சத்தில்’ என்ற நிலையல்லவா இது? இதன் காரணமாகவே ஆனந்த சங்கரி அவர்களின் சமீபகால கருத்துக்கள் காட்டமாக காணப்படுகின்றன.
மக்களை நேசித்து தமது சுகபோகங்களைத் துறந்த தலைவர்களின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் அக் கட்சிகளின் இன்றைய தலைவர்கள், இந்த வரலாறுகளுடன் சம்பந்தப்படாது தூரத்தே நின்று அன்று செயற்பட்டவர்கள். அதாவது தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் என்ற கோஷ்டி அரசியல்கள் மத்தியிலே தமது அரசியலை வளர்த்துக் கொண்டவர்கள். இன்னமும் அந்த கோஷ்டி மனப்பான்மையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே இன்னமும் ஆனந்த சங்கரி அவர்களை தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்காரனாக பார்க்கும் மனநிலை காணப்படுகிறது. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பவற்றின் வரலாற்றினை அதனைப் பிரசவித்தவர்களாலேயே கைவிடப்பட்ட நிலையில், அக் கட்சிக்கு மீண்டும் உயிருட்ட எத்தனிப்பவர்கள் அதே மனநிலையில் இன்னமும் விவாதங்களை நகர்த்துவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆனால் ஆனந்த சங்கரி அவர்கள் அதிலிருந்து வெகு தூரத்தில் உள்ளார். அவர் கூட்டமைப்பினைக் காப்பாற்றி அதனை அரசியல் சக்தியாக தொடர்ந்தும் வளர்க்க பலரையும் அழைத்த போதும்;, அதில் ஆர்வம் காட்ட தமிழரசுக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர்கள் தயாராக இல்லை. கட்சிகளை யாரும் தோற்றுவிக்கலாம். கொண்டாடலாம். ஆனால் அவை மக்களின் முன்னேற்றத்திற்கு குந்தகமாக அமையக் கூடாது.
2004ம் ஆண்டு தமிழர் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவுகள் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளவில்லை. தமிழரசுக் கட்சி எப்போதும் சாத்வீகத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் தமிழரசுக் கட்சியினர் தமிழர் கூட்டணியாக செயற்பட்ட காலத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள்? தம்மைச் சாத்வீக வாதிகளாக அடையாளப்படுத்தினார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் போக்கு குறித்து அதுவும் சொந்த மக்கள் மேல் கொடுமைகள் குவிக்கப்பட்டபோது எவ்வாறு மௌனமாக இருக்க முடிந்தது? குறிப்பாக 2004 ம் ஆண்டு தேர்தலின்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் பல அரசியல்வாதிகள் சரணாகதி அடைந்த நிலமையில், அவர்களின் பிரதிநிதிகளை அத் தேர்தலில் அபேட்சகர்களாக நியமிக்க இவர்கள் சம்மதித்தார்கள். விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனவும், அவர்களுடன் பேசி முடிவுக்கு வரவேண்டும் எனவும் அரசை வற்புறுத்தினார்கள். இதில் காணப்பட்ட முக்கிய அம்சம் என்னவெனில் சாத்வீக அரசியலை வற்புறுத்தும் கூட்டமைப்பைச் சார்ந்த இவர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட ஆதரித்ததன் மூலம் இக் கட்சியின் வரலாற்றினை பயங்கரவாதத்தின் பக்கம் திருப்ப எத்தனித்தார்கள். இதுவே ஆனந்த சங்கரி அவர்களின் பொறுமைக்கான திருப்பு முனைக்கான காரணமாக அமைந்தது எனலாம். வன்முறையாளர்கள் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்த அவர் தடையாக இருந்தமையால் அத் தேர்தலில் போட்டியிட தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தினார்கள். தேர்தல் தேவைக்காக அதன் சின்னத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தவர்கள் தற்போது கட்சிக்கு உயிருட்ட எத்தனிப்பது ஓர் அரசியல் துரோகத்தனமாகவே உள்ளது. தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு உயிருட்ட குமார் பொன்னம்பலம் அவர்கள் எத்தனித்த போது அதற்கு ஆதரவு அளிக்க சிவசிதம்பரம் அவர்களும், ஆனந்த சங்கரி அவர்களும் மறுத்திருந்தனர். ஐக்கியத்தின்பால் அவர்கள்; கொண்டிருந்த அசையாத நம்பிக்கைக்கு இது நல்ல உதாரணமாகும்.
விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக எதிர்த்த அவர் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதரித்தே சென்றார். ஓர் பொறுப்புள்ள அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் அவை குறித்து மிகவும் தீர்க்கமாகவே உணர்ந்திருந்தார். அதனால் அவர் அதற்கான இடைவெளியை சரியாக கணித்த காரணத்தால் தேர்தலில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை, வன்முறைக்கு ஆதரவானவர்களை இணைப்பதை கடுமையாக எதிர்த்தார். ஓர் ஜனநாயக கட்சியின் பொறுப்புள்ள தலைவர் என்ற வகையில் அதன் கொள்கைகளை பயங்கரவாதத்திற்கு விலைபேச அவர் தயாராக இருக்கவில்லை. இதனால் அவர் எதிர்நோக்கிய அபாயங்கள் பல. கட்சிக்குள் செயற்பட்ட பலரே சந்தேகத்திற்குரியவர்களாக மாறத் தொடங்கினார்கள். இப்; புறச் சூழல்கள் அவரை கொழும்பில் பாதுகாப்பு அரண்களுக்குள் வாழ நிர்ப்பந்தித்தது. அரசின் பாதுகாப்பை நாட வைத்தது. அவரது நீண்ட கால நண்பர்கள் நேரில் சென்று சந்திக்க தயங்கினார்கள். உறவினை வைத்திருப்பதாக கூறுவதற்கும் பயந்தார்கள். தொலைபேசி உரையாடல்களைத் தவிர்த்தார்கள். நீண்ட காலமாக கட்சியின் சகாக்களாக செயற்பட்டவர்கள் அவரை தமது பகையாளியாக பகிரங்கமாக காட்டி தமது உயிர்களைக் காத்துக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் வாழ்ந்தார்கள்.
தமிழரசுக் கட்சியை கைவிட்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைத் தோற்றுவித்த தலைவர்கள் மறைந்துவிட, கட்சி அரசியல் பலவீனமாகி ஆயுத இயக்கங்கள் படிப்படியாக ஜனநாயக நீரோட்டத்தில் பலமடைந்து வர அதனைச் சாதகமாக்கி தமிழர் கூட்டணி (தமிழரசுக் கட்சி) மீண்டும் இந்த அமைப்புகளுடன் இணைந்து கூட்டமைப்பினை அமைத்துக்கொண்டது. தமிழரசுக் கட்சி தனித்துச் செயற்பட முடியாத நிலையில் தனது கட்சி சின்னத்தை சகலரும் பயன்படுத்துவதால் அதனைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சியி;ன் பலத்தை அதிகரிக்க மீண்டும் ஓர் முயற்சி காணப்படுகிறது.
அகவை 80 இனை எட்டியுள்ள ஆனந்த சங்கரி அவர்களின் சமீபகால கருத்துக்களை போருக்குப் பின்னதான தமிழ் அரசியலின் போக்கினை முன்னிறுத்தி அவதானிப்பதே பொருத்தமானது. தமிழர் கூட்டமைப்பிற்குள் இணைந்துள்ள அவர், கட்சியின் போக்குகள் குறித்து பகிரங்கமாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்படுகிறது. அவர் இதுவரை வெளியிட்டு வரும் கருத்துக்கள் கூட்டமைப்பின் வெளிப்படைத் தன்மை குறித்த அம்சங்களே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பல கட்சிகளின் கூட்டமைப்பாக உள்ள அந்தக் கட்சி மிக முக்கியமான தீர்மானங்களை அதுவும் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை பூட்டிய கதவிற்குள் எடுத்த பின் அதனை மற்றவர்கள் மேல் திணிக்க முடியாது. இதுவே கடந்த காலங்களிலும் செயற்பாடாக இருந்தது. அதுவே இன்றைய பின்னடைவிற்குக் காரணமாகவும் அமைந்தது. இதன் தாற்பரியத்தை நன்கு உணர்ந்த காரணத்தால் அதனை அவர் மக்கள் முன்னிலையில் வைக்கும்போது அவர் குழப்பவாதியாக கருதப்படுகிறார். தமிழர் கூட்டமைப்பிற்குள் தற்போது சித்தார்த்தர் அவர்களின் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், ஆனந்த சங்கரி அவர்களின் தலைமையிலான தமிழர் கூட்டணி என்பன இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் பத்மநாபா பிரிவான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியில் தனித்து விடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதற்கான அரசியல் காரணங்கள் என்ன? கட்சிகளின் ஜனநாயகம் எங்கே? சுரேஷ் அவர்கள் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறானால் கூட்டமைப்பு என்பது எப்போது தனி நபர் சொத்தாக மாறியது? ஓர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அக் கட்சியை இணைக்க தடைகள் என்ன? தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக சகலரும் இணைய வேண்டும் என ஒரு புறத்தில் குரல் கொடுத்துக்கொண்டு மறுபுறத்தில் கதவுகளை அடைப்பது ஏன்? இவ்வாறான பல பிரச்சனைகளை அவர் எழுப்பும்போது வழமையான மகுடி வாசிக்கப்படுகிறது.
மக்களை நேசித்து அந்த மக்களோடு தன்னை இணைத்து வாழும் ஆனந்த சங்கரி அவர்களை சகலரும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். நாட்டின் அரச நிர்வாகத்தின் செயற்பாடுகளை அதன் ஆரம்பத்திலிருந்தே அதாவது உள்ளுராட்சி அரசியலிலிருந்து ஆரம்பித்து பாராளுமன்ற உறுப்பினர் வரை படிப்படியாக உயர்ந்து சென்றவர் அவர். நாட்டின் வரலாற்றோடு இணைந்த பல அரசியல் தலைவர்களின் நேரடி அனுபவங்களின் தொகுப்பாக அவர் காணப்படுகிறார். மிகவும் அனுபவமும், ஆற்றலும் மிக்க அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே எமது அவா. முதிர்ச்சி, ஞாபக மறதி என்பன அவரது சிந்தனையோடு போட்டியிடுகிறது. அவரது போராட்டம் அதற்கும் எதிராகவே உள்ளது. தினமும் நூற்றுக் கணக்கான மைல் உள்ளுரில் பயணம். தயங்காமல், உடல்நிலையை கவனிக்காமல் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் என்பனவற்றைப் பார்க்கும்போது அவர் என்றுமே மதிப்புமிக்க, உறுதியுள்ள போராளியே. சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறோம்
Aucun commentaire:
Enregistrer un commentaire