புதுதில்லி, ஜூன் 21-
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்புக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஊடகங்களில் வெளியிட்டிருப்பது போல் இலங்கையின் வடக்கு மாநில கவுன்சில் தேர்தலுக்கு முன் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின் சில முக்கிய பகுதிகள் திட்டமிட்டே நீர்த்துப் போகும் வகையில் சில ஆலோசனைகளை இலங்கை அரசு முன் வைத்திருப்பதைக் கண்டு உங்கள் கவலையினை வெளியிட்டிருப்பது முற்றிலும் சரியானதே.13-வது திருத்தத்தையும் அதற்கு மேலும் சென்று ஒரு அரசியல் தீர்வினை கொடுப்பதாக இந்திய அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் பற்றிய சந்தேகத்தினை தற்போது இலங்கை அரசால் முன்வைக்கப்படும் மாற்றங்கள் எழுப்புகின்றன.
போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழு தன்னுடைய பரிந்துரையாக வைத்திருந்த மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வினை அளிக்கும் அரசியல் தீர்வு என்ற நோக்கத்துக்கு தற்போது இலங்கை அரசு முன்வைக்கும் மாற்றங்கள் எந்த வகையிலும் பொருந்துவதாக இல்லை.இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வு குறித்தும் அங்கு வாழும் தமிழ் சமூகம் இலங்கையில் கண்ணியமான வாழ்வும், சம உரிமையும் பெற்று குடி மக்களாக வாழ வேண்டும் என்பதிலும் இந்தியாவில் ஆழ்ந்த அக்கறை உள்ளது. நீங்கள் தெரிவித்துள்ள கருத்தின் வழியே நின்று, எதிர்காலத்தில் சமத்துவம், நீதி, சுயமரியாதையுடன் இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் வாழ்வதற்கான உறுதிப்பாட்டினைப் பெற இந்திய அரசு தனது அரசியல் உறவினை செயலூக்கத் தோடு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 13-வது திருத்தம் என்பது வரலாற்று ரீதியாக ஏற்கனவே உருவான ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக உருவானது என்பது அனை வரும் அறிந்த ஒன்று. இறையாண்மை மிக்க இந்த இரு நாடுகளும் அவர்களுக் கிடையேயான நல்லுறவை வலுப்படுத்திக் கொண்டே, அந்த ஒப்பந்தத்தை செயல் படுத்துவதற்கான ஊக்கமுடன் இந்திய அரசு செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire