பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தை இரண்டு தடவை மீறியுள்ள முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான பர்வேஸ் முஷாரப், தம் மீதான தேசத்துரோக வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.இந்தத் தகவல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முஷாரப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். இதுகுறித்து ஷெரீப் நாடாளுமன்றத்தின் கீழவையில் திங்கள்கிழமை கூறியதாவது: முஷாரப்பின் கடந்த கால நடவடிக்கைகள் தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் வருகின்றன. 69 வயதான முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப் இப்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தனது கடந்த கால நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்லி ஆக வேண்டும். தன் மீதான தேசத் துரோக வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என ஷெரீப் தெரிவித்தார். இவரது இந்த கருத்துக்கு, பாகிஸ்தான் மக்கள் கட்சி, தெஹ்ரிக்-இ-இன்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதற்கிடையே, முஷாரப் மீதான வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கு தொடர்பான அரசின் நிலைப்பாடு குறித்த அறிக்கையை அட்டர்னி ஜெனரல் முனிர் மாலிக் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் முஷாரப் மீது தேசத் துரோக வழக்கை நடத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தினால் அரசுக்கும் ராணுவத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் எனத் தெரிகிறது. ஏனென்றால், முன்னாள் ராணுவத் தளபதியான முஷாரப் தண்டிக்கப்படுவதை ராணுவம் விரும்பாது என்று கூறப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire