இந்தியாவிலன் நீலகிரியில், இலங்கை அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பையும் மீறி பயிற்சி
நீலகிரியில், இலங்கை அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பையும் மீறி பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றமையினால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,
பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால், வெலிங்டன் இராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் இராணுவ முகாம், இராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இராணுவ பயிற்சி மையத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு பயிற்சி பெற கடந்த 27ம் திகதி இலங்கையை சேர்ந்த விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோர் வந்தனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைதாகினர். இந்நிலையில், முகாமிலுள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கான 10 மாத பயிற்சி திட்டமிட்டபடி துவங்கி றடைபெற்று வருகிறது. இதற்கு இடையூறு ஏற்படாத வகையில் வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெலிங்டன் நுழை வாயில் பகுதியான பிளாக் பிரிட்ஜ், சப்ளை டெப்போ, சின்ன வண்டிச்சோலை, சிங்காரதோப்பு ஆகிய இடங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மினி பஸ், அரசு பஸ், உள்ளூர் வாகனங்கள் மட்டும் தணிக்கைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன. வெளி மாவட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன் பகுதியில் குடியிருப்பவர்கள் தவிர உறவினர்கள் வரவோ, தங்கவோ அனுமதிப்பதில்லை. கடைகள், பொது இடங்கள், பஸ் நிறுத்தங்களில் தொடர்ந்து நிற்கவோ, நடமாடவோ அனுமதிக்காமல் போலீசாரால் அப்புறப்படுத்தப்படுகின்றனர்.
அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊட்டியில் இருந்து குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வெலிங்டன் பாதை குறுக்கு வழியாக உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போதைய தடை காரணமாக ஊட்டி, கோத்தகிரியிலிருந்து வரும் வாகனங்கள் சுற்றுப்பாதையில் குன்னூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டிஎஸ்பி மாடசாமி தலைமையில் ஆயுதப்படை மற்றும் சிறப்பு படை போலீசார் 160 பேர் குன்னூரின் நுழைவாயிலான லெவல் கிராஸ், பிளாக்பிரிட்ஜ், பெட்போர்டு, வெலிங்டன் ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறது. லாட்ஜ், ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire