இலங்கை தமிழர்களுக்கு கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் அதிகாரம் உள்ளிட்டவைகள் கிடைத்திட இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய மக்களவை உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார். அமெரிக்கா மக்களவை குழு அமைப்பு அழைப்பு விடுத்ததை ஏற்று அமெரிக்கா சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பைஜெயந்த் பாண்டா, சுப்ரியா சுலே, உதய்சிங், பிரதாப்சிங் பஜ்வா, பிரேம்தாஸ், பக்தசரண்தாஸ் உள்ளிட்ட எம்.பி குழுக்கள் அரசு முறை பயணமாக ஒரு வார காலம் அமெரிக்கா சென்றுள்ளனர். அதோடு, அங்குள்ள மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் பல்வேறு கருத்துக்கள் குறித்து கலந்தாய்வு செய்தனர்.
இதில், அமெரிக்கா நல்லுணர்வு மேம்பாடுவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து பரிமாறி கொள்ளப்பட்டது. இந்த கலந்துரையாடலின் போது மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவிக்கையில், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் நலனுக்காக இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக பேசினார். இலங்கை தமிழர்களுக்கு இந்தியா மேற்கொண்டு வரும் அடிப்படை வளர்ச்சிக் கட்டமைப்பு பணிகள் குறித்தும் அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
அதோடு, இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பாக குடியமர்த்தவும், அவர்களுக்கு கல்வி, பொருளாதார சுதந்திரம் கிடைத்திடவும், அதிகார பகிர்வு அளிக்கவும் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்க அரசும் இணைந்து செயல்பட்டு, இந்த முயற்சி பலனளிக்க தேவையான மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இதை இந்திய அரசின் பிரச்னை என்று கருதாமல், அமெரிக்கா அரசும் மனித நேயத்துடன் இப்பிரச்னையை அணுக வேண்டுமென்று மாணிக்கம் தாகூர் எம்.பி கேட்டுக் கொண்டார்.
அப்போது, உடன் அமெரிக்கா, இந்திய மக்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire