ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்றது.ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் குணபாலன், எக்கோநீஸ் ஆகியோருக்கு சொந்தமான 2 படகுகளில் 8 ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளையும் பறிமுதல் செய்து 8 மீனவர்களையும் சிறைபிடித்தனர். படகுகளுடன் இவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு விசாரணைக்காக இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.இத்தகவல் பரவியதும் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் சிறைபிடிப்பை தொடர்ந்து மீன் வளத்துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 படகுகளில் சென்ற மீனவர்கள் யார் என்பது குறித்த விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire