கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்)
அமெரிக்காவின் பிரபல்யமான கொள்கை பகுப்பாய்வாளரான ‘டாக்டர். பீட்டர் சாக்’ என்பவர் தனது ‘வெளிநாட்டில் புலிகள்’ (Tigers in Abroad) என்னும் ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘விடுதலைப்புலிகளின் வருடாந்த வருமானம் புலத்தில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 200-300 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இருந்தது. இதில் அவர்களின் போராட்டத்தை களத்தில் வழிநடத்திச் செல்ல ஏற்பட்ட மொத்த செலவீனம் ஒரு வருடத்திற்கு ஏறத்தாள 8 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. எனவே வருடத்திற்கு அவர்கள் ஏறத்தாள 198 மில்லியன் அமெரிக்க டாலர்களை நியம இலாபமாக பெற்றார்கள்’. இந்த கூற்றானது விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு புலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பினை மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டி நிற்கின்ற அதேநேரம் போராட்டத்திற்காக தேவைப்பட்ட நிதியின் அளவுப் பெறுமானத்தையும் கோடிட்டு நிற்கின்றது.
ஒருகட்டத்தில் முழு உலகிலுமே அதிக சக்திவாய்ந்த ஒரு பயங்கரவாத இயக்கமாக விடுதலைப் புலிகள் உருவெடுத்தபோது எல்லோர் உள்ளங்களிலும் எழுந்த கேள்வி இவர்களுக்கு பின்னணியாக இருந்து கொண்டு நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்துவரும் நாடு/நாடுகள் எது/எவை என்பதுதான். ஆனால் அதற்கு விடையாக புலத்தில் வாழும் தமிழர்கள்தான் என்ற யதார்த்தம் வெளிவந்தபோது அனைவருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஏனெனில் பொதுவாக இவ்வாறு உள்நாட்டு யுத்தம் நடைபெறுகின்றபோது அநேகமாக வெளியில் இருக்கும் பலமான நாடுகள் தான் இவ்வாறான போராட்ட இயக்கங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்குவதும் மறுபுறமாக பேச்சுவார்த்தைக்கான அழுத்தங்களைக் கொடுப்பதும் என்றவாறாக “பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவித்தல்” வழமையாகும். ஆனால் இங்கோ விடயம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே காணப்பட்டது. முழு உலகமுமே வியர்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த புலத்தில் வாழும் தமிழர்கள் இந்த போராட்டத்தை வழிநடத்த நிதி ரீதியாக உதவி வந்தனர். அதுவும் ஒருசில வருடங்கள் அல்ல; ஏறத்தாள மூன்று தசாப்தங்கள் அவர்கள் இந்த போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்தார்கள் என்பது உண்மையிலேயே யாவரையும் ஆச்சரியப்படவைக்கும் நிஜமாகும்.
தொடர்ந்தேர்ச்சியாக நீட்சிக்கப்பட்ட நிதிவழங்குகையில் இவர்கள் ஒருபோதும் மனம் சோர்ந்து விடவோ அல்லது மனம் சலித்துக்கொள்ளவோ இல்லை என்பதுதான் இங்கு கவனிக்கப்படத்தக்க மற்றோர் விடயமாகும். இந்த மூன்று தசாப்தங்களில் மொத்தம் எத்தனை நூறு கோடி ரூபாய்களை விடுதலைப் புலிகளுக்கு வாரி வழங்கியிருப்பார்கள் என்று யாரிடமுமே கணக்கு வழக்கு இருக்க முடியாது. அதிகமான வெளிநாட்டு ஆய்வாளர்களினாலும், கொள்கை வகுப்பாளர்களினாலும், அரசியல்வாதிகளினாலும் பார்த்து வியக்கப்பட்ட விடயம் இந்த புலம்பெயர் தமிழரின் போராட்டத்திற்கான நிதி தொடர்பான பங்களிப்புத்தான்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிலவிதமான நிதி மற்றும் ஆயுத உதவிகளை இந்தியா விடுதலைப் புலிகளுக்கு வழங்கி வந்தாலும் கூட குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தின் பின்னர் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தனிநபர்களை மையமாகக் கொண்ட பங்களிப்புகளே இந்த போராட்டத்திற்கு இந்தியாவிடம் இருந்து குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து கிடைத்தது என்பதுதான் யதார்த்தம். ஈழப்போராட்டம் இந்தியாவின் நலன்களுக்கும் அதன் அபிலாசைகளுக்கும் எதிராக திசைதிரும்பியபோது இந்தியா படிப்படியாக தனது சகலவிதமான ஆதரவுகளையும் நிறுத்திக்கொண்டது. எனவே ஒரு கட்டத்திற்கு அப்பால் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு முழுமையான நிதியை முன்னிறுத்திய பங்களிப்பு என்பது தாயகத்திலும் புலத்திலும் வாழ்ந்த தமிழர்களாலேயே வழங்கப்பட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆகவே அந்தப்போராட்டத்தில் முழுமையாகவே உரிமைகோரும் அந்தஸ்து மட்டுமல்ல; அதனால் ஏற்பட்ட அனைத்துவிதமான விளைவுகளுக்கும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சொந்தங்களும் பொறுப்புச் சொல்லவேண்டும் என்பதுதான் இங்கு சுட்டிக்காட்டவேண்டிய மற்றோர் அம்சமாகும்.
ஒரு நீண்ட நீடித்த யுத்தத்தின் பின்னால் நின்று கொண்டு ஈழக்கனவுடன் இந்த புலம்பெயர் தமிழ் மக்கள் செய்த அத்தனை தியாகங்களும் அவர்களின் கண்முன்னாலேயே நிர்மூலமாக்கப்பட்ட போதுதான் அவர்களின் அத்தனை முயற்சிகளும் வீணாக்கப்பட்டதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியுடன் கூடிய சோகமான முடிவானது இந்த புலம்பெயர் மக்களின் அத்தனை ஆசைகளையும் நிராசையாக்கியது. ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? அது எவ்வாறு ஏற்பட்டது? அதற்கான காரணம் என்ன? அதன் பின்னணி என்ன? இந்த நிலைக்கான பொறுப்பை யார் எடுப்பது? போன்ற கேள்விகளை கேட்டு அதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்துடன் கூடிய மீள்பார்வையினை செய்யக்கூடிய அளவிற்கு கூட முடியாதவர்களாக, எதிர்பார்ப்புகள் தகர்த்தெறியப்பட்டும் அதனை ஜீரணிக்கக்கூட இன்றுவரை இயலாதவர்களாகவும் இவர்கள் உள்ளனர். ஒரு சிறந்த கல்விச்சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த இலங்கைத் தமிழ் மக்கள் பலமான தமது பங்களிப்பினை தசாப்தங்களாக இவ் விடுதலைப் போராட்டத்திற்கு முன்னிறுத்தியும் ஏன் அந்த போராட்டத்தை தக்கவைத்து அதன் இலக்கினை அடைய முடியாமற்போனது? என்ற கேள்விக்கு மிகவும் சுலபமான பதில் ஒன்றுதான் இருக்கின்றது; அதுதான் போராட்டம் என்பது தனியே ஆயுதரீதியான யுத்தமும் அதனால் கிடைக்கும் வெற்றிகளுமே என போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் எண்ணியமையும்; அவர்களை சர்வதேச அரசியல் போக்குகளுக்கு ஏற்ப வழிநடத்த முடியாத ஒரு கையறு நிலையில் இந்த போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்தவர்கள் காணப்பட்டதுமாகும்.
தமக்கு கிடைத்த இராணுவ வெற்றிகளையெல்லாம் அரசியல் வெற்றியாக மாற்றும் திறனும் இராஜதந்திரமும் விடுதலைப்புலிகளிடம் அறவே இருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றி என்பது அதன் இராணுவ மற்றும் அரசியல் காய்நகர்த்தல்களிலேயே அதிகம் தங்கியுள்ளது. இவை இரண்டையும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தும் ஆற்றலும் திறமையும் அதனை வழிநடத்துபவர்களிடம் காணப்படல் வேண்டும். அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளில் தமக்கு சாதகமாகவும் சமமாகவும் எதிரியைக் கொண்டுவரும் நிலைமை ஏற்படும் வரையுமே ஆயுதப் போராட்டம் களத்தில் நடத்தப்படல் வேண்டும். அந்நிலை உருவான பின்னர் அந்த ஆயுத தளத்தில் அல்லது அந்த சமநிலையை வைத்து கொண்டு தமது இலக்கினை அடைய அரசியல் மற்றும் இராஜதந்திர உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். உண்மையில் இராணுவ வெற்றிகளின் மூலம் மட்டும் போராட்டம் வெற்றிபெற முடியுமாயின் இன்று தமிழீழம் கிடைத்து ஒரு தசாப்த காலம் நிறைவு பெற்றிருக்கும். காரணம் அந்தளவு தூரம் இராணுவ வெற்றிகள் 2000 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகளின் கைகளில் குவிந்திருந்தது. ஆனால் எந்த இராணுவ வெற்றியும் குறித்த இலக்கினை அடைவதற்கு துணைபோகாது வீண் போன அடைவுகளாகவே அமைந்தன.
விடுதலைப் போராட்டத்தின் வெற்றியின் யதார்த்தம் என்பது வெறுமனே இராணுவ தந்திரோபாயங்கள் மற்றும் இராணுவ வெற்றிகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படுபவை அல்ல என்பதை விடுதலைப்புலிகளின் தலைமைத்துவம் விளங்கிக் கொள்ளவும் இல்லை; விளங்கியவர்கள் அதனை எடுத்துச் சொல்லும் நிலையில் இருக்கவும் இல்லை. யுத்தத்தை முழுமையாக வழிநடத்திச் செல்ல சகல வழிகளிலும் உதவி செய்த புலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் இதுவிடயத்தில் பாரிய தவறொன்றை இழைத்தவர்களாகவே பார்க்கப்பட முடியும். காரணம் நிதியினை வசூலித்துக் கொடுப்பதுடன் தமது கடைமை முடிந்து விட்டதாகவே இவர்களில் பலரும் நினைத்தனர். அதுமாத்திரமின்றி, தாயகத்தை பெற்றுக்கொடுப்பது விடுதலை புலிகளின் கடமை என்றும் அதற்கான சகல வல்லமையும் அதன் தலைமைத்துவத்திடம் இருப்பதாக அதீத நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.
யுத்தகளத்தில் போராடி வெற்றிவாகை சூடி உயிர்தப்பியவர்களை தளபதிகளாகவும், மாண்டவர்களை மாவீரர்களாகவும், தப்பியோடி எதிரியுடன் சேர்ந்தவர்களை ஒட்டுக்குழுக்களாகவும், தூரே நின்று வேடிக்கை பார்த்தவர்களை துரோகிகளாகவும் பார்த்த இந்த புலம்பெயர் சமூகம் தனது பிரதான பணியில் பின்நின்றதால் ஏற்பட்ட விளைவினைத்தான் இன்று ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் அனுபவிக்கவேண்டியுள்ளது என்பதுதான் நிதர்சனமாகும். யுத்தத்தை ஆயுதரீதியாக வழிநடத்திச் செல்ல முன்வந்த இவர்கள் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் வழிநடத்த முன்வராமையானது ஒரு துரதிஸ்டமான நிகழ்வாகவே பலராலும் இன்று பார்க்கப்படுகின்றது. சிலவேளைகளில் அதுவிடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் கொண்டிருந்த இறுக்கமான நிலைப்பாடுகள் இவர்களை அவ்வாறான பணிகளில் இருந்து அந்நியப்படுத்தி இருக்கலாம் எனவும் நம்ப இடமுண்டு. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக மிக நீண்ட காலமாக செயற்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் (‘தேசத்தின் குரல்’ என அவரின் மரணத்தின் பின்னர் விடுதலைப் புலிகளினால் அழைக்கப்பட்டவர்) அவர்கள் அடிக்கடி பகிரங்கமாகவே கூறிய கூற்றான ‘ஆலோசனை வழங்குவது மட்டும்தான் எனது கடமை ஆனால் இறுதி முடிவு எடுப்பது தம்பியின் (பிரபாகரன்) கைகளிலேயே உள்ளது’ என்ற விடயத்தை இங்கு பதிவு செய்வது சாலப்பொருந்தும் என நினைக்கின்றேன்.
எது எவ்வாறாயினும் இன்று நிலைமைகள் முற்றுமுழுதாக மாறியுள்ளன. மீண்டுமொரு விடுதலைப் போராட்டம் ஆயுத வடிவில் முன்னெடுக்கப்படுவதற்கான அக மற்றும் புறக்காரணிகள் பாரியளவில் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. சிலவேளைகளில் அவ்வாறானதொரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் முன்னர் செய்தது போன்றதொரு பங்களிப்பினை செய்யும் நிலையில் இந்த புலம்பெயர் சமூகம் இருக்கின்றதா என்பதே இன்றுள்ள கேள்வியாகும். விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான வீழ்ச்சிக்குப் பின்னர் புலத்தில் வாழும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் இன்று பலதரப்பட்ட முன்னெடுப்புகள் சர்வதேச மட்டத்தில் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களின் செயற்பாடுகள் எல்லாமே புலத்தில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளன. தாயகத்தில் எதுவிதமான காத்திரமான முன்னெடுப்புகளையும் செய்யமுடியாத ஒரு இக்கட்டான நிலையில் அவர்கள் இன்று உள்ளார்கள். எனினும் அவர்களின் கடல்கடந்த செயற்பாடுகளானவை நேரடியாகவே தாயகத்தில் வாழும் உறவுகளின் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்புச் செய்யும் நிலை இன்று உருவாகியுள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இன்று இலங்கையின் அரசியலில் அதிகமாக பேசப்பட்டுவரும் 13 ஆவது திருத்த சட்டத்தினையும் அதனோடு தொடர்புபட்ட மாகாண சபைகளுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களையும் நாம் குறிப்பிடலாம்.
எனவே ஒரு விடுதலையை நோக்கிய ஆயுதப்போராட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ள நிலையில் நடைமுறையில் அதிகமாக பேசப்பட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டும் வருகின்ற ‘நல்லாட்சி’, ஜனநாயகம், மற்றும் ‘அடிப்படை மனித உரிமைகள்’ என்பவற்றின் அடிப்படையில் நின்றுகொண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கும் போராட்ட யுக்திகளை கையாளவேண்டிய கடப்பாடு இன்று இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றை அடியோடு நிராகரித்த நிலையில் நிதர்சனங்களை புறந்தள்ளிவிட்டு எடுக்கும் எந்த முயற்சிகளும் தாயகத்தில் வாழும் உறவுகளை மென்மேலும் பிரச்சினைகளுக்குள் தள்ளுகின்ற ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும்.
எல்லாவற்றையும் விட முக்கியமான விடயம்தான் இந்த புலம்பெயர் சமூகத்தின் இரண்டாம் தலைமுறையினர் இந்த விடயத்தை எவ்வாறு பார்க்கப்போகின்றார்கள் என்ற விடயமாகும். அவர்கள் பிறந்து வளர்ந்து வருகின்ற சூழலானது இவ்வாறான வன்முறைகளுடன் கூடிய போராட்டங்களை ஆதரிக்கின்ற விடயத்திற்கு ஒருபோதும் இடம்கொடுக்காது. அவர்களின் மனோபாங்கு, சிந்தனையோட்டம் என்பன இந்த முதல் தலைமுறையினரில் இருந்து முற்றிலும் வேறுபட்டதொன்றாகும். அவர்கள் இந்தநாட்டில் வாழ்ந்து பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு நேரடியாக முகம் கொடுத்தவர்கள் அல்ல; யுத்தத்திலும், இனக்கலவரங்களிலும் அகப்பட்டு நேரடி அனுபவத்தை பெறவில்லை; உறவுகளை இழந்து அல்லது தொலைத்து மன உளைச்சல்களுக்கு ஆளாகவில்லை; இந்த மண்ணின் மகிமை மற்றும் அதன் வாசனையை நுகராதவர்கள். எனவே இந்த அடுத்த தலைமுறையினர் எதிர்வரும் காலங்களில் இந்த போராட்டத்திற்கு எவ்விதமான பங்களிப்பினை செய்யப்போகின்றார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
சிலவேளைகளில் முதல் தலைமுறையினராகிய பெற்றோர் தமது கசப்பான அனுபவங்களையும் தமது மண்ணின் மீதான பற்றினையும் தமது தாயகத்தின் விடுதலையின் அவசியத்தையும் பிள்ளைகளுக்கு ஊட்ட முயற்சி செய்தாலும் ஒரு எல்லைக்கு அப்பால் அதனை செய்யமுடியாது என்பதுதான் யதார்த்தம். காரணம் இவர்களில் பெரும்பாலானோர் இன்று அந்த இரண்டாம் தலைமுறையினரின் உழைப்பிலும் பராமரிப்பிலும் வாழவேண்டிய ஓய்வுநிலையினை அடைந்து விட்டார்கள். எனவே தமது தங்கியிருத்தல் நிலையில் நின்றுகொண்டு எந்தளவு தூரம் இன்னுமொரு போராட்டத்திற்கு தாம் கடந்தகாலங்களில் செய்த பங்களிப்பினை செய்யமுடியும் என்பதுதான் அடுத்து வரும் கேள்வியாகும்.

Aucun commentaire:
Enregistrer un commentaire