மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் உள்ள மழைக்காடுகளுக்குள் மாயன்களின் நகரொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மாயன் இனத்தவரை அவ்வளவு சீக்கிரம் எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாயன்கள் அவர்களது நாட்காட்டி, உலக அழிவு என முழு உலகையுமே நடுங்கச் செய்திருந்தது அவர்கள் தொடர்பான செய்திகள் மற்றும் வதந்திகள்.
இந்நிலையில் மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் உள்ள மழைக்காடுகளுக்குள் மாயன்களின் நகரொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பல நூறு வருடங்களாக அடர்ந்த காட்டுக்குள் மறைந்து கிடந்த மேற்படி நகரின் மூலம் மாயன் இனம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு அழிந்து போனது தொடர்பில் தடயங்கள் கிடைக்குமென ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானம் மற்றும் கலைக்கான ஸ்லோவேனிய கல்லூரியின் துணைப் பேராசிரியரான ஐவன் ஸ்பிரஜக் தலைமையிலான குழுவினரே 'சசுடான்' எனப் பெயரிடப்பட்ட குறித்த நகரைக் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பகுதியில்15 பிரமிட்டுக்கள் (75 அடி உயரமான பிரமிட் ஒன்று அடங்களாக) , விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான மைதானங்கள், உயரமான செதுக்கப்பட்ட கற்தூண்கள், போன்றவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
எனினும் குவாத்தமாலாவில் உள்ள டிகல் எனப்படும் மாயன் நகரை விட குறைந்த அளவில் அதாவது சுமார் 30,000 - 40,000 வரையானோரே இங்கு வசித்திருக்கலாம் எனவும் ஸ்பிரஜக் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனோடு இப்பகுதியில் பல மைதானங்கள் காணப்படுகின்றமையானது இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவிக்கின்றது.
இப்பகுதியில் 600 மற்றும் 900 கி.பி. ஆண்டுக் காலப்பகுதியில் மாயன் நாகரீகம் வளம் பெற்று திகழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் ஸ்பிரஜக் கூறுகின்றார்.
இந்நகரானது 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாகவும் இப்பகுதிக்கு 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வந்திருக்கலாம் எனவும் அதற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஸ்பிரஜக் சுட்டிகாட்டியுள்ளார்.
இப்பகுதிக்கு வருவதற்கென 10 மைல் பாதையை 3 வாரமாக ஒழுங்குபடுத்த வேண்டியிருந்துள்ளது அதனோடு 6 வாரங்களாக இப்பகுதி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
இப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தினால் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மாயன் இனத்தவர்களின் பிரிவுகளுக்கிடையிலான உறவினை தெரிந்துகொள்ளமுடியுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களது ஆராய்ச்சியை மெக்சிகோவின் மானிடவியல் மற்றும் வரலாற்றுக்கான தேசிய நிலையம் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire