சீனா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அபிவிருத்தி செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியான ஏ9 வீதி, அபிவிருத்திப் பணிகள் நிறைவுபெற்று இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு வீதியினைத் திறந்துவைத்ததோடு வீதி அபிவிருத்திப்பணி நிறைவு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள பெயர் சின்னத்தினையும் திறந்துவைத்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த புனரமைப்புப் பணிகள் கடந்த மே மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
153 கிலோ மீற்றர் கொண்ட இந்த வீதி புனரமைப்பின் போது 35 பாலங்களும் 273 மதகுகளும் புனரமைக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி, அரச அதிபர்கள், யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள், இராணுவப் படையதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire