“இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இலங்கை மீறுவதாக இந்தியா கருதுமானால் அது பெரும் கேலிக்கூத்து. முதலில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறியதே இந்தியாதான். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர்கள் அழைத்து ஒப்பந்தத்தைப் பற்றித்தான் பேசுவார்களாக இருந்தால் அதைவிடக் கேலிக்கூத்து வேறெதுவும் இருக்கமுடியாது.”
இவ்வாறு கருத்துத் தெரிவித்தார் வீடமைப்புத் துறை, நிர்மாண அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறித்தும் “13′ ஆவது திருத்தம் குறித்தும் அங்கு பேசப்படவுள்ளமை தொடர்பிலும் வெளிவந்திருக்கும் செய்திகள் பற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைப்பது பற்றியோ அங்கு எதனையும் பேசுவது பற்றியோ எமக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுகிறது என்ற விடயம்தான் அவர்களின் பேச்சுக்கு அடிப்படையாக இருக்குமாயின் அதைவிடக் கேலிக்கூத்து வேறெதுவும் இருக்கமுடியாது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாதான். அதுவும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒருவார காலத்துக்குள் மீறியது. புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவது, அவர்களைச் சரணடையச் செய்வது என்று கூறி அதற்கான பொறுப்பையும் இந்தியா ஏற்றிருந்தது.
ஆனால், ஆயுதங்களை இந்தியாவால் எடுக்கமுடியாமற் போனது. எனவே, ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாதான்.
எனவே, அவர்களே மீறிய ஒப்பந்தத்தை நாங்கள் மீறுவதாகக் கூறிக்கொண்டு தமிழ்க் கூட்டமைப்பை அழைத்துப் பேச்சு நடத்துவார்களாயின் அதைவிடக் கேலிக்கூத்து வேறு எதுவுமில்லை. அவர்களால் திணிக்கப்பட்ட ஒப்பந்தம் அவர்களாலேயே மீறப்பட்டது என்பதுதான் உண்மை என்றார் அமைச்சர் விமல் வீரவன்ஸ.
“இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாதான். அதுவும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒருவார காலத்துக்குள் மீறியது. புலிகளிடமிருந்து ஆயுதங்களைக்களைவது, அவர்களைச் சரணடையச் செய்வது என்று கூறி அதற்கான பொறுப்பையும் இந்தியா ஏற்றிருந்தது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை”
Aucun commentaire:
Enregistrer un commentaire