ஜம்மு - காஷ்மீரில் வெள்ள பாதிப்பு பகுதியில், முப்படையினருடன் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து நடத்திய மீட்புப் பணியில் இதுவரை 25,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 லட்சம் பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பெருவெள்ளத்தின் தாக்கத்தில் பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், இடைவிடாமல் 24 மணி நேரமும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்ப்போது ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் மீட்புப் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மட்டும் 4 லட்சம் பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்தம்பூர் மாவட்டம், பஞ்சேரி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த மேலும் இரண்டு குழுவினர் வான்வழியாக இறக்கிவிடப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 30 பேரை காணவில்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், கூடுதல் ஹெலிகாப்டர்களும், படகுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஜம்முவை பொருத்தவரை ஒரு சில இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இப்போது அங்கு நிவாரண முகாம்கள் அமைப்பதில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர இரவோடு இரவாக நிவாரணப் பொருட்களும், குடிதண்ணீர், மருந்து உள்ளிட்ட பொருட்களும் ஹெலிகாப்ட மூலம் பெருமளவில் அனுப்பப்பட்டுள்ளன.
"மீட்புப் பணிகள் குறித்து ராணுவ லெப்டினண்ட் சேத்தன் கூறுகையில்: "ஒரு படகில் ஒரு முறை 10 முதல் 15 பேர் வீதம் மீட்கப்படுபின்றனர். இது மாதிரியாக ஒரு நாளில் 60 சுற்றுகள் படகுகளை பயன்படுத்துகிறோம். மேலும், மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் எங்களிடம் இருக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரையும் பத்திரமாக மீட்ட பின்னரே இங்கிருந்து செல்வோம்" என்றார்.
ராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங்கும், வெள்ளத்தில் சிக்கியுள்ள கடைசி நபர் மீட்கப்படும் வரை ராணுவ வீரர்கள் அங்கிருந்து திரும்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஏற்பாடுகள் குறித்து ராணுவ மருத்துவர் ஜக்தீஷ் சிங் கூறுகையில்: "மருத்துவ முகாம்களில் நாளொன்றுக்கு 230 முதல் 300 பேர் வரைக்கும் சிகிச்சை பெறுகின்றனர். தேவையான அளவு ஆம்புலன்ஸ் உள்ளன. அறுவை சிகிச்சை நிபுணர்களும் உள்ளனர் என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire