
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி மூன்று பிள்ளைகளின் தந்தையான அயலவரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூரமான சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் இன்று வியாழனன்று அதிகாலை பதுளை மாவட்டம் பதியத்தலாவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி இறந்திருக்கும் இந்த சிறுமி அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் மூன்றாம் வகுப்பு மாணவியுமாவார்.

காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராக வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு நீதிமன்றம் முன்பாக இன்று நண்பகல் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சந்தேக நபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
நேற்று புதன்கிழமை மாலை அந்த பகுதியில் மழை பெயது கொண்டிருந்த வேளை சிறுமியின் உறவினரொருவரின் கடைக்கு வந்திருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த சந்தேக நபர் வீடு திரும்புவதற்கு குடையொன்றைக் கொடுத்து உதவிய உறவினர், இந்த சிறுமியையும் கூடவே அனுப்பி அந்த நபரை அவரது சகோதரியின் வீட்டில் விட்டுவிட்டு, குடையுடன் திரும்புமாறு கூறி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இப்படி அனுப்பப்பட்ட சிறுமி இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் குடும்பத்தினரும் அயலவர்களும் தேடிப்பார்த்தபோது சந்தேக நபரது சகோதரியின் வீடு மூடப்பட்டிருந்ததாகவும், சந்தேகம் கொண்டு வீட்டுக்கதவை உடைத்துப் பார்த்தபோது சிறுமி கைகால்கள் மற்றும் வாய் கட்டப்பட்டு கட்டிலுக்கு கீழே மயக்கமான நிலையில் பை ஒன்றினுள் போடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுயஉணர்வற்ற நிலையில் மீட்கப்பட்ட அந்த சிறுமி உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சந்தேகநபர் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி பிறகு அவரை கொலை செய்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire