இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ், பாஜக வெளிநாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜாலி ஆகியோர் புதன்கிழமை இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் தொடக்க விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் பாஜக சார்பில் முரளிதரராவ், விஜய் ஜாலி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக அவர்கள் இருவரும் புதன்கிழமை மாலை கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
இந்த மாநாட்டில் 40 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 360 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஆசியாவின் வளர்ச்சி குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் பாஜக தலைவர்கள் பங்கேற்கும் தகவலை அவர்கள் கொழும்பு புறப்பட்டுச் சென்ற பிறகே பாஜக வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக ராஜபட்சவை தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்நாட்டுடன் நல்லுறவைப் பேணி வருகிறது.
தில்லியில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச பங்கேற்றதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பாஜ தலைவர்களின் இலங்கை பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர்களிடம் கேட்டபோது, ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே பாஜக தலைவர்கள் இலங்கை சென்றுள்ளனர். அதில் எந்தத் தவறும் இல்லை என்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire