விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பொட்டு அம்மான் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டார் என்ற தகவலை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. மேலும் அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இலங்கையில் உள்ள சில தமிழ் மற்றும் ஆங்கில வலைதளங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மான் ஹாங்காங் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாயின. இந்தத் தகவலை மறுத்துள்ள இலங்கை ராணுவத்தின் செய்தித்தொடர் பாளர் ருவான் வனிகசூரியா கூறியதாவது: "ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய பொட்டு அம்மான் இன்டர்போல் போலீஸ் தேடும் குற்றவாளிகளின் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் இலங்கை ராணுவத்துடன் நடந்த இறுதிப் போரில் உயிரிழந்து விட்டார். இறுதிப் போருக்குப் பிறகு எங்களிடம் சரணடைந்த பலர் பொட்டு அம்மான் இறுதிப் போரில் கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறினர். எங்களால் அவரின் உடலைக் கைப்பற்ற முடியாமல் போனது. எனினும் அவர் இறந்துவிட்டது நிச்சயம்" என்றார். தங்கள் அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் யாரேனும் இந்த வதந்தியைப் பரப்பியிருக்கலாம் என்று இலங்கை ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire