பிரிவினைக்கு எதிராக 55.30% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.70% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில், டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் மட்டுமே ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிந்து செல்லவேண்டும் என்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.மீதமுள்ள 28 உள்ளூராட்சி மன்றங்களின் வாக்காளர்களின் பெரும்பான்மையானவர்கள் ஸ்காட்லாந்து பிரிந்து செல்லக்கூடாது என்றே வாக்களித்திருந்தனர். இதில் ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பரா வாக்காளர்களும் பிரிவினைக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். எடின்பரா வாக்காளர்களில் 61.10 சதவீதம் பேர் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 20,01,926 பேரும், ஸ்காட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,617,989 பேரும் வாக்களித்திருந்தனர். இரு தரப்பாருக்கும் இடையில் 3,83,937 வாக்குகள் வித்தியாசம் இருக்கின்றன.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததைவிட, பிரிவினையை எதிர்ப்பவர்களின் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்திருப்பதை இன்று வெளியான இறுதிமுடிவுகள் காட்டுகின்றன.நேற்று வியாழக்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் வாக்களிக்க தகுதிபெற்ற மொத்த வாக்காளர்கள் 42,83,392 பேர். இதில், 84.59 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஸ்காட்லாந்தின் வாக்குப்பதிவு வரலாற்றில் மிக அதிக சதவீத வாக்குப்பதிவாக கருதப்படும் இந்த கருத்தெடுப்பில் 3,429 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்காட்லாந்துக்கான அதிகார பகிர்வு தொடர்பான சட்டமுன்வடிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்று பிரிட்டனின் மூன்று கட்சிகளும் கூட்டாக உறுதியளித்திருந்ததை நினைவுபடுத்திய அலெக்ஸ் சால்மண்ட், அதற்கான நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு உடனடியாக துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire