mercredi 3 septembre 2014

ராஜபக்சே வாக்குறுதியை மீறிவிட்டார்.முன்னாள் முதல்-மந்திரி வரதராஜ பெருமாள்

இலங்கை தமிழர்கள் வளர்ச்சி பெற 13-வது சட்டத்திருத்தத்தை சரியாக அமல்படுத்த வேண்டும் என்று இலங்கை வடக்கு -கிழக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி வரதராஜ பெருமாள் கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி

இலங்கை வடக்கு-கிழக்கு மாகாண தமிழர்கள் பகுதியில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக இருந்தவர் வரதராஜ பெருமாள். நேற்று ஈரோடு வந்த வரதராஜ பெருமாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோட்டில் உள்ள எனது முன்னாள் நண்பர்களை பார்ப்பதற்காக வந்தேன். அவர்களோடு இன்றைய அரசியல் நிலமை குறித்தும் கலந்துரையாடினேன். இலங்கையில் 2009-ம் ஆண்டு பெரும் யுத்தத்துக்கு பின்னர் இந்திய அரசு உள்பட பல்வேறு நாடுகளின் உதவியுடனும், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடனும் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
13-வது சட்டத்திருத்தம்
அதே நேரம் இலங்கையில் இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் 13-வது சட்ட திருத்தத்தை சரியாக அமல்படுத்த வேண்டும். இதனை இந்தியாவில் ஏற்கனவே இருந்த அரசும், தற்போதைய அரசும் வலியுறுத்தி வருகின்றன. இதில் இன்னும் தீவிரம் காட்டி 13-வது சட்டத்திருத்தத்தை சரியாகவும் முழுமையாகவும் அமல்படுத்த வேண்டும். இலங்கை தமிழர்களின் வளர்ச்சிக்காக இலங்கை அரசு இதை செய்ய வேண்டும். இதை செய்ய வைக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கும் உண்டு. 13-வது சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் இலங்கையில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
மீனவர்கள் பேசவேண்டும்
பாக் நீரிணையில் மீன்பிடிப்பது தொடர்பாக 1974-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் இன்றும் அப்படியேதான் இருக்கிறது. தமிழக-இலங்கை மீனவர்கள் பாக் நீரிணையில் மீன்பிடிக்கும் அடிப்படை உரிமையை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது. எந்த நாட்டு மீன்பிடிகாரரையும் கைது செய்வது, சுடுவது போன்ற நடவடிக்கைகளை இருநாடுகளும் விடவேண்டும். தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை வலைகளால் மீன்வளம் குறைகிறது. கடல் வளத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு இரு தரப்பு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். மரபுரீதியாக 2 தரப்பினரும் மீன்பிடிக்க வேண்டும். மீன்பிடித்தல் தொடர்பானது தவிர எல்லை பிரச்சினைகள் பாதுகாப்பு பிரச்சினைகளை 2 நாடுகளும் பேசி தீர்க்க வேண்டும்.
ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கும்போது அந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி எடுக்கிறார்கள். ஆனால் ராஜபக்சே இந்த வாக்குறுதியை மீறிவிட்டார். இலங்கையில் சிக்கல்களுக்கு இதுதான் காரணம். எனவே இந்திய அரசு, இலங்கையில் அரசியல் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்த வேண்டும். இல்லை என்றால் இதுபோன்ற நெருக்கடியான நிலைதான் இருக்கும்.
ராணுவம்
இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடங்கி விட்டது. இனி அது தொடர்ந்து நடைபெறும். இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவம் குறைக்கப்பட வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளால், அவர்களின் நடமாட்டங்களால் மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். ராணுவத்துக்கு அதிகமாக பணம் செலவிடப்படுகிறது. எனவே பொருளாதார ரீதியாக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ராணுவத்துக்காக செலவிடுவதை குறைத்து கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வெளி நாடுகள் எந்த வகையான உதவிகள் செய்தாலும் அது கடன்தான். ராணுவத்துக்கு வழங்கும் முக்கியத்துவத்தை விட உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை தமிழர் பகுதியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் செய்யும் உதவிகளுக்காக நிதிகளை வேறு திட்டங்களுக்காக செலவிட முடியாது. காரணம் அங்கு தூதர்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அதே நேரம் கண்டோன்மென்ட் முறையில் ஆங்காங்கே ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு
தமிழ்நாட்டில் உள்ள 7½ கோடி தமிழர்கள் எங்களுக்கு தரும் ஆதரவு நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்துகிறது. அதே நேரம் எங்களுக்கு ஆதரவாக நீங்கள் இங்கே ஒரு புத்த பிக்குவை (புத்த சாமியார்) தாக்கினால் இலங்கையில் 1000 பிக்குகள் சிங்கள அரசுக்கு ஆதரவாக மாறுவார்கள். நீங்கள் 15 கிரிக்கெட் வீரர்களை திரும்ப அனுப்பினால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிராக மாறுவார்கள். அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இலங்கை வடக்கு-கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதல்-மந்திரி வரதராஜ பெருமாள் கூறினார்.
முன்னதாக அவரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வி.பி.குணசேகரன், திருநாவுக்கரசு மற்றும் டாக்டர் ஜீவானந்தம் உள்பட பலர் சந்தித்து பேசினார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire