இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு அப்பால் உள்ள ஏழு தீவுகளில் ஒன்றாகிய நெடுந்தீவை, உல்லாச பயணிகளைக் கவரக் கூடிய ஒரு நிலையமாக உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து நடைபெறும் பணிகள் காரணமாக, அந்தத்தீவின் மரபுரிமைச் சொத்தாகக் கருதப்படும், அங்கு காணப்படுகின்ற குதிரைகள் பாதிக்கப்படுமோ என்று அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
உல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலையமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தொல் பொருள் திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கிருந்து ஆறு குதிரைகள், திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுடன் படையினரால் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக நேரில் கண்டவர்கள் முறையிட்டிருப்பதாக நெடுந்தீவைச் சொந்த இடமாகக் கொண்டவரும், வடமாகாண சபை உறுப்பினருமாகிய விந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த 600 வருடங்களாக அங்கு குதிரைகள் காணப்படுவதாகவும், அவற்றை அங்குள்ள மக்கள் சவாரி செய்வதற்கும், மாடுகள் கலைப்பதற்கும் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அத்துடன் அங்கு செல்கின்ற உல்லாசப் பயணிகளுக்கு இயற்கைச் சூழலில் அந்தக் குதிரைகள் மகிழ்ச்சியூட்டுவதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இந்தக் குதிரைகளைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை மாகாண சபையின் ஊடாக மேற்கொள்ளவுள்ளதாகவும் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
சரணாலயம் நெடுந்தீவை உல்லாசப் பயணிகளுக்கான ஒரு நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதை உறுதிப்படுத்திய வடமாகாண விவசாயத்துறை அமைச்சரும், சூழலியலாளருமாகிய ஐங்கரநேசன், குதிரைகளுக்கான ஒரு சரணாலயத்தை அமைப்பதற்கென 500 ஹெக்டர் காணியை ஒதுக்கித்தருமாறு வடமாகாண சபையிடம் கோரப்பட்டதையடுத்து, அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
நிலத்தடியின் கீழ் சுண்ணாம்புப் பாறைகளையும் சுரங்கங்களையும், நீரோட்டங்களையும் கொண்டுள்ள நெடுந்தீவில் உல்லாசப் பயணிகளுக்கான மாடிக்கட்டிடங்களைக் கொண்ட ஐங்கரநேசன் தெரிவித்தார்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினரால் நெடுந்தீவில் அமைக்கப்பட்ட உயரமான தண்ணீர்த்தாங்கிக் கட்டிடம் ஒன்று அண்மையில் இடிந்து வீழ்ந்துள்ளது. நிலத்தடியில் உள்ள சுண்ணாம்புப் பாறைகள் இடிந்து வீழ்ந்ததன் காரணமாகவே இந்தக் கட்டிடமும் இடிந்து வீழ்ந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்திருப்பதாகவும் ஐங்கரநேசன் கூறினார்.
இந்த நிலைமையில் பெரிய அளவில் நெடுந்தீவை ஓர் உல்லாசப் பயணிகளுக்கான சேந்திர நிலையமாக மாற்றுவது சந்தேகமே என தெரிவித்த அவர், அங்குள்ள புராதன சின்னங்கள் சில பௌத்த மதத்துடன் சம்பந்தப்பட்டவை எனக் கூறி சொந்தம் கொண்டாடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிப்பதனால், நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்பாட்டில் அரசியல் பின்னணியும் கலந்திருப்பதாக சந்தேகிக்க நேர்ந்திருக்கின்றது என்றும் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire