samedi 1 juin 2013

மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சம்!தமிழகத்தின்

தமிழகத்தில் எடுக்கப்பட்ட 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கடந்த 10 ஆண்டுகளில் 97 லட்சம் மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி தெரிவித்தார். 2011–ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய புள்ளி விவர பட்டியலைஇ சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் தமிழ்நாடு இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் வெளியிட, பத்திரிகை தகவல் தொடர்பு துறை இணை இயக்குனர் எம்.வி.எஸ்.பிரசாத் பெற்றுக் கொண்டார். பின்னர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ், நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 9–ந் திகதி முதல் பெப்ரவரி 28–ந் திகதி வரை நாடு முழுவதும் கணக்கெடுப்பு பணி நடந்தது. தொடர்ந்து அதே ஆண்டு மார்ச் 1–ந் திகதி முதல் 5–ந் திகதி வரை மீண்டும் சரிபார்ப்பு பணியும் நடந்தது.
இதற்காக 29 கேள்விகள் அடங்கிய குடும்ப அட்டவணையில், கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக சென்று உரிய தகவல்களை சேகரித்தனர். தமிழகத்தில் இந்தப்பணியில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கணக்கெடுப்பாளர்களாகவும், 19 ஆயிரம் பேர் மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றினர். இதுதவிர கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், தாசில்தார், நகராட்சி ஆணையாளர்களும் பொறுப்பு அதிகாரிகளாக செயல்பட்டனர்.
2011–ம் ஆண்டு கணக்கெடுப்பு படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975, பெண்கள் 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 ஆகும். நகரப்பகுதியில் 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 440 எனவும், கிராம பகுதியில் 3 கோடியே 72 லட்சத்து 29 ஆயிரத்து 590 எனவும் மக்கள் தொகை பதிவாகியுள்ளது.
2001–ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை கடந்த பத்து ஆண்டுகளில் 97 லட்சம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. கிராமப்பகுதியில் 23 லட்சமும், நகரப்பகுதியில் 74 லட்சமாகவும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
தற்போதைய கணக்கெடுப்பின் படி ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 555 மக்கள் வசிக்கின்றனர். இது 2001–ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 75 புள்ளிகள் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தியில் முதல் மூன்று இடங்களை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டங்கள் பிடித்துள்ளன. கடைசி இடத்தை பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் பெற்றுள்ளன.
அதே நேரம் கடந்த 10 ஆண்டுகளில் 8.7 லட்சம் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தும், 9.7 லட்சம் விவசாயக்கூலி வேலைசெய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், வீட்டில் செய்யும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சமாக குறைந்தும் மற்றும் மற்ற வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்து பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire