mardi 4 juin 2013

மீண்டும் மீண்டும் முட்டாளாகப் போகிறது இந்தியா – ஆங்கில ஊடகம்

இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்தபடி, வடக்கு மாகாணசபைத் தேர்தலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் செப்ரெம்பரில் நடத்தமாட்டார் என்றும், மீண்டும் இந்தியா முட்டாளாகப் போவதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

வடக்கு மாகாணசபைக்கு வரும் செப்ரெம்பரில் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதற்கான வழிகளை சிறிலங்கா அதிபர் தேடிக் கொண்டிருப்பதாக அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில், அதுவரை வடக்கு மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவது குறித்து சிறிலங்கா அதிபர் சிந்திப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. 

காணி, காவல்துறை அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால், தெற்கிலுள்ள மக்கள் அதற்கெதிராகப் போராட்டம் நடத்துவார்கள் என்றும், அது அதிபர் தேர்தல் பரப்புரைகளைப் பாதிக்கும் என்றும் மகாநாயக்க தேரர்கள், சிறிலங்கா அதிபரை எச்சரித்துள்ளனர். 

அதேவேளை, வடக்கு மதாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய சுதந்திர முன்னணியும், ஜாதிக ஹெல உறுமயவும் தெரிவித்து வரும் எதிர்ப்புகளை சிறிலங்கா அதிபர் கவனத்தில் கொள்ளவில்லை. 

இதனால் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச விசனமடைந்து, அவர்களின் ஆலோசனையை தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு சிறிலங்கா அதிபருக்கு ஆலோசனை கூறும்படி மகாநாயக்க தேரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்தநிலையில் தேர்தலை நடத்துவதை பிற்போடுவதற்கு மாற்று வழியாக, நீதிமன்ற உத்தரவு ஒன்றைப் பெறுவதற்கும் சிறிலங்கா அதிபர் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். 

வடக்கில் உள்ள எல்லா வாக்காளர்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் வாக்களார் பட்டியலை திருத்தும் வரை, தேர்தலைப் பிற்போடும்படி, கோரும் மனுவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, தலைமை நீதியரசரின் துணையுடன் தேர்தலைப் பிற்போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அதேவேளை சிறிலங்கா அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்காரவும், ராஜித சேனாரத்னவும் வடக்கில் தேர்தலை நடத்தாது போனால் அது கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர் என்றும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire