lundi 1 juillet 2013

தமிழ்நாட்டின் துரத்திய சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு பாகிஸ்தானின் குவேட்டாவில் பயிற்சி

தமிழ்நாட்டின் வெலிங்டன் பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில், பயிற்சியைத் தொடரமுடியாமல் வெளியேறிய இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளும் பாகிஸ்தானுக்குப் பயிற்சிக்காக அனுப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
சிறிலங்காப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்புகள் வலுத்ததால், இந்திய மத்திய அரசு வெலிங்டனில் பயிற்சி பெற்று வந்த மேஜர் சன்ன ஹரிஸ்சந்திர, விங்கொமாண்டர் சாந்த திசநாயக்க ஆகியோரை செகந்தராபாத்தில் பயிற்சி அளிக்க இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்தது. 
ஆனால் அதனை நிராகரித்து விட்டு, இரு படை அதிகாரிகளையும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்புக்குத் திருப்பி அழைத்திருந்தார். 
இருவருக்கும் வேறெங்காவது இதே பயிற்சியைத் தொடர ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 
இந்தநிலையில், கொழும்பு வந்திருந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் இதுகுறித்து ஆராய்ந்ததாகத் தெரிகிறது. 
இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள குவேட்டாவில் கட்டளை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு, இருபடை அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இதுகுறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கான சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை. 
குவேட்டாவில் உள்ள கட்டளை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியே, பாகிஸ்தான் இராணுவத்தின் மிகப்பழமையானதும் கௌரவமானதுமான பயிற்சிக் கல்லூரியாகும். 
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், குவேட்டாவில் இருந்த பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் கல்லூரி, இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது, தமிழ்நாட்டின் வெலிங்டனுக்கு மாற்றப்பட்டது. 
அதன் பின்னரே குவேட்டாவில் கட்டளை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி செயற்படத் தொடங்கியது. 
பிரித்தானியாவின் பீல்ட் மார்சல் வவெல், பீல்ட் மார்சல் மொன்ட்கொமெரி, பீல்ட் மார்சல் ஓசின்லெக், பீல்ட் மார்சல் சிலிம், மற்றும் அவுஸ்ரேலியாவின் பீல்ட் மார்சல் பிளார்னே, பாகிஸ்தானின் பீல்ட் மார்சல் அயுப் கான், இந்தியாவின் பீல்ட் மார்சல் மானெக்சோ ஆகிய புகழ்பெற்ற இராணுவ அதிகாரிகள் குவேட்டாவில் தான் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire