விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கை இந்திய ஒப்பந்த்தின்படி இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவேன் என்று சொல்லியே மகிந்த ராஜபக்ஸ போரை தொடங்கி மாபெரும் அழிவுகளை நிகழ்த்தினார். தமிழர்களுக்கு சிங்கள அரச தலைவர்கள் எந்தத் தீர்வையும் வழங்கமாட்டார்கள் என்ற நிலையிலேயே தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற அளவுக்கு ஜனநாயக அரசியலில் ஏற்பட்ட பின்னடைவே ஆயுதப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. ஏதுவுமற்;ற 13 ஐ வைத்து மாபெரும் போர் நடத்தப்பட்டதோ அந்தப் 13ஐயும் இல்லாது ஒழித்துக் கட்டுகிற வேலையில் இனவாத அணியினர் இறங்கியுள்ளனர்.
இலங்கை அரசு போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் எந்தத் தீர்வையும் முன் வைக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக காலத்தை இழுத்தடிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடரில் அதிகாரங்களைப் பகிருவது மற்றும் வடக்கில் தேர்தல் நடத்துவது தொடர்பில் இலங்கைக்கு பணிக்கப்பட்டது. இலங்கைமீது எந்த பணிப்புக்களையும் நிகழ்த்த முடியாது என்று இலங்கை இறுமாப்பாக இருக்கின்றது. இலங்கையின் யுத்த கால நிகழ்வுகள் மற்றும் போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு இடையில் இன்றும் இன அழிப்பும் நில அபகரிப்பும் இலங்கை அரசால் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படும் நிலையில் 13 அழிக்கும் போர் உக்கிரமடைந்து வருகிறது.
எதிர்க்கும் இனவாத அணி
13ஆவது திருத்தச் சட்டத்தை முதலில் எதிர்த்தவர்கள் ஜனாதிபதி ராஜபக் ராஜபக்ஸ குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். அவர்கள்தான் காணி அதிகாரமும் காவல்துறை அதிகாரமும் தேவையில்லை என்றும் தமிழ் மக்களை ஜனாதிபதி பார்த்துக் கொள்ளுவார் என்றும் சொன்னார்கள். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அதை நடைமுறைப்படுத்துவதனால் இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தோன்றும் என்றும் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். ஆனால் 13 என்று இறுதியாக இருக்கும் சிறு தீர்வையும் அழிக்கும் பட்சத்தில்தான் இலங்கையில் மீண்டும் போராட்டம் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தமிழரை இலங்கைத்தீவிலிருந்து முற்றாக அழிக்க நினைக்கும் இனவாதியான கோத்பாய உள்ளிட்டவர்கள் தமிழர்களுக்கு சிறு அதிகாரத்தை வழங்கினாலும் உயிர்த்தெழுவார்கள் என அஞ்சுகின்றனர்.
இன்று சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாத அமைப்புக்கள் பலவும் பலவிதமான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன். ராவண பலய முஸ்லீம் மக்களுக்கு எதிராக தெருத் தெருவாக இறங்கி அடக்குமுறைகளை மேற்கொள்ளுகிறது. பொதுபால சேன தமிழ் மக்களுக்கு சிறு அதிகாரமும் வழங்கக் கூடாது வடக்கில் தேர்தலும் நடத்தக்கூடாது என்று தொடர்ந்து தாக்கிக்கொண்டிருக்கிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ராஜபக்ஸவின் நெருங்கிய நண்பர்களான விமல் வீரவன்சவும் சம்பிக்க ரணவக்கவும் 13ஆவது அரசியல் திருத்ததை அழிக்க வேண்டும் என்றும் காணி காவல் துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என்றும் தமது தீவிர இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
மாகாண சபை அதிகாரங்களுக்கு எதிராக விமல் வீரவன்ச இலங்கை முழுவதும் பத்து லட்சம் கையெழுத்துக்களை திரட்டி மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கியிருக்கிறார். இது இப்படியிருக்க வடக்கில் தேர்தல் நடத்தினால் ஆயிரம் பிக்குகள் தீக்குளிப்பார்கள் என்று பொதுபலசேனா அதிரடியாக அறிவித்திருக்கிறது. இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நடவடிக்கை உச்சமடைவதைப் பார்த்தால் நாளை தமிழர்களை அழிக்காவிட்டால் தீக்குளிப்போம் என்றும் வடக்கில் மழை பெய்தால் தீக்குளிப்போம் என்றும் பிக்குகள் எச்சரிக்கும் நிலமையும் ஏற்டபலாம். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்த வித்திலும் தீர்வாக 13 அமையாது என்றும் 13 தீர்வு என்கிற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஆதரிக்கவும் ஒரு அணி
இலங்கை அரசிற்குள் இருந்து கொண்டே பலத்த எதிர்ப்புக்கள் வரும் பொழுது அதே அரசிற்குள் இருந்து கொண்டே 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் வடக்கு மகாண தேர்தலுக்கும் ஆதரவுக் குரல்கள் எழுகின்றன. அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் என்றும் வடக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும் என்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ராஜபக்ஸ கிளிநொச்சியில் வைத்து தெரிவித்தார். இலங்கை அரசு சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏதாவது இரண்டு அதிகளை சேர்த்தோ அல்லது அகற்றியோ தேர்தல் நடைபெறும் என்றும் ஹெகலிய ரம்புக்வெலவும் தெரிவித்துள்ளார்.
13இல் கை வைத்தால் பதவியையும் துறப்பேன் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருக்கிறார். அதைப்போல இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்காரவும் வடக்கின் தேர்தலையும் அதிகாரங்களையும் அவசியம் என்று தெரிவிக்கின்றார். 13ம் மாற்றம் ஏற்படுத்துவதையும் அவர் எதிர்த்துள்ளார். வடக்கில் தேர்தலை நடத்தவேண்டும் என்று சொல்லும் ராஜபக்சவின் சில முற்போக்கு அமைச்சர்கள் அணியினர் நாட்டின் பாதுகாப்புக் கருதி ஏதாவது அதிகாரங்களை நீக்கினால் அதை தாம் எதிர்க்க மாட்டோம் என்றும் சொல்லுகின்றனர்.
13தான் ஜனாதிபதி முன் வைத்த தீர்வு என்றும் அதை நீக்கினாலோ, திருத்தினாலோ மீண்டும் இன முரண்பாடு ஏற்படலாம் என்று ராஜபக்ஸவின் நிழலில் வளர்ந்த பிள்ளையானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. 13 வேண்டாம் 19ஆவது திருத்தமே தேவை என்று மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் அதிகாரங்களை கொடுக்கும் தீர்வு அடங்கிய ஒன்றை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடையாளம் காட்டுகின்றார்;.
அதிகாரங்களை பறித்து தேர்தலை நடத்த மக்கள் விடுதலை முன்னணி எனும் ஜே.வி.பி கட்டளையிடுகிறது. இவைகளுக்காகவே ஒரு முற்போக்கு அணியை தயார் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. தவிரவும் 13இல் ஏதோ இருக்கிறது என்றும் 13 தமிழர்களுக்கு கொடுக்கக்கூடிய உயர்ந்த தீர்வு என்ற தோற்றங்களும் இதனால் உருவாக்கப்படுகின்றன.
கூட்டமைப்பின் நம்பிக்கை
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியம், சுய நிர்ணய உரிமை, மரபு வழித்தாயகம் என்கிற அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய ஒரு தீர்வுக்கே இணங்குவோம் என்று தேர்தலில் தமிழ் மக்களிடம் வாக்களித்தது. தவிரவும் வடக்கும் கிழக்கும் இணைந்த மரபு வழித்தாயகம் என்ற விடயத்தையும் வாக்களித்தது. இப்பொழுது பிரிக்கப்பட்ட மாகாணத்தில் போட்டியிட தீர்மானித்த கூட்டமைப்பு அதிகாரங்கள் எதுவுமற்ற தேர்தலில் போட்டியிடும் நிலைமை ஏற்படுமா என்பதும் கவனிக்க வேண்டியது. தமிழீழம், சமஷ்டி என்று பேசி இப்பொழுது 13ஆவது திருத்தத்தை நம்பும் நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்துவிட்டது.
ஒரு காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 13 பிளஸையே நம்பி அரசிற்கு ஆதரவு தெரிவித்தார். வடக்கில் அரசின் குரலாகவும் ஒலித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13 நம்பியமை என்பது ஜனநாயக அரசியலின் இயலாமைத் தனத்தின் வெளிப்பாடுகின்றது. அதேநேரம் 13ஐ மட்டுமே தருவேன் என்று மகிந்த ராஜபக்ஸ இந்த உலகத்திற்கு அளித்த வாக்கை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதை வெளிப்படுத்த உகந்த ஒரு சந்தர்ப்பமாகவும் கருத இயலும். ராஜபக்ஸவின் முகங்களை போதுமான அளவு உலகத்திற்கு காட்டியதும் ராஜபக்ச தீர்வு என்ற பெயரில் எதையும் தீர்வையும் நடைமுறைப்படுத்த போவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இந்தியாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைந்தது. அங்கு இந்திய அரசுடன் 13 இற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தைக் குறித்து முறையிட்டிருக்கிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தின் அரசியல் தீர்வே 13ஆவது திருத்தச் சட்டம். இந்த திருத்தச் சட்டத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்று இந்தியா சொன்னதாக கூட்டமைப்பு கூறுகிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மற்கொள்ளும் இலங்கை அரசின் நடவடிக்கை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்திருந்தது.
13பிளஸ் என்றுதானே ராஜபக்ஸ தம்மிடம் வாக்களித்தார் என்றும் சொன்னதை ராஜபக்ச நிறைவேற்றுவார் என்று நம்புவதாகவும் இந்திய அரசின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானதேசிகன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். 13ஐயும் இந்தியாவையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் வரலாறு முழுவதும் நிகழ்வதுபோலவே, இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியாவும் ஈழத் தமிழர்களை ஏமாற்றுகிறதா என்பதே இங்கு முக்கியமானது.
13 ஈழத்தை உருவாக்குமா?
13ஐ நடைமுறைப்படுத்தினால், வடக்கில் தேர்தல் நடத்தினால் காணி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால், தனி ஈழம் உருவாகிவிடும் என்று சிங்கள இனவாதிகள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள். 13 தேவை என்று இந்தியாவிடம் போனால் முள்ளிவாய்க்கால்தான் தீர்வு என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூட்டமைப்பை எச்சரிக்கின்றார். உண்மையில் அது தமிழர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையே. காணி அதிகாரமும் காவல்துறை அதிகாரமும் கொடுத்தால் புலிகள் உயிர்த்தெழுவார்கள் என்று கோத்தபாய சொல்லுகிறார்.
எஞ்சியிருக்கிற 13ஐ அழிப்பதும் அல்லது அதை சத்திர சிகிச்சை செய்து வெற்றுத் தீர்வாக்குவதுமே புலிகளை மீண்டும் இந்தத் தீவில் உயிர்த்தெழச் செய்யும்.
தமிழ் மக்கள் எதற்காக ஈழம் என்ற தனிநாட்டுத் தீர்வை நோக்கிச் சென்றார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுது தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுதே அவர்கள் தனிநாட்டுத் தீர்வுக்குச் சென்றார்கள். இலங்கை அரச தலைவர்களுடன்; பேசி எந்த உரிமையையும் பெற முடியாது என்ற பொழுதே தனிநாட்டுத் தீர்வுக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள். எனவே அதிகாரங்களை பகிர்வதும் ஜனநாயக உரிமைகளை வழங்குவதும் ஈழத்தை உருவாக்காது. அவற்றை மறுப்பதே ஈழத்தை உருவாக்கும் நிலமையை ஏற்படுத்தும்.
இலங்கைத் தீவில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடிய பின்னரும் முப்பது ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய பின்னரும் பேசித் தீர்க்க முடியாத நிலையில் ஜனநாயகம் மறுக்கப்படும் நிலையில் சம உரிமை மறுக்கப்படும் நிலையில் லட்சக்கணக்கான மக்களை பலியிட்ட பின்னரும் 13ம் அழிக்கப்படும் கையறு அரசியல் சூழலே தனிநாடுதான் தீர்வு என்ற முடிவை மறுபடியும் உருவாக்கப் போகிறது. அதை சிங்கள இனவாதிகளே உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
13இல் என்ன இருக்கிறது?
13இற்கான ஆதரவையும் எதிர்ப்பையும் வைத்து பார்க்கும் பொழுது 13இல் ஏதோ இருக்கிறது என்றே பலரும் நினைத்துக் கொள்ளுவார்கள். ஏதுவுமே இல்லாத 13 சிங்களப் பேரினவாத அரசு தனது இரண்டு அணியினரை வைத்து எதிர்ப்பையும் ஆதரவையும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. உண்மையில் 13ஆவது திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்கப் போவதில்லை. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுடன் கூடியதாக இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்பொழுது தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சில அபகரிப்பு அழிப்பு நடவடிக்கைகளை ஓளரளவு தடுக்க இயலும். அதை தொடர்ந்து நடத்த தடையாக அமையும் என்பதனாலே இனவாதிகள் 13 எதிர்க்கிறார்கள்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களற்ற தேர்தலை நடத்தினால் மக்கள் வாக்களிக்ககூடாது என்று மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு யோசேப்பு பேசியதற்காக மன்னார் ஆயருக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று அமைச்சர் ஹெகலிய குறிப்பிட்டிருக்கிறார். புலிகளின் தலைவர் அன்று மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததுபோல இன்று ஆயரும் தடுக்கிறார் என்று ஹெகலிய சொல்லுகிறார். 13ஐ கேட்டால் பிரபாகரன், காணி அதிகாரம் கேட்டால் பிரபாகரன், காவல்துறை அதிகாரம் கேட்டால் பிரபாகரன் என்று தமிழர்கள் தங்கள் உரிமையை கேட்டால் பிரபாகரன் என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. உண்மையில் தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயர் குரல் கொடுப்பதினாலேயே அவரைப் பிரபாகரன் போன்றவர் என்று அமச்சர் சொல்லியிருக்கிறார். மன்னார் ஆயர் அதிகாரமுள்ள மாகாணபையை வலியுத்துகிறார். ஆனால் பிரபாகரன் 13ஐயும் மாகாண சபையையும் நிராகரித்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் எதிர்கொண்ட வரலாற்றிற்கும் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் நடத்திய போராட்டத்திற்கும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொடுத்த விலைக்கும் தமிழப் போராளிகள் சிந்திய இரத்திற்கும் 13 தீர்வாகாது. 13 தீர்வாகவும் பாதுகாப்பாகவும் அமையாது என்பதற்கு 13ஐ இலகுவாக ஒரு நீர்ப் பாம்பைப்போல அடித்து வீசிவிடத் துடிக்கும் இனவாதிகளின் நடவடிக்கையே உணர்த்துகிறது. 13 ஈழத் தமிழர்களுக்கு தீர்வாகாது என்கிற பொழுதும் 13ஐயே சிங்கள உலகம் வழங்கத்தயாரில்லை என்கிற பொழுதும் பிரபாகரன் தமிழீழம்தான் தீர்வு என்று சொன்னதும் அதற்காகப் போராடியதிலும் என்ன தவறிருக்கிறது?
இலங்கையில் இருந்து - பிரியதர்சன்
Aucun commentaire:
Enregistrer un commentaire