கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் பற்றி பேசுவது இப்போதைக்கு பிரயோசனமற்றது. காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே என சுதந்திரக்கட்சி பிரமுகர் தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்தியிருந்தார். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் 'தடுப்பிலுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென்பதே எனது கோரிக்கையாகும். அதற்காக நான் நீண்டகாலமாக குரல் கொடுக்கின்றேன்.ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன்பதாக வாக்குமூலமளிக்கையினில் இது தொடர்பாக பிரஸ்தாபித்திருந்தேன். தற்போது வடக்கு தேர்தலில் போட்டியிடுகையிலும் அதே நிலைப்பாட்டடை கொண்டுள்ளேன்' என அவர் தெரிவித்தார். அவ்வேளை சரணடைந்து தகவல் அற்றிருக்கும் மூத்த மற்றும் முன்னாள் போராளிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் 'கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் பற்றி இப்போதைக்கு பேசுவது பிரயோசனமற்றது. காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே' என தெரிவித்தார்.
முன்னதாக அவர் பணியாற்றி வந்த தொலைக்காட்சி குழுமத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளிற்காக வெளியேறுவதாக அதன் பணிப்பாளர் எஸ்.குகநாதன் அறிவிப்பை விடுத்திருந்தார்.
இதே வேளை டக்ளஸ் தேவானந்தா பத்திரிகை ஆசிரியர்களிடையே இடம்பெற்ற சந்திப்பில் தானே முதலமைச்சர் வேட்பாளரென அறிவித்துள்ளாரேயென எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் அவ்வாறு முதலமைச்சர் வேட்பாளரென எவரும் இல்லையென கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire