இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று திங்கட்கிழமை காலை லேன்டிங் செய்தபோது, விபத்துக்கு உள்ளாகியது. விமானத்தை செலுத்திவந்த இந்திய விமானப்படை விமானி இந்த விபத்தில் உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளானது மிக்-21 பைசன் ரக விமானம். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உத்தர்லாய் விமானதளத்தில் விபத்து நடைபெற்றது. இந்த விமானத் தளத்தில் இருந்து பயிற்சி பறத்தலுக்காக இன்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் திரும்பி வந்து தரையிறங்கியபோதே விபத்து நடந்தது.
விமானத்தை செலுத்தியவர், பிளைட் லெப்டினென்ட் தரத்திலுள்ள விமானி. விபத்தினால் ஏற்பட்ட படுகாயங்களால், இவர் மரணமடைந்தார் என பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் எஸ்.டி.கோஸ்வாமி தெரிவித்தார்.
கடந்த மாதமும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இதே மிக்-21 ரக விமானம் ஒன்று விழுந்து நொருங்கியது. அப்போது விமானம் பறந்து கொண்டிருந்த காரணத்தால், விமானி எஜக்ட் பண்ணப்பட்டு பாரசூட் உதவியுடன் உயிர் தப்பினார். இன்றைய விபத்து, லேன்டிங் செய்தபோது ஏற்பட்டதால், விமானிக்கு அந்த அதிஷ்டம் வாய்க்கவில்லை.
இந்திய விமானப்படையில் உள்ள இவ்வகை விமானங்கள், மிகப் பழையவை. இந்திய விமானப்படையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாவனையில் உள்ள விமானங்கள் இவை. ரஷ்யத் தயாரிப்பு. ஆபரேட் பண்ணுவதற்கு மிகவும் கடுமையான ரகமான விமானங்கள் இவை.
இந்திய விமானப்படை இதுவரை சுமார் 900 மிக்-21 ரக விமானங்களை வெவ்வேறு காலகட்டங்களில் வாங்கியுள்ளது. அவற்றில் பாதி எண்ணிக்கையான விமானங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் விபத்துக்கு உள்ளாகி அழிந்து விட்டன.
இந்த மிக் விமானங்களையே வேறு ரக விமானங்கள் மூலம் மாற்றீடு செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது, பிரான்சில் இருந்து இலகு ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த விமானங்கள் முழுமையாக வந்து சேர 2018-19 ஆண்டு ஆகிவிடும்.
அதுவரை மிக் விமானங்கள் இந்திய விமானப்படையில் உபயோகத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்திய விமானப்படைக்கு இந்த ஆண்டு விபத்துக்குள்ளான 6-வது விமானம் இது!
Aucun commentaire:
Enregistrer un commentaire