தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா செல்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆஸ்திரேலியாவுக்குத் தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 17 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.23 ஆண்டுகள் இந்தியாவில் அகதிகளாக வாழ்வதாகவும், உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் சுதந்திரமாகவும் வசதியுடனும் வாழ்வதாகவும், இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புவதில்லை என்றும் கைதாகியுள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வந்து அகதிகளாக பல ஆண்டுகளாக வாழும் அவர்களின் பரிதாபகரமான வாழ்க்கை நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்று வசதியுடனும், சுதந்திரமாகவும் வாழ முடியுமென்றால், அவர்களின் நல்வாழ்க்கையில் நாம் குறுக்கிடாமல், ஆஸ்திரேலியா செல்வதற்கு மத்திய, மாநில அரசுகள் தம்மால் இயன்ற உதவியைச் செய்ய முன் வரவேண்டும்.
இதற்கு மாறாக அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைப்பதால் பயன் ஒன்றுமில்லை.
எனவே, அகதிகள் பிரச்னையில் மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு நல்ல முறையில் தீர்க்க அரசு முன்வர வேண்டும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது பல ஆண்டுகளாக தொடர்கதையாக நீடித்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கை அதிபர் ராஜபட்சவைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் விரைவான அரசியல் தீர்வு காண்பதற்கு, 13-வது அரசியல் சட்டத் திருத்தத்துக்கும் அப்பால், இந்திய அரசுக்கும், சர்வதேச சமுதாயத்துக்கும் அளித்த வாக்குறுதியினை இலங்கை பின்பற்றி அதிகாரப் பகிர்வு வழங்குவது அவசியம்.
இதை ராஜபட்சவிடம் சிவசங்கர் மேனன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்று நம்புகிறோம்.
இந்திய மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் தொடர்பாக ராஜபட்சவிடம் பேசப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் வன்முறையில் இறங்காமல் மனித நேய அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று இலங்கையால் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எந்த ஒப்பந்தத்தையும், உறுதிமொழியையும் இலங்கை காப்பாற்றவில்லை. சிவசங்கர் மேனனிடம் கொடுத்த வாக்குறுதியை எந்த அளவுக்குக் காப்பாற்றப் போகிறது என்பதுதான் பிரச்னை என்று அவர் கூறியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire