இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் அமைந்துள்ள ''புத்தகாயா'' பௌத்த வழிபாட்டிடத்தில் ஞாயிறன்று அதிகாலை 8 குண்டுகள் வெடித்துள்ளன.
அந்த பௌத்த ஆலய வளாகத்தில் உள்ள இரு கோயில்களில் தலா 4 குண்டுகள் வெடித்ததாக அங்கிருக்கும் இலங்கையைச் சேர்ந்த மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார். ஆயினும் இலங்கையர்கள் எவரும் இந்த குண்டு வெடிப்புக்களில் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.ஒரு திபெத்தியரும், ஒரு பர்மா மதகுருவும் இந்த தாக்குதலில் காயமடைந்திருக்கிறார்கள்.
குண்டு வெடிப்புக்கள் ஞாயிறன்று அதிகாலை இந்திய நேரப்படி 5.45 மணிக்கு நடந்ததாகவும், இப்படியான தாக்குதல்களுக்கான மிரட்டல்கள் ஏற்கனவே வந்திருந்ததாகவும், ஆயினும் இந்த தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று இதுவரை தெளிவாகவில்லை என்றும் இலங்கையைச் சேர்ந்த அந்த மதகுரு பிபிசிக்கு தெரிவித்தார்.
நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் நடத்தப்பட்டுள்ளதாக வர்ணிக்கப்படும் இந்தத் தாக்குதலில் எவரும் பலியாகவில்லை என்றும், அங்கிருக்கும் போதி மரத்துக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
.jpg)
.jpg)
புத்தகாயாவின் பாதுகாப்பு குறித்து தற்போது ஒரு முக்கிய கூட்டம் நடைபெறுவதாகவும் அந்த மதகுரு தெரிவித்துள்ளார்.இலங்கை, ஜப்பான், பர்மா ஆகிய இடங்களில் இருந்து வருடாந்தம் புத்தகாயாவுக்கு அதிகமாக யாத்ரிகர்கள் வருவது வழக்கம்.
அந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு தொடர்புகொண்டு நிலைமை குறித்து விசாரித்ததாகவும், தனது அதிர்ச்சியை அவர் வெளியிட்டதாகவும் அங்கிருக்கும் மதகுரு தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலை அடுத்து இந்தியாவில் சென்னை உட்பட 8 முக்கிய இடங்களில் பௌத்த வழிபாட்டிடங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire