samedi 13 juillet 2013

அமெரிக்க சிறப்புப்படை திருகோணமலையில் சிறிலங்கா படையினருடன் கூட்டுப்பயிற்சி


அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவு ஒன்று சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப் பிரிவுகளுடன் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2ம் நாள் திருகோணமலை டொக்யார்ட்டில் இந்தப் பயிற்சி ஆரம்பமாகியுள்ளது.

பிளாஸ் ஸ்ரைல் கூட்டுப் பயிற்சி என்ற பெயரில், ஆண்டு தோறும் நடத்தப்படும், போரல்லாத கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழேயே இந்தப் பயிற்சிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படையின் சிறப்புப் போர்முறைச் சமூகத்துடன், சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப்பிரிவுகள் இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சி வரும் 19ம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இதில், சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணி, அதிவேகத் தாக்குதல் படகு அணி, சுழியோடிகள், துரித மீட்பு அணி, என்பனவும், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்தி அணியும், சிறப்புப் படைப்பிரிவும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

அமெரிக்க கடற்படையின் சார்பில் சீல் எனப்படும் சிறப்புப் படைப்பிரிவு, சிறப்பு படகு அணி, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.

போர்ப்பயிற்சி அல்லாத இந்தப் பயிற்சி, போரில் காயமுற்றவர்களை தந்திரோபாயமாக கவனித்தல், நீரில் வேகமான மீட்பில் ஈடுபடுதல், உலங்குவானூர்தி மூலம் மீட்புகளை மேற்கொள்ளல் என்பனவற்றையும் உள்ளடக்கியுள்ளது.


Aucun commentaire:

Enregistrer un commentaire