இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநாட்டிலேயே ஜேவிபி புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
சோமவன்ச அமரசிங்கவே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இதுவரை இருந்துவந்தார்.
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முதலாவது அரசாங்கத்தை அமைப்பதில் ஜேவிபி முக்கிய பங்கு வகித்தது.
அதன்பின்னர் ஆளும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக மாறிய ஜேவிபி, பிற்காலங்களில் பல பிளவுகளைச் சந்தித்தது.
கட்சி உட்பூசலைத் தொடர்ந்து விமல் வீரவன்ச உள்ளிட்ட சில முன்னணி தலைவர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர்.
இறுதியாக அக்கட்சியின் தீவிர செயற்பாட்டுக் குழுவொன்று குமார் குணரட்னம் தலைமையில் விலகி முன்னிலை சோஸலிசக் கட்சி என்ற தனியான கட்சியை உருவாக்கியது.
கடந்த பல ஆண்டுகளாகவே ஜேவிபி தொடர் தேர்தல் தோல்விகளை சந்தித்துவந்த நிலையிலேயே கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம் என்ற கருத்துக்கள் கட்சிக்குள் நிலவின.
1960களின் நடுப்பகுதியில் ரோகண விஜயவீர தலைமையில் உருவான ஜேவிபி, 1971 மற்றும் 1987-89 காலப்பகுதிகளில் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டது.
அதன் பின்னர், 1994-ம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் அக்கட்சியினர் ஜனநாயக அரசியல் பாதையில் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire