மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய விதிகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அங்குள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மகளிருக்கென தனியான ஒதுக்கீடுகளே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.உணவகங்களில் உள்ள குடும்பத்தினருக்கான பகுதிகளிலும் பெண்களுக்கென தனி வழிகள் உண்டு. பெண்கள் வரும் இடங்களில் தனியாக வரும் ஆண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. அந்நாட்டின் உயர் மதகுரு இரு பாலினத்தவரும் கலந்து பழகுவதென்பது பெண் கற்பு மற்றும் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய தீவிரக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் அந்நாட்டின் ரியாத் நகரில் உள்ள கிங் சாத் பல்கலைக்கழகத்தில் மகளிருக்கான வளாகத்தில் கடந்த புதன்கிழமை அன்று அம்னா பவசீர் என்ற மாணவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவசரகாலத்தில் உதவும் ஆண் மருத்துவ ஊழியர்களை பெண்கள் வளாகத்தின் உள்ளே விடுவதற்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே அவர்கள் அனுமதி அளித்ததாகவும் அதற்குள் அந்தப் பெண் இறந்துவிட்டார் என்றும் பத்திரிகை தகவல் வெளிவந்தது.
ஆனால் அந்த வளாகத்தின் பொறுப்பாளரான பத்ரன்-அல்-ஓமர் உடனடியாக மருத்துவ உதவிகள் அழைக்கப்பட்டதாகவும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டதாகவும் கூறி இந்தத் தகவலை மறுத்துள்ளார். ஆயினும் இந்த சம்பவம் இணையதளத்தில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. பாலின பாகுபாடினால் அங்கு நடைமுறைப்படுத்தப்படும் கடுமையான விதிகளே இந்தப் பெண்ணின் மரணத்திற்குக் காரணமாக இருந்துள்ளது என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல் கடந்த 2002-ம் ஆண்டில் மெக்காவின் பெண்கள் பள்ளியில் ஒரு தீவிபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த பெண்கள் பர்தா அணிந்திருக்கவில்லை என்று அவர்களை வெளியே தப்பிக்கவிட மத நம்பிக்கை கொண்ட காவல்துறையினர் மறுத்ததால் அதில் 15 பெண்கள் மரணமடைந்ததுவும் அதன்பின்னர் பெண்கள் பள்ளி நிர்வாகம் கல்வி அமைச்சகத்தின் கீழ் வந்ததுவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் ஒரு விசாரணை கோரியுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் கலாச்சாரத்தையோ, குடும்பத்தையோ பற்றி யோசிக்காமல் விரைந்து முடிவெடுக்கும் நிர்வாகமே தேவை என்று அங்கு பணிபுரியும் பேராசிரியர் அசிசா யூசுப் குறிப்பிட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire