தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றம் தொடர்பில் முழுமையான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் வடமாகாணசபையின் உறுப்பினர் து.ரவிகரன். இது தொடர்பில் அவரால் வடமாகாணசபையில் கொண்டுவரப்பட்ட நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 6 ஆவது அமர்வு இன்று காலை 9.30 ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இவ்வமர்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்றைய அமர்வில் சபைக்கான நடைமுறை விதிகள் கோவை மன்றில் சமர்ப்பித்ததுடன் பிரேரணைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையினில் வடமாகாணசபையின் உறுப்பினர் து.ரவிகரன் தனது பிரேரணையினில் முல்லைதீவு மாவட்டத்தினில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் திட்டமிட்டு இலங்கை அரசினால் இன்று வரையினில் சுவீகரிக்கப்படுகின்றமையினை அம்பலப்படுத்தியிருந்தார்.அத்துடன் வவுனியா மற்றும் கிறிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளினில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பிலும் அவர் புள்ளி விபரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தார்.
இதனிடையே டிசெம்பர் மாதம் வெளியிடப்பட்ட குழு அறிவிப்பு சில மாற்றங்களுடன் மீண்டும் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் கட்சிசார்பில் அனைவரும் சபையில் கலந்து கொண்டுள்ளதுடன் எதிர்க்கட்சியில் அங்கஜன் இராமநாதன் மற்றும் ரஜீஸ் ஆகியோரும் சபைக்கு சமூகமளிக்கவில்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire