dimanche 2 février 2014

அமெரிக்காவில் தரையில் வீசி குழந்தை கொலை தமிழ்நாட்டை சேர்ந்த பெற்றோர் உள்பட 3 பேர் கைது


அமெரிக்காவில் தரையில் வீசி குழந்தையை கொலை செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த அதன் பெற்றோர் மற்றும் குழந்தையை கவனித்துக்கொள்ளும் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள்
அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 33). அவரது மனைவி தேன்மொழி (24). இவர்களது 19 மாத குழந்தை ஆதியன்.
பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றபின்னர் குழந்தையை கவனித்துக்கொள்ள கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை அமர்த்தி இருந்தனர். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான். கடந்த 16–ந் தேதி குழந்தையின் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
தரையில் மோதினார்
வீட்டில் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த கிஞ்ஜல் படேல், குழந்தையின் செயலை கண்டு கோபமடைந்தார். இதனால் ஆத்திரத்தில் குழந்தையை தரையில் வேகமாக வீசினார். இதில் குழந்தையின் தலை தரையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் குழந்தை கதறி அழுதது.
உடனே படேல், சிவகுமாருக்கு போன் மூலம் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். வீட்டுக்கு விரைந்து வந்த சிவகுமார், குழந்தையை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையின் மண்டை ஓட்டில் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்தனர்.
பெண் கைது
இதுகுறித்து டாக்டர்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.போலீசார் ஏற்கனவே இந்த வழக்கில் கிஞ்ஜல் படேலை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தையை தரையில் வீசி தாக்கியதை ஒப்புக்கொண்டார். கொலை நடந்த வீட்டையும் போலீசார் பூட்டுபோட்டு சீல் வைத்தனர்.
பெற்றோரும் கைது
இந்த நிலையில் போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு இந்த வழக்கு தொடர்பாக குழந்தையின் பெற்றோர் தேன்மொழியும், சிவகுமாரும் சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்களையும் இந்த வழக்கில் கைது செய்தனர். குழந்தைக்கு பலத்த காயம் ஏற்படும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire