பாலுமகேந்திரா கதைகளை இயல்பான பாணியில், கேமராக் கண்களுடன் சொன்ன கலைஞர் ஒளிப்பதிவாளர், இயக்குனர், கதாசிரியர், எடிட்டர் என பன்முகம் கொண்டவர். 1939 மே 20ம் தேதி, இலங்கையின் மட்டக்களப்பில் அமிர்தகழி என்ற ஊரில் பிறந்தார். இயற்பெயர் மகேந்திரா. அங்கு தான் வளர்ந்தார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்ததால், அவரது தந்தை ஒரு கேமராவை பரிசாக வழங்கினார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த இவர், லண்டன் பல்கலையில் பி.எஸ்சி., பட்டப் படிப்பு முடித்தார். பின் புனேயில் சினிமேட்டோகிராபி படிப்பில் சேர்ந்தார். தங்கப் பதக்கத்துடன் படிப்பை நிறைவு செய்தார்.தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளி பாலு மகேந்திரா மரணித்து விட்டாரா? -
நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது திரையுலகமும், அதற்கு
வெளியிலிருந்து அவரை நேசிக்கும் உள்ளங்களும்.
பாலு மகேந்திரா என்ன மரணத்துக்கு அப்பாற்பட்டவரா... அல்லது அவர் வயதுதான்
மரணம் நெருங்கியிருக்கக் கூடாத ஒன்றா?
பாலு மகேந்திரா... ஒரு சகாப்தத்தின் மரணம்!
இரண்டுமே இல்லைதான். அவர் உடல் நிலை, வயது காரணமாக அவருக்கு மரணம் எப்போது
வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை சில ஆண்டுகளாகவே பலரும்
உணர்ந்திருந்தார்கள்.
'பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி
இருக்கின்றதென்பது மெய்தானே..
பேதை மனிதனே உடம்பு என்பது
கனவுகள் வாங்கும் பைதானே!'
-என்ற பாடலைப் படமாக்கிய கலைஞன் அவர்தானே...
ஆனால் பாலு மகேந்திரா போன்றவர்களை அத்தனை சீக்கிரம் மரணம் தீண்டாத
மனிதர்கள் பட்டியலில் வைத்துவிட்டது அவரை, அவர் படைப்புகளை நேசித்த ரசிக
மனசு!
தமிழ் சினிமாவில் ரசனை மிகுந்த ஒரு இலக்கியவாதியாக திகழ்ந்தவர் அவர்.
சினிமாவைப் புரட்டி எடுக்கும் இலக்கிய விமர்சகக் கூட்டம் கூட, பாலு
மகேந்திரா என்றால் பாசத்தோடு அரவணைத்துக் கொள்ளும். காரணம், நிஜத்துக்கும்
சினிமாவுக்கும் பெரிய திரை போட்டுக் கொண்டதில்லை அவர்.
பாலு மகேந்திரா... ஒரு சகாப்தத்தின் மரணம்!
சினிமாவைப் படைக்கும் தன்னை ஒரு உத்தமன் என அவர் கூறிக் கொண்டதே இல்லை. சக
மனிதனின் அழுக்கும் பொறைமையும் காதலும் காமமும் வன்மமும் தனக்கும் உண்டு.
அது தன் படைப்பிலும் உண்டு என்பதை நேர்காணல்கள், மேடைகள், எழுத்துகள் என
எதிலும் மறைத்ததில்லை அந்த மாபெரும் படைப்பாளி!
பாலு மகேந்திரா படைத்த பெண் பாத்திரங்கள் மகத்தானவை. பெரும்பாலும் பெண்களை
மையப்படுத்தியே அவரது படைப்புகள் அமைந்திருக்கும். கோகிலாவாகட்டும் அழியாத
கோலங்களாகட்டும்.. அவரே அவமானமாகக் கருதிய நீங்கள் கேட்டவையாகட்டும்.
அனைத்திலும் பெண்ணே ஆதாரம்!
பாலு மகேந்திரா... ஒரு சகாப்தத்தின் மரணம்!
சினிமாவை பாலு மகேந்திரா அளவுக்கு நேசித்த இன்னொரு படைப்பாளியை இந்தத்
தலைமுறை இனி பார்க்க முடியுமா தெரியவில்லை. சினிமாவை அவர் வெறும்
வியாபாரமாகக் கருதவில்லை. செலுலாய்ட் வடிவிலான வரலாறாகத்தான் பார்த்தார்.
அதற்காகத்தான் தன் இறுதி மூச்சு வரை, திரைப்பட ஆவணக் காப்பகம் வேண்டும்
என்பதை தான் கால் வைத்த அத்தனை மேடைகளிலும் சொல்லி வந்தார் அந்த மனிதர்.
பாலு மகேந்திராவின் அத்தனைப் படங்களிலும் ஆதார ஸ்ருதியாகத் திகழ்வது
அன்பும்.. அந்த அன்புக்கு நேர்கிற பங்கமும்தான்! 'மறுபடியும்' போன்ற ஒரு
படைப்பை இப்போது பார்த்தாலும் கோடம்பாக்க படைப்பாளி ஒருவனின் நூறு சதவீத
வாழ்க்கையைப் பார்க்கலாம். அத்தனை நேர்த்தியாக இன்னொருவரால் இதைப் பதிவு
செய்வது சாத்தியமா என்பதும் சந்தேகம்தான்.
இலங்கையில் மட்டக்களப்பில் பிறந்த தமிழர் பாலு மகேந்திரா. ஆனால் இலங்கைப்
பிரச்சினை பற்றி எதையும் அவர் தன் படைப்புகளில் பதிவு செய்யவில்லையே என்ற
ஒரு கேள்வியை பல மேடைகளில் அவர் முன் வைத்திருக்கிறார்கள். அதற்கு பாலு
மகேந்திரா சொன்ன பதில்...
'பதிவு செய்ய வேண்டும் என்ற பேராவல் எனக்கும் உண்டு. ஆனால் அதிகபட்ச
நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய விடயமிது. வியாபாரத்தைத் தாண்டியது.
படைப்பாளிகள் தயார்தான். ஆனால் அப்படி ஒரு படத்தை தாங்கும் தயாரிப்பாளர்
எங்கே?' என்றார். அந்தக் கேள்விக்கு மட்டும் யாராலும் பதில் சொல்ல
முடியவில்லை!
ஒரு இயக்குநராக 35 ஆண்டுகள் பணியாற்றிய பாலு மகேந்திரா, 22 படங்களைத்தான்
இயக்கினார். அது ஒரு கனாகாலத்துக்குப் பிறகு அவரது அடுத்த படைப்பை வெளியிட
அவருக்கு எட்டு ஆண்டுகள் ஆகியது. காரணம், யாரையும் தேடிப் போய் எனக்கு படம்
கொடுங்கள் என கேட்கத் தயங்கிய அவரது சுயமரியாதை.
நிபுணத்துவம் பெற்றவர்கள் பெரும்பாலும் அந்த பாண்டித்யத்தை தன் அடுத்த
தலைமுறைக்குக் கடத்த நினைப்பதோ விரும்புவதோ அரிதினும் அரிது, குறிப்பாக
திரைத் துறையில்!
ஆனால் திரைக்கதையாக்கம், சினிமா ஆக்கத்தின் சூட்சுமத்தை தன் அடுத்த
தலைமுறைக்குக் கடத்துவதில் உறுதியாக இருந்தார் பாலு மகேந்திரா. அதற்காக
அவர் ஆரம்பித்ததுதான் சினிமா பட்டறை.
மிகக் குறைந்த - ஒரு டஜன் - மாணவர்கள் தனக்குப் போதும் என்பதில் தெளிவாக
இருந்த அவர், அவர்களிடம் ஒரு நாணயமான தொகையை மட்டும் கட்டணமாகப் பெற்றுக்
கொண்டு சினிமா சொல்லிக் கொடுத்தார்.
சொல்லிக் கொடுத்து சினிமா கற்பதா.. அது இயல்பானதில்லையே.. என்ற கேள்வியை
ஒருமுறை முன்வைத்தபோது, 'உண்மைதான்... சொல்லிக் கொடுத்து சினிமா
வருவதில்லை. ஆர்வம், படைப்புத் திறன் என்ற சின்ன பொறி இருக்க வேண்டும். அது
இருக்கும் பத்துப் பேரைத்தான் நான் தேர்வு செய்கிறேன். இது கைப்பிடித்து
எழுத வைக்கும் கலையல்ல. நான் ஒரு சின்ன கோடுதான் கிழிக்க முடியும்.
அவர்களின் படைப்புத் திறன் அந்த கோட்டை அழகிய ஓவியமாக பூர்த்தி செய்யும்,'
என்றார்.
இந்தத் தெளிவு இருந்ததால்தான், அவரிடம் பயின்றவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்
சினிமாவின் பிதாமகனாகத் திகழ்ந்தார்!
Aucun commentaire:
Enregistrer un commentaire