தண்டனை குறைக்கப்பட்ட கைதிகளுக்காக மகிழ்ச்சி அடைபவர்கள், ராஜீவ்காந்தி படுகொலையின்போது உயிர் இழந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரின் குடும்பங்கள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? என்று பலியான இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி கண்ணீர் மல்க கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுரு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
தற்போது ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் குறைக்கப்பட்டுள்ளது குறித்து மறைந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி பால சரஸ்வதி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–
என் கணவரும் பச்சை தமிழர் தான். காவல்துறையில் அப்பழுக்கற்ற வகையில் மிக துணிச்சலாக பணியாற்றிய அதிகாரி. மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது மரணமடைந்தார். அந்த நேரத்தில் நானும், எனது மகள் பபிதா தேவி, மகன் பிரவீன் ராஜேஷ் ஆகியோர் நிற்கதியாக நின்றோம். அப்போது என் மகள் பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்தாள். மகன் 10–ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். என் கணவருக்கு அப்போது வயது 44.
தூக்கு தண்டனை கைதிகளுக்காக முழக்கம் எழுப்பிய தலைவர்கள் எங்களுக்கு ஆறுதல் கூற வரவில்லை. முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில்தான் எனது கணவருக்கு முழு பென்சன் அளித்து உத்தரவிடப்பட்டது. அதன் காரணமாகத்தான் எங்கள் குடும்பம் தத்தளிக்காமல் வாழ்க்கை நடத்த முடிந்தது.
என்ன பதில் கூறப்போகிறார்கள்?
இப்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினரும் இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த என் கணவர் மற்றும் அவரைப்போன்ற மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் என்ன பதிலை கூறப்போகிறார்கள்?.
ராஜீவ்காந்தியோடு உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு கருணை உதவிகளை செய்துள்ளது. மத்திய அரசாங்கம் இதுவரை திரும்பி பார்க்கவில்லை. இனிமேலாவது எங்கள் குடும்பத்தை போன்ற மற்றவர்களுக்கும் உதவிகளை செய்ய நினைக்க முன்வருவார்களா?.
இவ்வாறு பால சரஸ்வதி கூறினார்.
முகமது இக்பால் எஸ்.பி,
ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.முகமது இக்பால் உட்பட 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மறைந்த எஸ்.பி.முகமது இக்பாலின் மகன் ஜாவீத் இக்பால் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:–
நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களின் தண்டனையை ரத்து செய்தது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும். அவருடன் கொல்லப்பட்ட 14 பேர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி வழங்கப்போகிறார்கள். நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் தான். அதுவும் தமிழர்கள் தானே. சிறையில் இருந்தவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு சில அரசியல் கட்சியினர், எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? வரும் காலங்களிலாவது நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும் குரல் கொடுக்க அரசியல் கட்சியினர் தயங்க கூடாது. அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கையை அரசியல் கட்சிகள் பெற முடியும். இந்த தீர்ப்பை கேட்ட என்னுடைய வயதான தாயார் இன்று (நேற்று) இதை நினைத்து மேலும் வருந்தும் சூழல் தான் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire