ஆட்கள் இல்லாத ஆனையிறவில் அமைக்கப்படுகிறது ஒரு பென்னாம்பெரிய புகையிரத நிலையம்.
எதற்காக இந்த புகையிரத நிலையம்?
யாருக்காக இதை இப்படிக் கனங்காத்திரமாக கட்டுகிறார்கள்?
சத்தியமா எனக்குத் தெரியாது? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.
இந்தப் புகையிரத நிலையத்தைக் கட்டுவது கல்வி அமைச்சு என்று தகவல். இதற்காக அது நாடுமுழுவதிலும் இருந்து பாடகாலைப் பிள்ளைகளிடம் காசு சேர்த்திருக்கிறது.
முன்னர் மன்னர்களும் மந்திரிகளும் குளங்களையும் கோயில்களையும்தான் கட்டினார்கள். இப்ப புகையிரத நிலையங்களையும் கட்டுகிறார்கள்.
சனங்களுக்குத் தேவை என்றால் யாரும் எதையும் செய்யலாம். எதெண்டாலும் நன்றாக நடந்தால் சரி.
முன்பு ஒரு காலம் ஆனையிறவில் உப்பளம் இருந்தது. உப்பளத்திற்காக அலுவலகமும் இருந்தது. அங்கே வேலை செய்யும் ஆட்களும் இருந்தார்கள். உப்பளைத்தைச் சுற்றி ஊர்மனையும் இருந்தது. சந்தையும், பள்ளிக்கூடமும், கடைதெருக்களும் இருந்தன.இப்பொழுது ஒன்றுமேயில்லை.
ஆக மிஞ்சியிருப்பது, புலிகளால் கைவிடப்பட்ட இராணுவ கனரக வண்டி ஒன்றும்அந்த வண்டியை தாக்கிச் சேதமாக்கியபொழுது பலியாகிய படைச்சிப்பாயின் நினைவுச் சிலை ஒன்றுமே.
இதைவிட வேறொன்றுமே அங்கே இல்லை.
இந்தச் சீரில்தான் புகையிரத நிலையத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக அங்கே கட்டுகிறார்கள்.
உண்மையில் அங்;கே அவசரமாகச் செய்திருக்க வேண்டியது, உப்பளத்தை சீர்ப்படுத்தி மீண்டும் இயங்க வைப்பதையே.
உப்பளம் இயங்கினால் உள்ளூர் மூலவளம் ஒன்று உற்பத்திப் பெறுமானத்தைப் பெற்றிருக்கும்.
ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியிருக்கும்.
உப்பளம் இயங்கினால் ஆனையிறவு முழுவதும் சனப்புழக்கம் ஏற்பட்டிருக்கும். கடையும் தெரும் ஊரும் சிறந்திருக்கும்.
இதெல்லாம் நடக்கும் போதே புகையிரத நிலையத்திற்கும் அர்த்தம் இருக்கும்.
ஆனால், இதைப்பற்றியெல்லாம் யாருக்குக் கவலை?
உலக நாடுகள் காசை அள்ளிக் கடனாகக் கொட்டுகின்றன. போருக்குப் பிந்திய இலங்கையைக் கட்டியெழுப்புங்கள் என்று வட்டியோடு கொடுக்கும் பணத்தை இப்படித் தண்ணியாகச் செலவழிக்கிறார்கள்.
அவசியமாகச் செய்யவேண்டிய ஆயிரம் வேலைகள் இருக்கும்போது இந்த மாதிரித் தேவையில்லாக் காரியங்கள் பலவும் நடக்கின்றன.
அபிவிருத்தி என்பது அவசியமான ஒன்று. வாழ்வின் அடிப்படைக்கு அது மூலாதாரம். ஆனால் அவை திட்டமிட்டு, பொருத்தப்பாட்டுடன் செய்யும்போதே அபிவிருத்திக்கான அர்த்தம் கிட்டும். அதுவே முறையான அபிவிருத்தி ஆகும். மக்களுக்குத் தேவையான, அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப அவசியமான திட்டங்களுக்காகத் தாராளமாக செலவழிக்கலாம். அதனால்தான் சனங்களுக்கும் நன்மை, நாட்டுக்கும் நன்மை.
ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் இயங்க வையுங்கள் என்று ஆண்டு நான்கிற்கும் மேலாக மக்கள் வேண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கோடையிலும் உப்பு விளைந்து ஒவ்வொரு மாரியிலும் வீணாய்க் கரைந்து போகிறது.
மக்களின் அபிலாசையும் இப்படி உப்புக் கரைவது போல கரைந்துதான் போகுமா?
இன்னும் ஒரு கேள்வி, ஆட்களில்லாத ஊரில் புகையிரதம் நிற்குமா? அப்படி நின்றால் அதில் ஏறுவது யார்? இறங்குவது யார்?
நாளைக்கு இந்தக் கேள்விகளை காசு சேர்த்துக் கொடுத்த பிள்ளைகள் கேட்கத்தான் போகின்றன. அரசாங்கத்தின் விசித்திரத்தை அவர்கள் அறியத்தான் போகிறார்கள். .... வடபுலத்தான்
Aucun commentaire:
Enregistrer un commentaire