இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 35 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து 2 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக மண்டபத்தில் உள்ள தமிழக கடலோர காவல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, மண்டபம் கடலோர காவல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் பாம்பன் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான நிலையில் ரயிலில் ஏற காத்திருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் மீனவர்கள் என்றும், ராமேஸ்வரம் புதுரோடு பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் காளிதாஸ் எனவும் தெரிய வந்திருக்கிறது.
இருவரிடமும் இருந்து சுமார் 35 கிலோ எடை கொண்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்து வந்த கடத்தல் நபர்கள், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இருவரிடமும் தங்க கட்டிகளை கொடுத்து மதுரையில் ஒரு நபரிடம் ஒப்படைக்க கூறியிருக்கின்றனர். இதற்கு கூலியாக 60 ஆயிரம் ரூபாய் பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire