யாழ். நகரத்தினுள் உள்ள ஸ்ரீதர் தியேட்டரை கடந்த 16 வருடங்களாக வாடகை கூடத்தராமல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கையகப் படுத்தி வைத்திருக்கிறார் என்று திரையரங்கின் உரிமையாளரான ரட்ண சபாபதி மகேந்திர ரவிராஜ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து வரும் மகேந்திர ரவிராஜ், அங்குள்ள "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகைக்கு இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அந்தப் பத்திரிகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டதற்கு, மகேந்திர ரவிராஜ்தான் திரையரங்கின் உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்தினால் தான் இந்த ஆண்டு இறுதிக்குள் அதனைக் கையளித்துவிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்குப் பதிலளித்திருக்கும் ரவிராஜோ, "இவர் இப்படித்தான் கடந்த வருடமும் சொன்னார், அதற்கு முந்திய வருடமும் சொன்னார். நான்தான் திரையரங்கின் உரிமையாளர் என்பது முழுக் குடாநாட்டுக்குமே தெரியும். அது அமைச்சருக்கும் நன்கு தெரியும்'' என்று கூறியிருக்கிறார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கும் "தி ஆஸ்திரேலியன்', கடும் அச்சமூட்டக்கூடிய அரசியல்வாதியும் அரச ஆதரவு துணைப் படையின் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடமே திரையரங்கம் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. அத்துடன், அவர் அமைச்சராக இருக்கின்றபோதும் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கு ஒன்றில் இந்தியாவில் தேடப்பட்டு வருகின்றவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
மகேந்திர ரவிராஜுக்கு இப்போது வயது 66. அவரது குடும்பத்தின் சொத்தாக யாழ்ப்பாணத்தில் எஞ்சி இருப்பது இந்தத் திரை அரங்கு மட்டுமே என்று அவர் கூறுகின்றார்.
தனது சொத்துக் குறித்து மகேந்திர ரவிராஜ் "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகைக்குத் தெரிவித்திருப்பதாவது: எனது சொத்தை மீட்டெடுப்பதற்காக ஒரு சட்டத்தரணியை அமர்த்தித் தருமாறு எனது நண்பர்கள் பலரிடம் நான் கேட்டேன். ஆனால் ஒருவரும் அவருக்கு எதிராக நிற்கத் தயாராக இல்லை. ஏனெனில் அவரைப் பற்றி அவ்வளவு பயம் அங்கு இருக்கிறது.
அவரை அங்கிருந்து (திரையரங்கம்) வெளியேற்றுவது கடினம் என்றும் அந்த வழக்கு வருடக்கணக்கில் இழுத்துச் செல்லப்படும் என்றும் என் நண்பர்கள் கூறுகிறார்கள்.
1996ஆம் ஆண்டு திரையரங்கத்தை தன்வசப்படுத்த முன்னர் டக்ளஸ் என்னுடன் பேசினார். அந்தக் காலத்தில் கடுமையான சண்டை எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருந்தது.
அப்போது நான் சொன்னேன், திரையரங்கத்தை நான் மீண்டும் திறக்கப் போகிறேன் என்றும் அந்தச் சமயத்தில் நீங்கள் வெளியேற முடியுமா என்று கேட்டேன். "எப்போது நீங்கள் திரையரங்கைத் திறப்பதாக இருந்தாலும் நான் விட்டுவிடுகிறேன்'' என்று அவர் சொன்னார். அதனால் நான் சம்மதித்தேன்.
அத்துடன் எப்போது திறக்கப் போகிறேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றும் கூறினேன். ஆனால் அதற்குப் பின்னர் பல நூறு தடவைகள் நான் அவருக்கு (டக்ளஸ்) தொலைபேசி அழைப்புக்களை எடுத்தேன். எண்ணற்ற கடிதங்களை அனுப்பினேன். எதற்கும் பதிலில்லை.
இது பற்றி நான் எல்லோருக்கும் எழுதினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்த விடயத்தில் நீதி எங்கே போயிற்று?
இதுபோன்ற பிரச்சினைகளுடன் நிறையப் பேர் இருக்கிறார்கள். நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஏனெனில் என்னுடைய வாழ்க்கை பின்னர் ஆபத்தில் போய் முடிந்துவிடலாம்.
இனிமேலும் என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது:
நான் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்குப் பொறுப்பானவர். மகேந்திர ரவிராஜ் அண்மையில் என்னுடன் பேசினார். இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்கை விடுவதாக நான் சொன்னேன். ஆனாலும் இதுவரைக்கும் திரையரங்கின் உரிமை உறுதிப்படுத்தப்படவில்லை.
சரியான உரிமையாளர் தெளிவுபடுத்தப்பட்டால் அதனைக் கையளிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி நடந்தால் இந்த வருட இறுதிக்குள் நாம் கையளித்துவிடுவோம்.
டக்ளஸின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்த திரையரங்கு உரிமையாளர், "இந்த வருட இறுதியில் வெளியேறுவதாக டக்ளஸ் சொல்கிறார். ஆனால் அவர் இதனைத்தான் கடந்த வருடமும் அதற்கு முன்னைய வருடமும் சொன்னார். 1996இல் அவர் என்னிடம் பேசிவிட்டுத்தான் திரையரங்கில் குடிபுகுந்தார்'' என்று கூறியிருக்கிறார்.
திரையரங்குக்கான வாடகையை தான் மகேந்திர ரவிராஜின் கூட்டாளி ஒருவருக்குக் கொடுத்தார் என்று டக்ளஸ் கூறுகின்ற போதும் அப்படி ஒருவர் கிடையவே கிடையாது என்று மகேந்திர ரவிராஜ் தெரிவித்திருக்கிறார் என்றும் "தி ஆஸ்திரேலியன்' தெரிவித்திருக்கிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire